Share on Social Media


கோவை:கோவையில் உள்ள குளங்களில், அவசரகதியில் பணி நடக்கிறது; நீர் நிலைகளை காப்பாற்றுங்கள். திட்டத்தில் மாற்றம் கொண்டு வாருங்கள் எனக்கூறி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, ‘டுவிட்’ செய்திருக்கின்றனர்.
வறட்சி காலத்திலும், கோவையில் உள்ள குளங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்றால், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணம்.தண்ணீரின்றி குளங்கள் வறண்டிருந்த சமயத்தில், ஆர்வத்தோடு களமிறங்கி, சுத்தம் செய்து, துார்வாரியதோடு, கரையை பலப்படுத்தி, நீர் நிலைகளை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
ரூ.230 கோடியில் பணி!இக்குளங்கள், நொய்யல் ஆறு மற்றும் அணைக்கட்டுகளை சீரமைத்து, நவீனப்படுத்துவதாக கூறி, 230 கோடி ரூபாயில், பொதுப்பணித்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இப்பணியை, ஆரம்பத்தில் இருந்தே பொதுப்பணித்துறையினர், தங்கள் இஷ்டத்துக்குச் செய்து வருகின்றனர்.திட்டத்தில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமென, சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எந்தெந்த குளத்தில் என்னென்ன பணிகள் செய்யப்படுகின்றன, இனி, என்ன செய்யப் போகிறீர்கள் என யார் கேட்டாலும் பொதுப்பணித்துறையினர் தெளிவாக சொல்வதில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் கூறும் ஆலோசனையையும், செவி கொடுத்து கேட்பதில்லை.இதுதொடர்பாக, கலெக்டர் சமீரனை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நேரில் சந்தித்து, முறையிட்டனர். எவ்வித மேல்நடவடிக்கை எடுக்காததால், தரமற்ற பணிகள் தொடர்கின்றன.
ஒதுக்கிய நிதியை செலவழிக்க வேண்டுமென்கிற நோக்கத்தில், அவசர அவசரமாக வேலைகள் செய்யப்படுகின்றன.வெள்ளலுார் குளக்கரையை பலப்படுத்தாமல், இலகு மண்ணாக இருக்கும் சமயத்திலேயே, கான்கிரீட் கற்கள் பதிக்கப்படுகின்றன. அக்கற்களும் தரமற்றவையாக, விரிசலுடன் காணப்படுகின்றன.அவசரகதியில் பணி நடந்ததால், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நேற்று பணிகள் நிறுத்தப்பட்டன.
இப்பிரச்னையை, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், நேற்று ‘டுவிட்’டரில் பதிவு செய்திருப்பதோடு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, ஆட்சேபனைகளை விரைந்து சரி செய்து, நீர் நிலைகளையும் அதன் சூழலையும் காப்பாற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.
இப்பதிவை, முதல்வர் ஸ்டாலின், நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோவை எம்.பி., நடராஜன், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், எம்.எல்.ஏ., உதயநிதி மற்றும் தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோருக்கு, ‘டுவிட்’ செய்திருக்கின்றனர்.
பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!
என்னென்ன செய்ய வேண்டும்?குளத்தை துார் வாரி, கரையை பலப்படுத்த வேண்டும். நொய்யல் ஆற்றின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வழித்தடத்தை மீட்க வேண்டும். புதர் மண்டியிருக்கும் இடங்களை துார்வாரி, தங்கு தடையின்றி, தண்ணீர் செல்ல வழியேற்படுத்த வேண்டும். அணைக்கட்டுகள், மதகுகளை சீரமைக்க வேண்டும். பல்லுயிர் பெருக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், குளக்கரையில் கான்கிரீட் கட்டுமானங்கள் தொடர்வதை தவிர்த்து, கருங்கற்கள் பதிக்க வேண்டும்,

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *