Share on Social Media

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் உச்சத்தைத் தொட்டிருக்கிறோம். இந்நிலையில் கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாவதும் மரணமடையும் செய்திகளும் நம்மை துன்பத்துக்குள்ளாக்குகின்றன.

சமீபத்தில் மதுரை, திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களைச் சேர்ந்த இரு பெண் மருத்துவர்கள், கர்ப்பிணிகளாக இருந்த நிலையில் கொரோனா தொற்றை அடைந்து அதன் தீவிரத்தன்மை காரணமாக மரணமடைந்துள்ளனர்.

ஒரு நாட்டின் பொது சுகாதாரத்துறையின் தரத்தை அளவிட முக்கியமான குறியீடாக இருப்பது தாய் – சேய் மரண விகிதங்கள்.

கர்ப்பிணிகள்

அதிலும் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போதும், பிரசவத்தின்போதும், பிரசவித்த பின் ஆறு வாரங்களுக்குள்ளும் மரணமடைவதைத் தடுக்கவே நமது பொது சுகாதார இயந்திரம் சுற்றிச் சுழன்று வேலை செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கட்டமைப்பை சிறப்பாகக் கட்டமைத்து முன்னெடுப்பதால் தாய், சேய் மரண விகிதங்கள் சிறப்பான அளவில் குறைந்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று மிகப்பெரும் சவாலாக நமக்கு முன் இன்று உருவெடுத்துள்ளது. அதிலும், முன்களப் பணியாளர்களாகக் கர்ப்பிணிகள் பணிபுரியும்போது அவர்கள் தொற்றை அடைந்தால் பல்வேறு சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் உள்ளாகிறார்கள்.

உலகெங்கிலும் கடந்த 2020-ம் வருடம் 11,400 கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 77 ஆய்வுகள்.

அதில் உணரப்பட்ட உண்மை யாதெனில், கொரோனா தொற்றடையும் கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பிணி அல்லாத பெண்களைக் காட்டிலும் 62% ஐசியுவில் சேருமளவு நோய் முற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும் நிலையும், கர்ப்பிணி அல்லாத பெண்களைக் காட்டிலும் 88% அதிகமாகிறது எனும் ஆய்வு முடிவு நம்மை திடுக்கிடச்செய்கிறது.

பெருந்தொற்றுக் காலத்தில், கர்ப்பிணிகளின் இதுபோன்ற மருத்துவ நிலைகளைக் கருத்தில் கொண்டு விழுப்புரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் கர்ப்பிணியாக உள்ள பெண் காவலர்களுக்கு, இந்தக் கொரோனா காலத்தில் சிறப்பு விடுப்பு வழங்கியிருப்பது வரவேற்க வேண்டிய நடவடிக்கை.

woman 1284353 640 Tamil News Spot
Pregnant lady

இதே முன்னுதாரணத்தைக் கடைப்பிடித்து சுகாதாரத்துறையில் பணிபுரியும் கர்ப்பிணி மருத்துவர்கள், கர்ப்பிணி செவிலியர்கள், கர்ப்பிணி கிராம சுகாதார செவிலியர்கள், கர்ப்பிணி தூய்மைப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்றின் இந்த இரண்டாம் அலை ஓயுமட்டும் சிறப்பு விடுப்பு அளிப்பது சிறந்த முடிவாக இருக்கும். மேலும், கொரோனா வேலைகளில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறைகளில் உள்ள பெண்களும், அவர்களின் கர்ப்பகாலமாக இது இருக்கும்பட்சத்தில் சிறப்பு விடுப்பு அளிக்கலாம்.

கர்ப்பிணிகள் தொற்றை அடையும்போது தீவிர நிலைக்குச் சென்று மரணமடைவதைத் தடுக்க, இந்த நடவடிக்கை கைகொடுக்கும்.

எனவே, முன்களப் பணியாளர்களில் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நோய்த்தொற்று வீரியமெடுத்துப் பரவும் இந்தச் சூழலில், விடுப்பு வழங்குவது சிறப்பான முடிவாக இருக்கும்.

தமிழக பொது சுகாதாரத்துறையில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அலை காலந்தொட்டே கொரோனா முன்களப்பணியில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் அன்னைகளுக்கு விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு தொற்றுப் பரவல் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ள கன்ட்ரோல் ரூம், டெலி மெடிசின் போன்றவற்றில் ஈடுபடுத்துமாறும் பொது சுகாதாரத்துறை இயக்குநரின் ஆணை உள்ளது.

609c26b52d654 Tamil News Spot
டாக்டர்
ஃபரூக் அப்துல்லா

சேலம், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரும் இதே ஆணையை அவரது கல்லூரியில் பிறப்பித்ததையும் குறிப்பிடுகிறேன். இவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் சுகாதார கட்டமைப்புகளிலும், காவல்துறை, வருவாய்த்துறை, அஞ்சல்துறை, ஊடகத்துறை, கல்வித்துறை என இன்னும் ஏனைய முன்களத்தில் நின்று போராடும் துறையில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு இந்த கொரோனா பெருந்தொற்று தீவிரம் குறையுமட்டும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுப்பு அளித்திட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இனியொரு முன்களப்பணியாளர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் மரணமடைவதை நாம் தடுத்திட வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *