Share on Social Media


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த மக்களுக்கு தடுப்பூசிகளின் மூலம் ஓரளவு விடியல் வந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்புவரை கொரோனா தொற்றின் மூன்றாவது அலை குறித்த அச்சத்தில் இருந்த மக்கள், மெள்ள மெள்ள அதிலிருந்து வெளியே வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

தசரா, தீபாவளி என வரிசையாகத் தொடர்ந்த பண்டிகைகள், அவற்றுக்காகக் கூடிய மக்கள் கூட்டம் போன்றவற்றின் விளைவாக அடுத்தடுத்த நாள்களில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப்போனது. ஆனால், அதே நேரம், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மீண்டும் கொரோனா பயத்தைத் தூண்டியிருக்கிறது.

பூங்குழலி

டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி, 2022, பிப்ரவரிக்குள் இந்தியாவில் மூன்றாவது அலை வரலாம் என்ற கணிப்புகள் எழுந்துள்ளன. இந்தியாவில் கட்டாயம் மூன்றாவது அலை வருமா… வந்தால் அதன் தாக்கம் எப்படியிருக்கும் என்று சென்னையைச் சேர்ந்த, தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலியிடம் பேசினோம்.

“ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கோவிட் தொற்றுப் பரவல் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அந்நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸும் போடத் தொடங்கியிருக் கிறார்கள்.

இதன் பின்புலத்தில்தான் நாம் இந்தச் செய்தியைப் பார்க்க வேண்டும். இந்த நாடுகளில் கோவிட் அலைகள் உருவானதைத் தொடர்ந்துதான் இந்தியாவில் நாம் முதல் மற்றும் இரண்டாம் அலைகளை எதிர்கொண்டோம். எனவே, இப்போது மீண்டும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கோவிட் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து இந்தியாவிலும் மூன்றாம் அலைக்கு வாய்ப்பிருக்கிறதா என்ற அச்சம் மக்களிடம் கிளம்பியிருக்கிறது.

ஏற்கெனவே மூன்றாவது அலை குறித்த அச்சத்தில் இருந்து, இப்போதுதான் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறோம். சில மாநிலங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தொற்று கட்டுக்குள் வந்திருக்கிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தொற்று அதிகரிப்பதற்கு சில காரணங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

AP21112232217787 Tamil News Spot
India Covid 19 Outbreak

Also Read: கொரோனா: 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 3வது பூஸ்டர் டோஸ் தேவையா?

தடுப்பூசி போடப்பட்டாலும் அதன் செயல்திறன் குறையத் தொடங்கியதை முதல் காரணமாகச் சொல்கிறார்கள். ஏறக்குறைய 10 மாதங்களைக் கடந்துவிட்டதால் தடுப்பூசி ஏற்படுத்திய பாதுகாப்பு குறையலாம் என்கிறார்கள். சில நாடுகளில் குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் தடுப்பூசிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களையே தொற்று பாதிக்கிறது. அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவலாம்.

அடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், உருமாறிய டெல்டா வைரஸின் தீவிரமும்கூட காரணங்களாக இருக்கலாம். பூஸ்டர் டோஸ் போட ஆரம்பித்திருப்பதால் அங்கேயும் தொற்றுகள் குறையலாம் என்ற கருத்தும் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ மனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா சொன்னது போல, இந்தியாவைப் பொறுத்தவரை, அறிகுறிகளற்ற பாதிப்பு நிலையில் பலருக்கும் கோவிட் தொற்று வந்து குணமாகியிருக்க வாய்ப்பு உண்டு.

தொற்று வந்ததால் ஏற்படுவது இயற்கையான எதிர்ப்புசக்தி. தடுப்பூசி போடுவதால் ஏற்படுவது தூண்டப்பட்ட எதிர்ப்புசக்தி. முதலில் செய்யப்பட்ட `சீரோ ப்ரிவேலன்ஸ்’ சர்வேயில் பெருநகரங்களில் வெறும் 20 சதவிகித மக்களுக்கு மட்டும்தான் எதிர்ப்பு சக்தி இருந்தது தெரிந்தது. சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் ஏறக்குறைய 80 சதவிகித மக்களுக்கு அந்த எதிர்ப்பு சக்தி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் சராசரியாக 63 சதவிகித மக்களுக்கு இயற்கையான எதிர்ப்பாற்றல் இருக்கிறது. தவிர 80 சதவிகித மக்களுக்கு ஒரு தவணையாவது தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதன்மூலம் தூண்டப்பட்ட எதிர்ப்புசக்தியும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் இரண்டுவகையான பாதுகாப்பு நமக்கு இருக்கிறது.

அடுத்து குளிர்காலம் வரவிருக்கிறது. குளிர்காலத்தில் எந்தத் தொற்றும் சற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸுக்கும் அது பொருந்தும். கொரோனா வைரஸானது உருமாறிக்கொண்டே வருகிறது. ஒருவேளை அது அதிதீவிரமாக உருமாறி வந்தால் அதன் பாதிப்பு எப்படியிருக்கும் என்று தெரியாது.

AP21286718811513 Tamil News Spot
Mask

ஒருவேளை இன்னோர் அலை வந்தாலும் அது முந்தைய இரண்டு அலைகளில் ஏற்படுத்திய அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். பரிசோதனைகளும் சிகிச்சைகளும் எளிதாகியிருக்கின்றன. மோனோகுளோனல் ஆன்டிபாடி உள்ளிட்ட மருந்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன. எனவே, நோய் குறித்த பெரிய பயம் தேவையில்லை.

ஏற்கெனவே நமக்கு இருக்கும் சீரோ பாசிட்டிவிட்டி, தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தொற்று குறித்த விழிப்புணர்வு போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் அதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும். ஆனால், அதற்காக கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தக் கூடாது. எப்போதும்போல முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளி, கைகளின் சுத்தம் பேணுதல் போன்றவற்றைப் பின்பற்றியே ஆக வேண்டும்.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *