Share on Social Media

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இரண்டு அணிகளும் 1-1 என சமநிலையில் இருப்பதால் விறுவிறுப்பான போட்டியாக இது அமையப்போகிறது.

லார்ட்ஸில் ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுவிட்டு அடுத்ததாக லீட்ஸில் ஒரு மோசமான இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. அதிலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அடிலெய்ட் டெஸ்ட்டின் 36 ஆல் அவுட் நிகழ்வை நியாபகப்படுத்தி பயமுறுத்தியிருந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஏறக்குறைய இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள்தான் ஆட்டம் முழுமையாக இருந்தது. ஆனால், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக மீண்டெழுந்து மிரட்டியது.

சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகி மொத்த பாரத்தையும் ஜோ ரூட் மீதே ஏற்றி வைக்கும் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் கடந்த போட்டியில் பட்டையை கிளப்பியது. பர்ன்ஸ், ஹமீத், மலான் மூவருமே அரைசதத்தை கடந்திருந்தனர். ஜோ ரூட்டும் ஒயிட்பால் மோடில் ஆடி துவம்சம் செய்திருந்தார்.

ENG VS IND ஜோ ரூட்

பௌலிங்கிலும் ஆண்டர்சனுக்கு உதவ பிராட் இல்லை, மார்க்வுட் இல்லை என ஏகப்பட்ட பின்னடைவு. ஆனால், பௌலிங்கிலும் இந்தியாவை 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி அசத்தியிருந்தனர். இந்த சூழலில் இங்கிலாந்தை பார்க்கும் போது இந்த தொடர் இங்கிலாந்தின் கைக்குள் இருப்பது போலவே தோன்றும். ஆனால், இங்கிலாந்தும் கொஞ்சம் தடுமாறிப்போய்தான் இருக்கிறது. இங்கிலாந்து வீரர்களிடம் இருந்தும் ஒரு சீரான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுவதில்லை. லீட்ஸில் ஆடிய ஆட்டத்தை ஓவலிலும் ஆடுவார்களா என்பது சந்தேகமே!

கடந்த போட்டியில் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே இந்திய அணி கடுமையாக சொதப்பியிருந்தது. ஓப்பனிங்கில் பெரிதாக எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு ரோஹித்தும் ராகுலும் ஆடி வருகின்றனர். சில நேரங்களில் நல்ல தொடக்கம் கிடைக்கிறது. ஆனால், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றுவதில் தடுமாறுகின்றனர். இதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நம்பர் 3-ல் புஜாரா அவுட் ஆஃப் ஃபார்மிலிருந்து மீண்டு வர தொடங்கியிருக்கிறார். அணியின் தேவையை உணர்ந்து தன்னுடைய அணுகுமுறையை தகவமைத்து கொள்ள முயல்கிறார்.

கடந்த போட்டியில் அவர் அடித்திருந்த 91 ரன்கள் இதற்கு ஒரு உதாரணம். அதே போன்றே தொடர்ந்து சீராக ஆடியாக வேண்டும்.

kohli 2 Tamil News Spot
ரஹானே – கோலி ஜோடி

நம்பர் 4 மற்றும் 5-ல் கேப்டன் விராட் கோலியும் ரஹானேவும் களமிறங்குகின்றனர். இருவரும் ஃபார்மிலேயே இல்லை. விராட் கோலி 2014-ல் எப்படி முதிர்ச்சியற்ற வீரராக ஒரே பாணியில் ஆடி அவுட் ஆனாரோ அதே மாதிரியே இப்போதும் அவுட் ஆகிக்கொண்டிருக்கிறார்.

2004-ல் சிட்னி டெஸ்ட்டில் ஒரு கவர் டிரைவ் கூட அடிக்காமல் சச்சின் அடித்த 241 ரன்களை விராட்கோலி மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என கவாஸ்கர் கூறியிருந்தார். கோலி சச்சினின் அந்த இன்னிங்ஸை பார்த்தாரோ இல்லையோ ஆனால், அவர் டிரைவ் ஆடுவதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆண்டர்சனிடம் போட்டி போட்டு கவர் டிரைவ் அடிப்பதை விட கோலி சென்சுரி அடிப்பதும் இந்திய அணியின் வெற்றியும் ரொம்பவே முக்கியம்.

கடந்த போட்டியின் மோசமான தோல்வி கோலிக்கு இதை உணர்த்தியிருக்கக்கூடும். ரஹானே இன்னும் பரிதாபமாக இருக்கிறார். வெளிநாட்டு மைதானங்களில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரஹானே இவ்வளவு மோசமாக தொடர்ந்து சொதப்புவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த போட்டியில் அவரின் தேர்வே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ரஹானேவுக்கு பதில் மயாங்க் அகர்வால் உள்ளே வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அணியில் ரஹானே இருக்கும்பட்சத்தில் இது அவருக்கான கடைசி வாய்ப்பாகவே இருக்கும். அணிக்காக இல்லாவிட்டாலும் அவரின் எதிர்காலத்துக்காகவே 2014 லார்ட்ஸில் ஆடியதை போன்ற ஒரு இன்னிங்ஸை அவர் இங்கேயும் ஆடியாக வேண்டும். ரிஷப் பன்ட்டின் பலமே அவரின் பேட்டை வீசும் திறன்தான். ஆனால், அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது நின்று ஆடிக்கொடுக்கவும் அவர் கற்றுக்கொள்ள வேண்டும். ஃபுட் ஒர்க்கே இல்லாமல் பேட்டை மட்டும் நாலாபுறமும் சுற்ற முயன்றால் எப்போதும் சென்சுரி வராது.

AP21236472329575 Tamil News Spot
அஷ்வின்

பௌலிங்கில் பும்ரா, சிராஜ், ஷமி இந்த மூவர் கூட்டணி அப்படியே ஆடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. ஒற்றை பரிமாணத்தை மட்டுமே கொண்டிருக்கும் இஷாந்த் ஷர்மா அமர வைக்கப்பட்டு ஷர்துல் தாக்கூர் உள்ளே கொண்டு வரப்படலாம்.

அதைவிடவெல்லாம் முக்கியமானது அஷ்வினின் தேர்வு. இங்கிலாந்து டாப் ஆர்டரில் இரண்டு இடக்கை, இரண்டு வலக்கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். மொத்தமாக இங்கிலாந்தின் ப்ளேயிங் லெவனில் ஐந்து இடக்கை பேட்ஸ்மேன்கள். மாறி மாறி லைன் & லென்த்தை பிடித்து வீச இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறினர்.

இந்த மாதிரியான சூழலில்தான் அஷ்வின் பயன்படுவார். பிட்ச், வானிலை இது போன்ற காரணிகளையெல்லாம் தாண்டியவர் அஷ்வின். எந்த இடத்திலும் அவரால் பேட்ஸ்மேனின் பலம் பலவீனங்களை யூகித்து பல விதத்திலும் முயற்சி செய்து விக்கெட் எடுக்கும் திறனுடையவர். அவரை பென்ச்சில் வைத்திருப்பதே இந்தியாவுக்கு மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. ஜடேஜாவுக்கு ஒய்வு கொடுத்துவிட்டாவது அஷ்வினுக்கு ஒரு இடத்தை கொடுக்க முயற்சி செய்யலாம்.

ஆஸ்திரேலியாவில் 36-க்கு ஆல் அவுட் ஆன பிறகு இந்திய அணி சிறப்பாக மீண்டு வந்து தொடரை வென்று வரலாறு படைத்தது. அப்படி ஒரு மீண்டெழுதலையும் திருப்பி அடிக்கும் சம்பவத்தையும்தான் இந்திய அணியிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கோலியின் எழுச்சியை எதிர்பார்க்கலாமா?!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *