Share on Social Media


வேப்பூர் பகுதியில் கோமுகி, மணிமுக்தா மற்றும் மயூரா ஆறுகள் செல்கின்றன. மயூரா ஆறு செல்லும் பகுதிகள் மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கியும், கோடைக்காலத்தில் வறண்டு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இதனால், கடந்த 1876ல் மயூரா ஆற்றின் குறுக்கே கீழக்குறிச்சியில் கருங்கற்களால் 45 மீ., நீளம், 1.5 மீ., உயரம் கொண்ட அணைக்கட்டு கட்டப்பட்டது. இதனை, கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் கட்டப்பட்டது.அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீர், வாய்க்கால் வழியாக சேப்பாக்கம், நகர், ஐவதுகுடி, இலங்கியனுார் ஏரிகளுக்கு செல்கிறது. இதனால், 527 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், 250 ஏக்கர் விவசாய நிலங்கள் மறைமுகமாகவும் பயனடைகிறது.

அணைக்கட்டு கட்டிய பின் ஷெட்டர் பழுது நீக்கம், வர்ணம் பூசுவது, கான்கிரீட் அமைப்பது உள்ளிட்ட தற்காலிக பணிகள் மட்டுமே நடந்தது. காலப்போக்கில் அணைக்கட்டின் ஏப்ரான், கட்ஆஃப் வாள், அபட்மண்ட், விங்ஸ் முற்றிலும் சேதமடைந்தது.இதனால், அணைக்கட்டில் நீரை தேக்கி வைக்க முடியாமல், வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. நீர் வரத்து வாய்க்காலை துார் வாராததால், மழைநீர் விவசாயி நிலங்களுக்குள் புகுந்து, சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகிறது.கீழக்குறிச்சி அணைக்கட்டு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், மழைக்காலத்தில் வெள்ளத்தாலும், கோடைக்காலத்தில் வறட்சியாலும் பாதிக்கின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக அணைக்கட்டை சீரமைத்து கொள்ளளவை அதிகரிக்கவும், வாய்க்காலை துார்வாரவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், கீழக்குறிச்சி அணைக்கட்டை சீரமைக்க ரூ. 10 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அணைக்கட்டை சீரமைத்தாலும், கொள்ளளவை அதிகரித்து, நீர் வரத்து வாய்க்காலை துார் வாரினால் மட்டுமே, விவசாயிகள் பயன் பெறுவதுடன், குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும்.எனவே, அணைக்கட்டின் கொள்ளளவை அதிகரித்து, வாய்க்காலை துார்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அணைக்கட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *