Share on Social Media


கோவை:இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வந்த இருவரை, 14 நாட்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் வரும் பயணிகளிடம், நேற்று முதல் சளி மாதிரி சேகரித்து பரிசோதிக்கும் பணியை, மாவட்ட சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
கொரோனா தாக்கம் குறைந்து விட்டது, இனி எந்த பிரச்னையும் இல்லை என நினைத்து கொண்டு, வழக்கமான வாழ்க்கைக்கு நாம் ஒவ்வொருவரும் தயாராகி வந்த நிலையில், இங்கிலாந்தில் உருவாகியுள்ள புதுவகை கொரோனா வைரஸ், அனைவர் வயிற்றிலும் புளியை கரைக்கிறது. கடந்தாண்டு இறுதியில், எங்கோ வூகானில் கிளம்பிய வைரஸ்தான், இத்தனை நாட்களும் நம்மை பாடாய்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய வைரஸ், முன்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்; வேகமாக பரவும் தன்மை வாய்ந்தது என்கின்றனர், சுகாதார துறையினர். ஆகவே, கோவை சர்வதேச விமான நிலையத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்களை, விசாரித்து வருகின்றனர்.இது குறித்து, கோவை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது;கோவை விமான நிலையத்தில், கடந்த ஜன., மாதம் முதல் மருத்துவ குழு பணியில் உள்ளது.
நோய் தொற்று பாதிப்பு சற்று குறைந்திருந்ததால், கடந்த இரண்டு மாதங்களாக அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே, பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.தற்போது, இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால், மீண்டும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கு, இன்று(நேற்று) முதல் சளி சேகரித்து சோதனைக்கு அனுப்பப்படுகிறது.வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.இதுவரை, இங்கிலாந்தில் இருந்த வந்த, 2 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள், கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று வந்துள்ள போதும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈஷா யோக மையத்துக்கு இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள், யாரேனும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனரா என்பது குறித்தும், விசாரித்து வருகிறோம். கடந்த, இரண்டு வாரங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள், தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பொதுமக்களும் தங்கள் வீடுகளுக்கு அருகில் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் யாராவது இருந்தால், 1077 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும்.இவ்வாறு, ரமேஷ்குமார் கூறினார்.
கோவைக்கு வேண்டாம் மீண்டும் ஒரு முடக்கம்!
புதிய வகை கொரோனாவால், கோவைக்கு பாதிப்பு ஏற்படுவதும் ஏற்படாததும், நம் கைகளில்தான் உள்ளது. தொற்று குறைந்து விட்டதென்று மாஸ்க் அணியாமலும், கைகளை சோப்பால் கழுவாதவர்களும், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களும், கண்டிப்பாக அவற்றை தாங்களே மாற்றிக் கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு தொற்று நம்மை முடக்கி விடாமல் இருக்க, நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற உறுதியேற்போம்!

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *