Share on Social Media


கொரோனா தடுப்புப் பணிகளில் தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வார்ரூம் தொடங்கி அரசியல் பாகுபாடற்று, சட்டமன்ற உறுப்பினர் குழுக்கள், கண்காணிப்புக் குழுக்கள், ஆக்சிஜன் விநியோகத்துக்கான குழுவென பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஒருங்கிணைந்து பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த தடுப்புப்பணிகள் மற்றும் லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த மாத மத்தியில் 7000-த்தைத் தொட்ட எண்ணிக்கை தற்போது 1000 என்ற அளவுக்குச் சரிந்திருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் தாக்கம் அதிகரித்திருந்தாலும் தற்போது கட்டுக்குள் இருக்கிறது. மூன்றாம் அலையை மனதில் கொண்டு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் படுக்கைகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.

Also Read: கொரோனா நோய் தடுப்புப் பணிகள் – 14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் குழு நியமித்தார் முதல்வர் ஸ்டாலின் #NowAtVikatan

இந்தச் சூழலில் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகளை மேலும் விரைவுபடுத்தும்பொருட்டு சுகாதாரத்துறையில் பணியாற்றி அனுபவமுள்ள நிபுணர்களைக் கொண்டு ஒரு டாஸ்க் ஃபோர்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்புப் பணி

இந்தக்குழு, கொரோனா தாக்கம், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்து முதலமைச்சர் தலைமையிலான கொரோனா பணிக்குழுவுக்கு அறிக்கை அளிக்கும். இந்தக் குழுவுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் தலைமை சுகாதார அதிகாரி டாக்டர் பி.குகானந்தம், முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவன இயக்குநர் டாக்டர் மனோஜ் முரேகர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் தொற்றுநோயியல் துறை மருத்துவர் ஜெயபிரகாஷ் முலியில் ஆகிய நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தவிர, சுகாதாரத்துறை செயலாளர், சுகாதாரத்துறை சிறப்புப்பணி அதிகாரி, மருத்துவக்கல்வி இயக்குநர் உள்பட சுகாதாரத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலரும் இந்தக்குழுவில் அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பூர்ணலிங்கம், தமிழக மின்வாரியத் தலைவர், ஜவுளித்தறை செயலாளர், உள்துறை செயலாளர் போன்ற முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். 94-ம் ஆண்டு முதல் 97-ம் ஆண்டு வரை சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

f5957785 5497 4be9 9d1b 9bc5340cf5c0 Tamil News Spot
பூர்ணலிங்கம்

தமிழக மருத்துவமனைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் இவர் பொறுப்பிலிருந்த காலத்தில்தான் கொண்டு வரப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் மருந்து கொள்முதலில் ஏராளமான பிரச்னைகள் இருந்தன. தேவையற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டன. தேவையான மருந்துகள் கிடைப்பதிலும் பிரச்னைகள் இருந்தன. ஏராளமான மருந்துகள் காலாவதியாகி இழப்புகளும் அதிகமாக இருந்தன. இந்த நிலையை மாற்றி அனைத்து மருத்துவமனைகளுக்கும் சீராக தேவையான மருந்துகள் சென்று சேரவும், மருந்துகளை ஒருங்கிணைத்து கொள்முதல் செய்யவும் தமிழ்நாடு மருந்து சேவைக் கழகத்தை ஆரம்பித்தது இவர்தான். மருத்துவக் கல்வி சேர்க்கையை கணினிமயமாக்கியவரும் இவர்தான்.

உலகவங்கி இந்தியாவுக்கு அளித்த நிதியைப் பயன்படுத்தி இந்தியாவிலேயே முதன்முறையாக ‘எயிட்ஸ் சொசைட்டி’ என்ற அமைப்பை உருவாக்கி எயிட்ஸ் தடுப்புப்பணிகளை முடுக்கிவிட்டார். பிறகு அதுவே இந்தியா முழுமைக்குமான மாடலாக மாற்றப்பட்டது. மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இருந்த எப்.ஆர்.யூ எனப்படும் தாய்-சேய் மருத்துவத்துக்கான வசதிகளை வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தொடங்கியதும் இவர் காலத்தில்தான். அதனால் தாய்-சேய் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது. அதிமுக, திமுக இரண்டு ஆட்சிக்காலங்களிலும் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார் பூர்ணலிங்கம்.

police Tamil News Spot
கொரோனா பரிசோதனை

ஓய்வுக்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், உலக வங்கி, பில்கேட்ஸ் ஃபவுண்டேஷன் போன்ற சர்வதேச அமைப்புகளில் ஆலோசகராக பணியாற்றிய பூர்ணலிங்கத்துக்கு தற்போது கொரோனா டாஸ்க் ஃபோர்ஸை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பூர்ணலிங்கத்திடம் பேசினேன்.

“மிகவும் இக்கட்டான சூழல்… இந்த நேரத்தில் என் மீது நம்பிக்கைவைத்து இந்தப் பொறுப்பை வழங்கியுள்ள முதல்வருக்கு நன்றி. குழு ஆக்கப்பூர்வமாக செயல்படும்…” என்றார்.

வரும் வாரத்தில் இந்தக்குழுவின் முதல் கூட்டம் நடக்கவுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *