கோலாலம்பூர்: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் மலேசியாவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் வீடுகளின் கூரை மீது தஞ்சமடைந்துள்ளனர். மலேசியாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் 6 மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 21 ஆயிரம் பேர் பத்திராக மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் இடுப்பளவு தேங்கிய நீரில் வாகனங்கள் மிதக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பல மாநிலங்களில் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து பல இடங்களில் வெளியேற வழியின்றி மக்கள் வீடுகளின் கூரை மீது தஞ்சமடைந்துள்ளனர். வனப்பகுதிகளை ஒட்டியுள்ள வீடுகளுக்குள், பாம்பு, ஆமை உள்ளிட்ட வன உயிரினங்கள் நுழைந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.