Share on Social Media


கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வந்தனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, தேடப்பட்டு வந்த நிலையில், சேலம் ஆத்தூரில் நடந்த வாகன விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியாக சயானையும், இரண்டாவது குற்றவாளியாக வாளையார் மனோஜையும் போலீஸார் சேர்த்தனர். தற்போது, வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

சயான், வாளையார் மனோஜ்

இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்த 10 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில், சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் கடந்த 2019-ல் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னதன் பேரிலேயே கொடநாட்டில் கொலை, கொள்ளையை நிகழ்த்தினோம்” என பகீர் பேட்டி அளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதையடுத்து, போலீஸார் இந்த பேட்டியின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

கடந்த ஜூலை மாதம் சயான், வாளையார் மனோஜ் ஆகிய இருவருக்கும் அடுத்தடுத்து ஜாமீன் வழங்கப்பட்டது. சயான் ஜாமீனில் வெளிவந்தாலும், வாளையார் மனோஜை ஜாமீனில் எடுப்பதற்கு நிபந்தனையைத் தளர்த்த வேண்டும் என மனோஜ் தரப்பில் மூன்று முறை மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் ஜாமீன் கிடைத்தும் சிறையிலிருந்து வெளிவர முடியாமல் இருந்து வந்தார்‌. இந்த நிலையில், வாளையார் மனோஜ் ஜாமீனில் நிபந்தனை தளர்வு தொடர்பாக இன்று மாலை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஜாமீன் தாரர்கள் மனுவை விசாரித்த நீதிபதி தளர்த்தப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மனோஜை ஜாமீனில் வெளிவர அனுமதி வழங்கினார்.

IMG 20211001 WA0001 Tamil News Spot
வாளையார் மனோஜ்

இது குறித்துத் தெரிவித்த வாளையார் மனோஜ் தரப்பு வழக்கறிஞர் முனிரத்தினம்,“மனோஜுக்கு கடந்த ஜூலை மாதம் ஜாமீன் வழங்கப்பட்டும் நிபந்தனைகள் காரணமாகச் சிறையிலிருந்து வெளி வர முடியாமல் இருந்தார். நிபந்தனைகளைத் தளர்த்தக் கோரி 3 முறை மனு தாக்கல் செய்தோம். மனோஜின் மனைவி, அவர் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இருவரும் ஜாமீன் தாரர்களாக முன் வந்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம். அதை ஏற்று நீதிபதி சஞ்சய்பாபா மனோஜை ஜாமீனில் வெளியே விடுவதற்கான உத்தரவை வழங்கினார். மேலும், நீதிபதி சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறார். அதில், மனோஜ் ஊட்டியை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் வந்து கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளும் அடக்கம்” என்றார்.

Also Read: கொடநாடு மர்மங்களைத் தேடி: `எடப்பாடியை விளாசும் முன்னாள் நண்பர்!’ | பகுதி- 11



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *