Share on Social Media


கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், மணலி புதுநகர், சடையங்குப்பம் – பர்மா நகர் போன்ற கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்லும் மூன்று வழிகளும் நீரால் சூழப்பட்டுள்ளதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், 35 அடி உயரம் கொண்டது. பருவமழையால் ஏரி நிரம்பி, 20 நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, பூண்டிக்கு நீர்வரத்து மளமளவென அதிகரிக்க துவங்கியதால், உபரி நீர் திறப்பின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டது.

வெள்ளநீர்அதிகபட்சமாக வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாநகராட்சி மற்றும் வருவாய் துறை சார்பில், ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசித்த, 520க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால், மணலி புதுநகருக்குள் இருந்து, ஆற்றில் இணையும் இணைப்பு கால்வாயில் தண்ணீர் பின்னோக்கி ஏற துவங்கியது.இதனால், மணலி புதுநகரில், மகாலட்சுமி நகர், 57வது பிளாக் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளநீர் ஊருக்குள் மளமளவென ஏறியது. இணைப்பு கால்வாய் ஓரம் இருந்த, 50க்கும் மேற்பட்ட குடிசைகளில் முற்றிலும் தண்ணீர் புகுந்து விட்டது.மணலிபுதுநகர் காவல் நிலையத்தைச் சுற்றியும், உபரி நீர் ஏறியதால், தீவு போல் காட்சியளிக்கிறது.

மேலும், ஆற்றங்கரையோரம் உள்ள மகாலட்சுமி நகர், வடிவுடையம்மன் நகர், ஜெனிபர் நகர் போன்ற பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.மகாலட்சுமி நகர் மற்றும் வடிவுடையம்மன் நகர், கொசஸ்தலை ஆற்றின் வலபக்க கரை பலவீனமாக உள்ளதால், வெள்ளநீர் ஊருக்குள் ஏறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.நீர் திறப்பு அதிகரிப்பு எச்சரிக்கையை தொடர்ந்து, வேளச்சேரியை போல், மணலி புதுநகர் மக்கள், வெள்ளநீரில் தங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பாதிக்காதவாறு, நாப்பாளையம் மேம்பாலத்தில் வரிசையாக பத்திரப்படுத்தினர்.

பாதிப்புமேலும், கொசஸ்தலை ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீரை பார்க்க, ‘செல்பி’ எடுக்க, நாப்பாளையம் மேம்பாலத்தில், மக்கள் குடும்பம், குடும்பமாக குவிந்தனர்.கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரானது, பல கி.மீ., துாரம் பயணித்து, சடையங்குப்பம் அருகே புழல் உபரி கால்வாயில் இணைந்து எண்ணுார் முகத்துவாரம் வழியாக, கடலில் கலக்கும்.புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு இல்லாததால், உபரி கால்வாயில் நீர் மட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், கொசஸ்தலை ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்திருப்பதால், கடலுக்கு செல்ல வேண்டிய தண்ணீர், புழல் உபரி கால்வாயில் பின்னோக்கி ஏற துவங்கியது.இதனால், சடையங்குப்பம் கிராமத்தில் இருந்து, மேம்பாலம் வழியாக வெளியேறும் வழி; பர்மா நகர் இரும்பு பாலம் வழி; சடையங்குப்பம் – வைக்காடு இணைப்பு சாலைகளில் இடுப்பளவிற்கு வெள்ள நீர் ஏறி விட்டது.கொசஸ்தலை ஆற்றில் இருந்து சடையங்குப்பம் ஏரியை நோக்கி ஏறிய வெள்ளநீர், ஏரியை மூழ்கடித்து,

கலங்கல் தெரியாத அளவிற்கு, உபரி நீர் மாறுகால் பாய்கிறது.சடையங்குப்பம் – பர்மா நகருக்கு செல்லும் மூன்று வழிகளும் துண்டிக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.படகுகளில் பயணித்து, சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக சிலர் வெளியேறுகின்றனர். வைக்காடு சந்திப்பிற்கு செல்லும் பாதையில் ஏறியுள்ள இடுப்பளவு தண்ணீரில், ஆபத்தான நிலையில் சிலர் நடந்து சென்று, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.

நீர்த்தேக்தத்தில் உபரி நீர் திறக்கப்பட்டால், முகத்துவாரம் வருவதற்கு பல மணி நேரமாகும். அதிகபட்சமாக, நேற்று முன்தினம் திறந்த, 38 ஆயிரம் கன அடி நீரின் பாதிப்பே, நேற்று காலை தான், சடையங்குப்பத்தில் தெரிந்தது.நேற்று மதியம் நிலவரப்படி நீர் திறப்பு, 23 ஆயிரத்து, 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஊருக்குள் தேங்கி இருக்கும் நீரின் அளவு குறையுமா என்பது, இரவிற்கு பின்பே தெரியும் என, தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

மேம்பால பணி எப்போது முடியும்?சடையங்குப்பம் – பர்மா நகர் கிராமங்கள், கொசஸ்தலை, புழல் உபரி கால்வாய், பகிங்ஹாம் கால்வாய் என, நீர்வழித்தடங்களால் சூழப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு செல்ல மூன்று வழிகள் உள்ளன. பகிங்ஹாம் கால்வாயை கடக்கும் விதமாக கட்டப்படும் சடையங்குப்பம் மேம்பாலம், புழல் உபரி கால்வாயை கடக்கும் விதமாக கட்டப்படும் உயர்மட்ட பாலம் ஆகிய இரு பாலங்களும் இன்னும் பணி முடியவில்லை.வைக்காடு சந்திப்பு வழியாக செல்ல, தார்ச் சாலை வசதி உண்டு. உபரி நீர் திறப்பால், மூன்று பாதைகளும் துண்டிக்கப்படுகிறது.

இரு பால பணிகளும் விரைந்து முடித்தால், வெள்ள காலத்தில் அப்பகுதி மக்கள் வெளியேற வசதியாக இருக்கும்.உதவி வேண்டும்!உபரி நீர் திறப்பால், சடையங்குப்பம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில், உணவு வழங்கப்படுகிறது. ஊர் நிர்வாகம் சார்பிலும், சில உதவிகள் செய்யப்படுகின்றன. இருப்பினும், மற்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.எனவே, அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு, பாய், போர்வை, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, பால், பிஸ்கட் போன்ற உதவிகள் தேவைப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவ முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

அன்றே எச்சரித்தது ‘தினமலர்’மணலி புதுநகருக்குள் இருந்து, கொசஸ்தலை ஆற்றில் இணையும் இணைப்பு கால்வாயில், மதகுகள் இல்லாததால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், தண்ணீர் பின்னோக்கி ஊருக்குள் ஏறும் அபாயம் உள்ளது.மணலி புதுநகருக்கு பின், கொசஸ்தலை ஆற்றின் கரைகள், கட்டமைப்பு சரியில்லை. எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், கடும் பாதிப்பு ஏற்பட கூடும். இணைப்பு கால்வாயில் மதகு அமைக்க வேண்டும்.

கரைகள் பலப்படுத்த வேண்டும் என, நமது நாளிதழில் படங்களுடன் விரிவான செய்தி வெளியானது.ஆனால், அதிகாரிகள் மழுப்பல் பதிலளிப்பதில் ஆர்வம் காட்டினரே தவிர, பிரச்னைகளை தீர்க்க முன்வரவில்லை. இதன் விளைவாக, நம் நாளிதழ் சுட்டிகாட்டிய இடங்களில் எல்லாம், தற்போது கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

– நமது நிருபர் –



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *