Share on Social Media

புதுடில்லி: ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்று மல்யுத்த அரங்கில் உயர்ந்த நின்ற சுஷில் குமாரின் நிலை திடீரென தாழ்ந்துள்ளது.  முன்பு பதக்கம் கைப்பற்றி மூவர்ணக்கொடியுடன் கம்பீரமாக காட்சி தந்த இவர், நேற்று கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது அவமானத்தால் முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டார். இவரது இரு கைககளையும் டில்லி போலீசார் பிடித்திருந்தனர். உலக மல்யுத்த நாளில் இந்த அவலத்தை பார்க்க நேர்ந்ததை எண்ணி ரசிகர்கள் நொந்து கொண்டனர்.  இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சுஷில், வன்முறை பாதையில் பயணித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. மொத்தத்தில் இந்திய மல்யுத்தத்திற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார். 

இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் 37. ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவர்.முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இவர் மீது, ஜாமினில் வெளியே வர முடியாத ‘பிடிவாரன்ட்’ உள்ளது. இவர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 1 லட்சம் சன்மானம் தரப்படும் என டில்லி போலீசார் அறிவித்தனர்.

இது தொடர்பாக, சுஷில்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது. இவரை கைது செய்ய 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனது இருப்பிடத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்ட இருந்தார். இதனிடையே சுஷில் குமார் உ.பி.,யில் உள்ள மீரட், டோல் பிளாசாவை கடக்கும் போட்டோ வெளியானது. தவிர இவர் பஞ்சாப்பின் பதிண்டா நகரில் இருப்பதாக கூறப்பட்டது. 

தற்போது சம்பவம் நடந்து 19 நாட்களுக்குப் பின், டில்லி முன்கா பகுதியில் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த சுஷில் குமார், அவரது  வலது கரமாக கருதப்படும் அஜய் குமாரை, நீரஜ் தாகூர் தலைமையிலான மேற்கு டில்லி ஸ்பெஷல் பிரிவு போலீசார் கைது செய்தனர். 

 

6 நாள் காவல்

நேற்று காலை, டில்லி ரோகினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஸ்பெஷல் பிரிவு போலீசாருக்கு, சுஷில்குமாரிடம் விசாரிக்க 30 நிமிடம் அனுமதி தரப்பட்டது. பிறகு விசாரணைக்காக 12 நாள் போலீஸ் காவல் அளிக்க வேண்டும் என  முறையிட்டனர். இதற்கு சுஷில் குமார் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இறுதியில் சுஷிலுக்கு 6 நாள் போலீஸ் காவல் அளித்து நீதிபதி திவ்யா மல்கோத்ரா உத்தரவிட்டார். போலீஸ் விசாரணையில் கொலை வழக்கில் சுஷில் பங்கு தொடர்பான உண்மை வெளி வரலாம்.

 

மீண்டும் மிரட்டல்

கொலை செய்யப்பட்ட சாகர் ராணா குடும்பத்தினருக்கு, சுஷில் குமார் தரப்பில் இருந்து மறுபடியும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாகர் ராணா குடும்பத்தினர் போலீசிடம் தெரிவிக்க, மறுநாள் சுஷில் குமார் கைது செய்யப்பட்டார்.

 

போலீஸ்காரர் மகன்

கொலை செய்யப்பட்ட சாகர் ராணா, தந்தை டில்லி போலீசில் கான்ஸ்டபிள் ஆக உள்ளார். இவர் கூறுகையில்,‘‘எனது மகனை 15 வயதில் சத்ரசால் அகாடமி நடத்திய மகாபலி சத்பாலிடம் ஒப்படைத்தேன். சத்பால், சுஷில் குமார் என இருவரும் எனது மகனுக்கு சிறப்பான முறையில் பயிற்சி தந்தனர். சுஷில் குமாரை தனது குருவாக நினைத்தார் சாகர். பல்வேறு போட்டிகளில் மகன் பதக்கங்கள் வென்றுள்ளார். கடைசியில் இப்படி ஆகி விட்டது,’’ என்றார்.

 

பறி போகிறது வேலை

சுஷில் குமார் வடக்கு ரயில்வேயில் பணி புரிகிறார். கடந்த 2015 முதல் டில்லி அரசு பணியில் உள்ளார். இந்த பணி 2020 வரை நீட்டிக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தயாராக வேண்டும் என்பதால், இதை 2021 வரை நீட்டிக்க வேண்டும் என சுஷில் குமார் கேட்டிருந்தார். தற்போது இது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடக்கு ரயில்வே தரப்பில் கூறுகையில்,‘சுஷில் குமார் குறித்த பைல் கடந்த வாரம் டில்லி அரசு அனுப்பியது. அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தவிர இவர் மீதான வழக்கு விபரத்தையும் அனுப்பியது. தற்போது கைது செய்யப்பட்டதால் ரயில்வே பணியையும் இழக்க நேரிடும்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஒப்புக் கொண்டார்

சுஷில் குமாரிடம் போலீசார் விசாரித்த போது, ‘மே 4ல் சம்பவ இடத்தில் இருந்ததை ஒப்புக் கொண்டார். பின் தனது வீட்டுக்கு துாங்கச் சென்று விட்டதாகவும், இருப்பிடத்தை கண்டு பிடித்து விடுவர் என்பதால் அலைபேசி பயன்படுத்தவில்லை,’ எனவும் தெரிவித்தார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *