Share on Social Media


இன்றோ டெக்னாலஜி அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. அன்றோ கூட்டுக் குடும்ப சகிதம் வாழ்ந்து வந்தோம். தாத்தா, ஆச்சி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என்கிற சொந்தங்கள் எல்லாம் குறைந்து இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை என்றாகிவிட்டது. குடும்ப நிகழ்ச்சியை வாட்ஸப்பில் பார்க்கும் காலம் வந்துவிட்டது. டெக்னாலஜியின் வளர்ச்சியையும் கூட்டு குடும்ப வீழ்ச்சியையும் நன்கு உணர்ந்தவர்கள் 90’ஸ் கிட்ஸ் மட்டுமே.

நான் கூட்டுக்குடும்பத்தில் பிறந்ததால் அனைவரது அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தேன். இன்றும் என் இளம்பருவத்தின் நினைவுகள் மனத்தில் பசுமையாக பதிந்திருக்கிறது.

பொழுது விடிந்ததும் தாத்தா வேட்டியை அடித்து துவைக்கும் சத்தம்தான் எனது மார்னிங் அலாரம். அவர் தினமும் காலையில் தவறாமல் கோவில் செல்வார். சிறந்த பக்திமான். நோட்டுப் புத்தகம் போட்டு தேதிவாரியாக மந்திரங்கள் எழுதுவார். பின்பு வேலைக்கு சென்று, மதிய உணவிற்கு வீட்டுக்கு வரும்போது எனக்கு மிட்டாய் வாங்கிக்கொண்டு வருவார். அவர் தன் வேட்டியில் மிட்டாய்களை சுருட்டி வைத்திருப்பார்.

அன்றொரு நாள் அவர் வீட்டுக்கு தாமதமாக வந்ததால் மிட்டாய் வாங்க அடம்பிடித்து குதித்து தொந்தரவு செய்தேன். அவருக்கு வந்ததே கோபம். அவரது மோதிர விரலால் என் தலையில் குட்டினார். அவர் குட்டுவதை பிறர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்றுதான் உணர்ந்தேன் அதன் வலியை. அன்றிலிருந்து அவர் வரும் நேரம் சேட்டையை குறைத்துக்கொண்டேன்.

Joint Family

ஆச்சி சதா பூஜித்துக்கொண்டே இருப்பார். அவர் தரும் பிரசாதத்துக்காக நானும் அவரோடு சில ஸ்லோகங்கள் மனப்பாடம் செய்து பாடுவேன்.

பெரியப்பா தொழிலில் இருக்கும் வரவு செலவு கணக்குகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதுவார். அவரது கையெழுத்தும் அவரது பேனாவும் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அவர் வைத்திருக்கும் பேனாக்களில் ஒன்றிரண்டு எனக்கும் தருவார். பெரியம்மாவின் கைப்பக்குவத்தில் சுவையான பலகாரங்கள் அவ்வப்போது கிடைக்கும். சித்தி சுவாரஸ்யமான நிறைய கதைகளை சொல்வார்.

எங்களது வீட்டைச் சுற்றி நிறைய கோயில்கள் அமைந்திருக்கும். அத்தையோடு சேர்ந்து தினமும் ஒரு கோவில் செல்வோம். அத்தை மகளோடு சேர்ந்து விளையாடுவதும் கடைத்தெருவிற்கு சென்று தின்பண்டங்கள் வாங்கி உண்பதும் படிப்பதும் அரட்டை அடிப்பதும் மிகவும் பிடித்தமான ஒன்று.

2564579330 78bbc65527 o Tamil News Spot
temple view

புத்தாடை மற்றும் பொம்மைகள் வாங்கித் தருமாறு அப்பாவிடம் அடம்பிடிப்போம். “எங்களுக்கெல்லாம் தீபாவளிக்கு தான் புது டிரஸ் வாங்கி தருவாங்க… அதுவும் யூனிபார்ம் தான்” என்று அப்பா பழைய புராணம் பாடுவார்.”உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி…” என்ற அவருக்குப் பிடித்த பாடலின் வரியை அடிக்கடி சுட்டிக்காட்டுவார்.

வீட்டின் எதிரில் இருக்கும் பெருமாள் கோவில் திருவிழா சமயங்களில் அம்மா நிறைய பிரசாதங்களை தயாரித்து வழங்குவார். சித்திரை திருவிழா, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் ஊரிலிருந்து உறவினர்கள் அனைவரும் வந்து எல்லோரும் ஒன்றுகூடி கொண்டாடுவோம்.

சித்தப்பாவின் செல்லப்பிள்ளை நான். சிறுவயதில் அவர் வியாபாரம் முதல் நண்பர்கள் வீடு வரை எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்வார். அவர் ஹோமியோபதியை விரும்பி படித்து பலவிதமான மருந்துகளை அவரது அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார். இன்னொரு அலமாரியில் டேப் ரெக்கார்டர் கேசட் இருக்கும். அதோடு நிறைய ஆன்மிக புத்தகங்களை வரிசைப்படுத்தி வைத்திருப்பார். உடற்பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, தியானம், தவம் என்று அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். மன்றத்தில் அவ்வபோது சொற்பொழிவு ஆற்றுவார்.

நான் அவரோடு எம்ஐடி வண்டியில் பயணிக்கும்போது முன்சீட்டில் அமர்ந்து தூங்கிவிடுவேன். அவர் அப்படியே திருப்பி உட்காரவைத்து சாய்த்துக் கொள்வார். ஒரு முறை பாலத்தைக் கடக்கும்போது வண்டியை ஓரமாக நிறுத்தி மலையில் சூரியன் இரண்டு நிமிடத்தில் குதித்துவிடும் என்று சூரிய அஸ்தமனத்தை வேடிக்கையாகக் கூறினார். ஒரு முறை மழையில் மொட்டை மாடி சென்று நன்றாக நனைந்து விளையாட விட்டார். இயற்கையை ரசிக்க வைத்தார்.

ஆன்மிக பயணமாக பொதிகை மலை, சதுரகிரி, காசி, கேதார்நாத், பத்ரிநாத் என்று அடிக்கடி சென்று வருவார். அந்தப் பயணத்தை சுவாரஸ்யமாக எங்களுக்கு விளக்குவார். சித்தர்கள், ஜீவநாடி. பாவ புண்ணியம், கர்மா என்று பலவற்றை எங்களுக்கு எடுத்துக்கூறி தெளிவுபடுத்தி நல்வழிபடுத்தினார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அன்ன சேவையை சிறப்பான முறையில் செய்து வருகிறார். ஓர் அமைப்பை ஏற்படுத்தி அன்பர்கள் நண்பர்கள் உறவினர்கள் உதவியோடு வெற்றிகரமாக சேவையை தொடர்ந்து வருகிறார். முதியோர் இல்லம், பார்வையற்றோர், ஊனமுற்றோர், தொழுநோயாளிகள் என்று பல இடங்களுக்கும் சென்று அன்ன சேவையோடு மற்றும் பல உதவிகளை செய்துவருகிறார்.

காலையில் பறவைகளுக்கு உணவளிப்பதைக்கூட பெரிய சாதனையாகக் கருதும் எனக்கு, அவரின் தன்னலமற்ற சேவை மனப்பான்மை வியப்பை அளிக்கிறது.

இவ்வாறு பல தனித்தன்மை வாய்ந்த குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து வாழும் பாக்கியம் இன்று பலருக்கு வாய்ப்பதில்லை. இன்றைய நாட்களில் நாம் ஆடம்பரமாக பண்டிகைகள் கொண்டாடினாலும் அன்றிருந்த மகிழ்ச்சி ஏனோ இன்று கிடைப்பதில்லை… அந்த வகையில் நான் பாக்கியசாலி!!!

– தாமரைSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *