Share on Social Media


அடுத்து ஒரு செக்போஸ்ட் வந்தது. ‘மறையூரில் கால் தடுக்கினா அருவியா இருக்கும்னு சொன்னாங்களே…’ என்று அருவியைத் தேடினேன். பார்த்தால்… சாரி, கேட்டால்… செக்போஸ்ட்டைத் தாண்டி ஓர் அருவிச் சத்தம்… எருமச்சாடி அருவி என்று போர்டு தெரிந்தது. ஆளே இல்லை. குளிப்பதற்கும் கட்டணம் மிகவும் குறைவாகத்தான் வசூலித்தார்கள். லெமன் நாட்டுச் சர்க்கரை டீ குடித்துவிட்டு, எருமச்சாடியில் தலை நனைக்கலாம். அல்லது தலை நனைத்துவிட்டும் லெமன் கிராஸ் டீ குடிக்கலாம்.

எருமச்சாடி அருவி

எருமச்சாடி அருவி

போகும் வழியில் தூரத்தில் நான் ஏற்கெனவே சொன்ன தூவானம் அருவி, லாங் ஷாட்டில் ‘ஹாய்’ சொல்லியது. தூவானத்தில் ட்ரெக்கிங் போய் காட்டுக்குள் தங்கி, அருவியில் குளிப்பது அலாதி சுகம். இங்கே கேரள அரசு வனத்துறையினரின் அனுமதியோடு, அவர்களின் கைடு உதவியோடு, வனவிலங்குகள் உலவும் காட்டுக்குள் 3 கிமீ நடந்து… அருவிக்கு ரொம்பப் பக்கமாக ஒரு கல் வீட்டில் தங்க வைப்பார்கள். தூவானம் காட்டேஜ் தங்கல் பற்றி வரும் லாங் டிரைவில் சொல்கிறேன்.

மறையூர் தாண்டி காந்தளூர். இதுதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூ பூக்கும் இடம். நான் இரண்டு ஆண்டுகள் தாமதமாகப் போனது தெரிந்தது. இன்னும் 10 ஆண்டுகள் கழித்து வந்தால்தான், குறிஞ்சி மலர்களுடன் காந்தளூரில் புகைப்படம் எடுக்க முடியும் என்றார்கள்.

லாங்ஷாட்டில்  மறையூர் தூவானம் அருவி

லாங்ஷாட்டில் மறையூர் தூவானம் அருவி

காந்தளூர், மறையூர் போன்ற இடங்களில் தங்குவது அற்புதமான சாய்ஸ். திடீரென காட்டேஜ் ஜன்னலைத் திறந்தால்… ஏதாவதொரு அருவிச் சாரல் அறைக்குள் அடிக்கலாம். மறையூரின் ஸ்பெஷலே தெருவுக்குத் தெரு விழும் அருவிகள்தான். காந்தளூரைச் சுற்றிலும் மலை என்பதால், மழை நேரங்களில் அருவிகளின் ஆரவாரம் இன்னும் அதிகமாகி இனிய இம்சை கொடுக்கும். தூவானம் அரசாங்கக் காட்டு வீடு. இங்கு தங்க 3,000 ரூபாய் கட்டணம். இந்த காட்டேஜ் இல்லாமல் ஏகப்பட்ட ஹோம் ஸ்டேக்களும் உண்டு. அருவிக்குப் பக்கத்தில் காட்டேஜ் தேடிப் பிடிப்பது உங்கள் சாமர்த்தியம்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *