Share on Social Media

தமிழக அரசால் சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்ட ஐவரில் ஒருவர், ஜான் ட்ரெஸ். இவர் பெல்ஜியம் நாட்டில் பிறந்திருந்தாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து, நமது நாட்டு பொருளாதார நிலையையும், விளிம்புநிலை மக்களின் பிரச்னைகளையும் கூர்ந்து அவதானித்து களஆய்வுகள் செய்து, அதன் துணையோடு காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிவந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றின் சூத்ரதாரி இவர்தான்.

நீண்ட நாள்களாக வளர்ந்த தாடி, குர்தா, பைஜாமா, தோளில் தொங்கும் ஜோல்னாபை என எப்போதும் காட்சி தருபவர் ஜான். இவர் 2000-மாவது ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் `சென்ஸ் அண்ட் சாலிடாரிட்டி: ஜோலாவாலா எகானமிக்ஸ் ஃபார் எவ்ரிஒன் (Sense and Solidarity – Jholawala Economics for Everyone)’ என்கிற புத்தகம் ஆகும். இந்தப் புத்தகத்தில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்களாக இருக்கும் வறட்சி, பட்டினி, ஏழ்மை, கல்விக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவு, சுகாதாரம், குழந்தை வளர்ச்சி மற்றும் ஆரம்பக் கல்வி, வேலை உத்தரவாதம், உணவுப் பாதுகாப்பு, பொது விநியோக முறை ஆகியவை குறித்தும் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம், தொழில்நுட்பம் (ஆதார் போன்ற பொதுநலக் கொள்கைகளை உந்துவதில் அதற்கிருக்கும் பிடிப்பும்), போரும் சமாதானமும் (அணுஆயுதத் தடுப்பும் காஷ்மீரும்) போன்ற விஷயங்கள் குறித்த கட்டுரைகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

ஜான் ட்ரெஸ் புத்தகம்

ஜான் ட்ரெஸ் புத்தகம்

வளர்ச்சி பொருளாதாரம் என்கிற துறையில் இந்திய அளவிலும் உலக அளவிலும் நன்கு அறியப்பட்ட பொருளாதார நிபுணர் ஜான். பசி, ஏழ்மை, பாலின ஏற்றத்தாழ்வு ஆகிய பொருண்மைகளின் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஆய்வுகளைச் செய்தவர், செய்துவருபவர். பொருளாதாரத்துக்கென்று நோபல் பரிசு வாங்கிய அமர்த்யா சென், ஆங்கஸ் டீடென் ஆகியோரோடு சேர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.

அதே சமயம் `ஜோல்னாபைகாரர்’ என கார்ப்பரேட்டுகளால் கேலி செய்யப்பட்டுவரும் தகவல் உரிமைக்காகப் போராடும் ஆர்வலர்கள், கிராமப்புற வேலையாள்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல் கட்சிகள், மாற்று ஊடகங்கள், மாணவ தன்னார்வலர்கள், கள ஆய்வாளர்கள் ஆகியோரோடும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *