Share on Social Media

சிதறுண்டு போய் எதிர்காலம் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி திடீரென விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்து அதிரடியாக டி20 தொடரை வென்று ஃபார்முக்கு திரும்பியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் மீண்டும் கைக்கோர்த்து அந்த அணியை மீட்டது மகிழ்ச்சிதான் என்றாலும், யுனிவர்சல் பாஸான கிறிஸ் கெய்ல் ஃபார்முக்கு வராததால் அந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் இருந்தனர் கிரிக்கெட் ரசிகர்கள். என்டர்டெய்ன் செய்வதற்கே பிறவியெடுத்தவனின் பெயரால் ரசிகர்கள் வருத்தம் கொண்டால் அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன? உடனடி நிவாரணமாக ஒரு அக்மார்க் யுனிவர்சல் பாஸ் இன்னிங்ஸை ஆடி ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் கிறிஸ் கெய்ல். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 7 சிக்சர்களோடு 67 ரன்களை எடுத்து மிரட்டியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 5 ஆண்டுகள் கழித்து அவர் அடித்த அரைசதம் இது.

மேலும் இந்த அரைசதம் மூலம் டி20 போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்கிற வரலாற்று சாதனையையும் செய்திருக்கிறார். 42 வயதானாலும் டி20 போட்டிகளில் அவருடைய அதிரடியும் ஃபார்மும் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றது.

இந்த ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடியிருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்த தொடரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியின் எழுச்சிக்கான சமிக்ஞைகள் தெரிந்திருந்தது. வெற்றிக்காக ஒரு அணியாக நின்று அத்தனை வீரர்களும் போராடியிருந்தனர். ஆனால், 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 4 போட்டிகளில் ஆடியிருந்த கெய்ல் பயங்கரமாக சொதப்பியிருந்தார்.

கெய்ல்

‘Age is a just a number’ போன்ற ஐஸ் வைக்கும் பாராட்டுகளெல்லாம் ஃபார்மில் இருக்கும் வரை மட்டும்தான். ஃபார்ம் அவுட் ஆகிவிட்டால் வயதையே பிரதான காரணமாக காட்டி ஓரங்கட்டி விடுவார்கள்.

கரீபியன் ப்ரீமியர் லீகின் பலனாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆட இப்போது இளம் வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர். இதனால் கெய்ல் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதில் வேறொரு வீரர் ஆஸ்திரேலிய தொடரில் இறக்கப்படலாம் என்கிற யூகங்கள் வெளியாகியிருந்தது.

அவரின் வயதை வைத்தும் ஃபார்மை வைத்தும் வரும் விமர்சனங்கள் எல்லாம் கெய்லுக்கு ஒன்றும் புதிதல்ல. 2020 ஐபிஎல் சீசனில் கூட கெய்லின் வயதை காரணம் காட்டி பஞ்சாப் அணி பாதி சீசனுக்கு அவரை பென்ச்சில் உட்கார வைத்திருந்தது. தொடர் தோல்விகள் துரத்த வேறு வழியின்றி யுனிவர்சல் பாஸை உள்ளே இறக்கியது பஞ்சாப் அணி. அடுத்தடுத்து 5 வெற்றிகள். காரணம், க்றிஸ் கெய்ல் எனும் அந்த வயதான சிங்கம். கெய்லின் அதிரடியால் புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் கிடந்த அணி ப்ளே ஆஃப்ஸ்க்கு முட்டி மோதும் நிலைக்கு உயர்ந்தது. ஏலத்தில் விற்கப்படாத வீரர்களின் பட்டியலிலிருந்து மாற்றுவீரராக பெங்களூருக்கு வந்து அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற வரலாறெல்லாம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாதது.

இந்த முறையும் கெய்ல் மீது அதே விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால், கேப்டனும், டீம் நிர்வாகமும் கெய்ல் மீது முழுநம்பிக்கை வைத்தது. தென்னாப்பிரிக்க சீரிஸ் சொதப்பலுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரியாக கெய்லுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்… இறுதியாக!

இந்த தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் கெய்ல் சொதப்பவே செய்தார். முதல் போட்டியில் 10 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தவர், இரண்டாவது போட்டியில் 16 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். மீண்டும் ஃபார்ம் அவுட்… மீண்டும் விமர்சனங்கள்!

ஆனால், கெய்ல் இதைப் பற்றியெல்லாம் துளி கூட கவலைப்படுவதில்லை. அவர் ‘ரகிட…ரகிட’ மோடில் இன்றைய நாளை சந்தோஷமாக வாழ வேண்டும் என நினைப்பவர். இதுதான் அவரின் பெரிய பலம்.

கடந்த கால ஃபார்ம் அவுட்…வருங்கால உலகக்கோப்பை செலக்ஷன் என எதை மனதில் வைத்துக்கொள்ளாமல் மூன்றாவது போட்டியில் களமிறங்கினார் கெய்ல். ஹேசல்வுட்டின் ஓவரில் அவர் சந்தித்த முதல் பந்தையே சிக்சராக்கி ரன் கணக்கை தொடங்கினார். அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் என அந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள்.

ஃபார்ம் அவுட், செலக்ஷன் இதையெல்லாம் மனதில் போட்டு அழுத்திக் கொள்ளும் வீரர் ஒருவரால் நிச்சயம் இப்படியொரு அடியை அடிக்க முடியாது.

எந்த அழுத்தமும் இல்லாமல் ஜாலியாக அன்றைய நாளின் சவாலைப் போகிற போக்கில் கொண்டாட்ட மனநிலையோடு எதிர்கொள்ளும் கெய்ல் போன்ற வீரர்களினால் மட்டுமே இது சாத்தியப்படும்.

Chris pakistan Tamil News Spot
கிறிஸ் கெய்ல்

மேம்போக்காக பார்ப்பதற்கு கெய்ல் எல்லா பௌலர்களையும் எல்லா பந்துகளையும் அடிப்பது போலவே தெரியும். 10 வருடத்திற்கு முன்பு இருந்த கெய்ல் அப்படியிருக்கலாம். இப்போதிருக்கும் கெய்லிடம் ஒரு திட்டமிடல் இருக்கிறது. இந்த போட்டியில் அவர் அடித்த 67 ரன்களை பகுப்பாய்வு செய்து பார்த்தால் இது புரியும்.

ஹேசல்வுட்டை ரவுண்ட்டு கட்டி அடித்து முடித்த போது கெய்ல் 7 பந்துகளில் 18 ரன்களை அடித்திருந்தார். இதன்பிறகு, மெதுவாக பார்த்து ஆடி ஜாக்கிரதையாக ஸ்ட்ரைக்கை மட்டுமே ரொட்டேட் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் 28 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருந்தார். அப்போது 10 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 71 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 10 ஓவர்களில் இன்னும் 71 ரன்கள் தேவை. இந்த நிலையில் ஆடம் ஸாம்பா பந்து வீச வந்தார். இப்போது நேராக டாப் கியருக்கு சென்று ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டார். அடுத்த 10 பந்துகளில் 35 ரன்கள். ஒட்டுமொத்தமாக 38 பந்துகளில் 67 ரன்கள். இதுதான் இப்போதைய கெய்ல். அதே பழைய அதிரடிதான்… ஆனால், இப்போது அவரிடம் ஒரு திட்டமிடல் இருக்கிறது. எந்த பௌலரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், எந்த பௌலரை அட்டாக் செய்ய வேண்டும் என்பதில் தன்னுடைய அனுபவ முதிர்ச்சியை காட்ட தொடங்கியிருக்கிறார்.

மிட்செல் ஸ்டார்க்கிடம் பேட்டை ஓங்காமல், ஸாம்பாவுக்கு காத்திருந்து காரியம் சாதித்ததிலிருந்து இதை உணர முடியும்.

‘The curious case of Benjamin Button’ போல கெய்லின் கிரிக்கெட் வாழ்க்கையை வைத்து ‘The curious case of Universal Boss’ என பெரிய பட்ஜெட்டில் ஒரு திரைப்படமே எடுக்கலாம். அவரின் புறத்தோற்றத்திற்கு மட்டும்தான் வயதாகிக் கொண்டு செல்கிறதே தவிர, அவருக்குள் இருக்கும் கிரிக்கெட் இன்னும் இளமையாகிக் கொண்டேதான் இருக்கிறது. பத்து வருடத்திற்கு முன்னால் கேலரியில் விழுந்த பந்துகள் இப்போது கிரவுண்டுக்கு வெளியே பறந்துக் கொண்டிருக்கின்றன. பந்து வருடத்திற்கு முன்பில்லாத திட்டமிடல்கள் இப்போது சீக்ரெட் ஆஃப் சக்ஸஸாக மிளிர்கின்றன.

5 வருடத்திற்கு பிறகு அரைசதம், 14,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என எண்களால் மட்டுமே அவரே அளவிட்டு விட முடியாது. அவர் ஒரு கொண்டாட்டங்களின் கிரிக்கெட்டர்.

gayle england 18166 Tamil News Spot
கிறிஸ் கெய்ல்

ரகிட…ரகிட…கொண்டாடுங்க மக்களே!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *