Share on Social Media


கியூபாவில் பல ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஞாயிறன்று கியூபாவின் சான் டியாகோ நகரில் தொடங்கிய இந்த போராட்டம் பின்பு நாடும் முழுவதும் பரவியது.

கியூபாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெருந்தொற்றை அரசு கையாண்ட விதம்தான் இந்த போராட்டத்துக்கு காரணம்.

உணவுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதும், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிப்பதும் மறுபுறம் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதும் மக்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதை தவிர கடுமையான மின்வெட்டும் மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டக் களத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

கம்யூனிஸ புரட்சி நாடான கியூபாவில் காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சகாப்தம் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்து மிகல் டியாஸ் கனால் அதிபரானார்.

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தில், மக்கள் தங்களுக்கு ’சர்வாதிகாரம் வேண்டாம் என்றும், விடுதலைதான் வேண்டும்’ என்றும் அங்காங்கே முழுக்கம் இட்டும் வருகின்றனர்.

கியூபாவில் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நன்கு அறிந்தும் மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர். போராட்டக்காரர்கள் தாக்கப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணமுடிகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் பெப்பர் ஸ்ப்ரே கொண்டு போராட்டக்காரர்களை ஒடுக்க முயற்சித்து வருகின்றனர்.

கியூபாவில் அனுமதியின்றி கூட்டம் கூடுவது சட்ட விரோதம். அங்கு போராட்டங்களும் அரிதாகவே நடைபெறும். கியூபாவை பொறுத்தவரை காஸ்ட்ரோவின் ஆட்சிக்காலத்திலிருந்தே அங்கு இணைய வசதி பரவலாக கிடைக்கும் ஒன்று. ஆனால் இணைய சேவையை அரசு நிறுவனம்தான் வழங்குகிறது. எனவே போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவதால் பல்வேறு இடங்களில் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றின் முதல் அலை ஏற்பட்ட போது கியூபா பெரிதும் சமாளித்து கொண்டது. ஏன் தன் மருத்துவர்களை பிற நாட்டிற்கும் கூட அனுப்பி வைத்தது கியூபா.

ஆனால் இந்த இரண்டாம் அலையில் ஆட்டம் கண்டு விட்டது என்றே சொல்லலாம். நாள் ஒன்றுக்கு அங்கு 5 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. சமீபமாக ஒரே நாளில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றை அரசு சரியாக கையாளவில்லை என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் சொல்லும் காரணம். இரண்டாம் அலையில் பலர் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் இறந்துள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை கூறி போராடும் மக்களை கியூபா தனது சொந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது என்று கூறி ஆறுதல்படுத்த முயற்சி செய்து வருகிறார் அந்நாட்டின் அதிபர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *