Share on Social Media


நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விளைநிலங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் வந்தனர். வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளைப் பார்வையிட்டனர்.

அதன் பிறகு வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Also Read: நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்!

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. அதனால் குடிநீர் வழங்குவதில் கடும் சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அதைச் சமாளிக்க மாநகராட்சி சார்பாக குடிநீர் லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் பேசும்போது, “அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

வெள்ளத்தைப் பார்வையிடும் எஸ்.பி மணிவண்ணன்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் படகுகள் மூலம் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வெள்ளச் சேதங்களைத் தடுக்க 24 மணி நேரமும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், “நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழைக்குப் போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதனால்தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.

flood 2 Tamil News Spot
ஆய்வுக் கூட்டம்

நிமிடத்திற்கு நிமிடம் நெல்லை மாவட்டத்தின் மழை வெள்ளம் நிலவரத்தை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். நெல்லை தென்காசி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தளங்கள் இருப்பதால் அங்கு எந்தச் சேதமும் ஏற்படாத வகையில் முதல்வரின் உத்தரவுப்படி அதிகாரிகள் பணியாற்றிவருகிறார்கள்” என்றார்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு மற்றும் தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா அணை, ராமநதி அணை ஆகிய அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

flood 3 Tamil News Spot
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள்

அதனால் நெல்லை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியான அபூர்வா இங்கேயே முகாமிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. பண்டிகை காலத்திலும் அதிகாரிகளின் செயல் பாராட்டுக்குரியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “மழை குறையத் தொடங்கியிருப்பதால் படிப்படியாக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது. அதனால் தாமிரபரணி ஆற்றில் அபாயகரமான சூழ்நிலை குறைந்துள்ளது.

flood 2 Tamil News Spot
செய்தியாளர்களிடம் பேசும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயிர் சேதங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது. எனினும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.” என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *