Share on Social Media


கடலுார் : கடலுார் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொர்ணவாரி பருவங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. அனைத்து வகையான பயிர்களை சாகுபடி செய்தாலும் நெற்பயிரே பிரதான சாகுபடி பயிராக உள்ளது. மாவட்டத்தில் நிலத்தடி நீரைக் கொண்டு காவிரி பாசன பகுதிகளில் குறுவை சாகுபடியும், காவிரி பாசனம் அல்லாத பகுதிகளில் சொர்ணவாரி சாகுபடியும் செய்வது வழக்கம்.கடலுார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 85 ஆயிரம் ஏக்கர் அளவில் குறுவை மற்றும் சொர்ணவாரி சாகுபடி செய்யப்படுகிறது.

நடப்பாண்டில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்குத் தேவையான இடுபொருட்கள் கிடைக்காததால் பணிகளில் தாமதம் ஏற்பட்டு பயிர்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக தளர்வுடன் கூடிய ஊரடங்கில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்ட போது சில விவசாயிகள் இடுபொருட்களை வாங்கி உரிய நேரத்தில் பயன்படுத்தி பயிர்களை பராமரித்து வந்தனர். நகர பகுதிகளில் மட்டுமே பாதிப்புகளை உருவாக்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது கிராமப் பகுதிகளிலும் பரவி பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், தமிழக அரசு, தளர்வுகள் அற்ற ஊரடங்கு அறிவித்து கடுமையாக செயல்படுத்தி வருகிறது.
இதனால், உரங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளும் மூடப்பட்டதால் இடுபொருட்களான களைக்கொல்லி மருந்துகள், உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.சில விவசாயிகள் விதைகள் வாங்க முடியாமல் பருவம் தவறி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். தளர்வற்ற ஊரடங்கு காலத்தில் குறுவை மற்றும் சொர்ணவாரி பருவ சாகுபடி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விதைகள், பூச்சி மருந்துகள், யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் உரங்கள் அனைத்தையும் ஒரு சேர விற்பனை செய்ய காலை 6:00 மணி 9:00 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளித்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இது குறித்து கடலுார் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில்: ‘அண்டை மாவட்டங்களில் நிபந்தனையுடன் விற்பனை செய்யும் கடைகள் காலை நேரங்களில் இரண்டு மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளையும் திறக்காமல் ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடைபெறும் பகுதிகளை அடையாளம் கண்டு காட்டுமன்னார்கோயில், குமராட்சி, சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத் தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, வடலுார், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலுார், கம்மாபுரம், விருத்தாசலம் பெண்ணாடம், திட்டக்குடி ஆகிய முக்கிய ஊர்களில் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் பட்சத்தில் சுற்றுபுற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *