Share on Social Media


பள்ளி மாணவிகளிடம் காமக் களியாட்டங்களை அவிழ்த்துவிட்ட பல ஆசிரியர்கள் அடுத்தடுத்து சிக்குவது தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த பாலியல் அத்துமீறல் கொடுமை பள்ளிகளில் மட்டுமல்ல, பல அரசு அலுவலகங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கூட அரங்கேறுகின்றன. சில நாள்கள் பத்திரிக்கை செய்திகளோடும், டி.வி மீடியாக்கள் பரபரப்போடும் அந்த சம்பவங்கள் காற்றோடு கரைந்துவிடுகின்றன. குற்றமிழைத்தவர்களும் அவரவர் பணியை பாதுகாத்துக் கொண்டு பதுங்கிவிடுகிறார்கள். பணிபுரியும் இடத்தில் பாலியல் டார்ச்சர் என்றால், விசாகா கமிட்டி விசாரணை, உயரதிகாரிகள் விசாரணை என்றெல்லாம் எத்தனையோ சட்டங்கள் இருந்தாலும், அவையெல்லாம் யாரும் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன என்பதற்கு தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு நேர்ந்த கொடுமைகளே ஒரு உதாரணம்.

பாலியல்

2018 ஆகஸ்டு மாதம், லஞ்ச ஒழிப்புத்துறையின் இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி. முருகன் மீது அதே துறையில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் அத்துமீறல் புகார் ஒன்றைக் கொடுத்தார். அப்போதைய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் ஆதாரங்களுடன் அளிக்கப்பட்ட இந்தப் புகார் தொடர்பான விவரங்கள் வெளியானபோது, தமிழக காவல்துறையே கிடுகிடுத்துப்போனது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அதிகாரி அங்கிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதேநேரம், குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஜி. முருகன் மட்டும் அதே லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் தொடர்ந்தார். இந்த விவகாரத்தை பெண்கள் அமைப்பினர் கையில் எடுத்ததால், வேறு வழியில்லாமல் ஐ.ஜி. முருகனை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றியது அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு.

Also Read: ஐ.ஜி. முருகன் – பெண் எஸ்.பி விவகாரம்..! -`திடீர்’ திருப்பம்

ஏற்கெனவே அதே துறையில் அந்தப் பெண் அதிகாரி இருப்பது கூட தெரியாமல் முருகனை அங்கே பணிமாற்றம் செய்தனர். பிறகு, சுதாரித்துக்கொண்டு தென்மண்டல ஐ.ஜி-யாக முருகனை பணிமாறுதல் செய்தனர். சில மாதங்களில் அந்தப் பெண் அதிகாரியையும் மாற்றி, சென்னை மாநகர போலீஸின் முக்கிய பதவிக்கு மாற்றினர். தேர்தல் நேரத்தில் மதுரையிலிருந்த ஐ.ஜி. முருகன் திடீரென மாற்றப்பட்டு, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் போலீஸ் நவீனமாக்குதல் என்கிற பிரிவின் ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். இப்போது, அவரை ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி-யாக நியமித்திருக்கிறது தி.மு.க அரசு.

IMG 20210122 171850 Tamil News Spot
ஐ.ஜி முருகன்

இவ்வளவு நடந்தும், ஐ.ஜி. முருகன் மீது அன்று முதல் இன்று வரை எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. முருகன் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து விசாரித்த கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையிலான குழுவினரின் பரிந்துரைபடி, முருகன் மீது செப்டம்பர், 2018-ல் சி.பி.சி.ஐ.டி வழக்குப் பதிவு செய்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தனக்கு நீதி கிடைக்காது என்று சொல்லி விசாரணையை தமிழகத்துக்கு வெளியே நீதிமன்றக் கண்காணிப்புடன் சி.பி.ஐ. மாதிரி ஏதாவது விசாரணை ஏஜென்சி விசாரிக்க வேண்டும் என்று பெண் அதிகாரி எதிர்பார்த்தார். சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையை தெலங்கானா மாநில காவல்துறைக்கு மாற்றியது. இதை எதிர்த்து முருகன் தரப்பு சில பாயிண்டுகளை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. அதே நிலை இன்று வரை நீடிக்கிறது. அதை விலக்க ஏனோ தமிழக அரசு அக்கறை காட்டவில்லை.

Also Read: `காருக்குள் என்ன நடந்தது?!’ – பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகாரில் இருப்பது என்ன?

2021 பிப்ரவரி மாதம், தமிழக போலீஸின் சிறப்பு டி.ஜி.பி மீது மற்றொரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் புகார் அளித்தார். பெண் அமைப்புகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்தபிறகுதான், புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்தது தமிழக அரசு. ‘பல்வேறு ஆதாரங்களுடன் ஐ.ஜி முருகன் அளிக்கப்பட்ட புகார் மீது அரசு உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால், மற்ற காக்கிகளுக்கு தைரியம் வந்திருக்குமா?’ என்று பெண் போலீஸார் குமுறுகிறார்கள்.

மூத்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “முருகன் மீது அந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்திருக்கும் புகாரைப் பார்த்தால், பலருக்கும் உடல் பதறிவிடும். சி.பி.ஐ-யில் ஆறரை வருடங்களுக்கு மேல் பணியாற்றியதால், டெல்லியில் முருகனுக்கு பல அதிகாரிகளும் பழக்கம். அதைவைத்து, குட்கா, நெடுஞ்சாலைத்துறை ஊழல் புகார் உள்ளிட்ட புகார்களில் அமைச்சர்களை முருகன் பாதுகாப்பார் என எடப்பாடி அரசு கருதியது. அதனால், அவர்களும் முருகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாதுகாத்தனர். அவர் மீது புகாரளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தனக்கு ஏற்பட்ட மனவலியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கடந்த இரண்டாண்டுகளாக சென்னையில் பாலியல் டார்ச்சருக்கு உள்ளாகும் பெண்களுக்கு கவுன்சிலிங் அளிப்பது, துணிந்து புகார் கொடுக்க வைப்பது என்று பிஸியாக இருக்கிறார். புதிய அரசு பதவி ஏற்றதும், அந்த பெண் அதிகாரி மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கூட, தனது பிரச்னை பற்றி ஏதும் பேசவில்லை. தனக்கான நியாயம் சட்டப்படி கிடைக்குமென நம்புகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தை உடனே கையில் எடுத்து, ஐ.ஜி. முருகன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கையாவது எடுக்க வேண்டும் என்பதே சக பெண் அதிகாரிகளின் எதிர்பார்ப்பு” என்றார்.

108856 thumb Tamil News Spot
ஸ்டாலின்

தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவரான டாக்டர் கே. சாந்தகுமாரியிடம் பேசினோம்.“ஐ.ஜி முருகன் விவகாரம் வெளியே வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. பாலியல் கொடுமை வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. இவருக்கே நியாயம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், வேறு யாருக்கு கிடைக்கும்? விசாரணையில் வீண் காலதாமதம், நீதிமன்றத்தில் வழக்கு மேல் வழக்குப் போடுவது என்றால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்காது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்டே என்பது, இடைக்கால உத்தரவு மட்டும்தான். உரிய காரணங்களை சொல்லி அரசு தரப்பில் ஸ்டேவை விலக்கினால் இறுதி உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும். அப்படி உத்தரவு வந்தாலே, வழக்கு ரீ ஒபன் ஆகிவிடும். அது ஏன் இதுவரை நடக்கவில்லை என்று தெரியவில்லை. மற்ற வழக்குகளை டீல் செய்வது போல் இல்லாமல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணையை குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஸ்பெஷல் கோர்ட், அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் என்று ஜூடிசியல் சிஸ்டத்தை மாற்றினால்தான், பாலியல் குற்றவாளிகள் பயப்படுவார்கள். குற்றங்களும் நடக்காது” என்றார்.

ஐ.ஜி முருகன் மீது உரிய விசாரணையை நடத்தி, அப்போதே அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், பெண் அதிகாரி மீது கைவைக்கும் துணிச்சல் சிறப்பு டி.ஜி.பி-க்கு வந்திருக்காது. அந்த பயம், அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, ராஜகோபாலன் போன்ற ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். அந்த சந்தர்ப்பத்தை எடப்பாடி அரசு தங்கள் சுயநலத்தால் பயன்படுத்த தவறியது. ஸ்டாலினாவது சுதாரித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பெண் காக்கிகளின் எதிர்பார்ப்பு.

மே 2-ம் தேதியன்று இந்த வழக்கை கவனித்து வந்த சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஐ.ஜி-யான தேன்மொழியை அங்கிருந்து வேறு பதவிக்கு மாற்றவிட்டனர். காலியான அந்த இடத்திற்கு ஜோஷி நிர்மல் குமாரை நியமித்துள்ளனர். இவர்தான், முருகன் வழக்கு விவகாரங்களை கவனிக்கப்போகிறார்.

இவரைப்போலவே, அதே பிரிவில் கூடுதல் எஸ்.பி-யாக இருந்த பெண் அதிகாரியும் பதவி உயர்வில் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *