Share on Social Media


தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை: சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வில், காவிரி ஆறு மருத்துவ கழிவு, ரசாயனப் பொருட்கள், பிளாஸ்டிக் குப்பைகள், பூச்சிக்கொல்லிகளால் மிகவும் மாசு பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் அடையாளமாக திகழும் நம் காவிரி, மாசு படுவதை தடுக்க, காவிரியை பாதுகாக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி நதி மட்டுமின்றி, நம் மாநிலத்தில் பாயும் அனேக நதிகள் இப்படித் தான் உள்ளன. இதற்காக, காவிரியை காப்போம் என யாராவது உண்மையான அக்கறையுடன் கிளம்பினால், உங்கள் கட்சியினர் அவரை மட்டம் தட்டி விடுகின்றனர்… என்ன செய்வது?

தமிழக காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: ‘சபாநாயகர் ரோம் நகரில் உள்ளார். ராஜ்யசபா துணைத் தலைவர் வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். பார்லிமென்ட் நிலைக்குழுக்கள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை’ என காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார். ஆம். பார்லிமென்ட் கமிட்டிகள் அவர்களை பொறுத்தவரை தேவையற்றவையே!

பார்லிமென்ட் கூடியதும், இரு சபைகளையும் நடத்த விடாமல் அமளி செய்து, எந்த அலுவலும் நடைபெற விடாமல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்த்துக் கொள்கின்றனர். அவர்கள், கமிட்டி நிலை பற்றி கவலைப்படுவது வினோதமாகத் தான் இருக்கிறது… காசு, பணம் எதுவும் காரணமாக இருக்குமோ!


தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை
: பெரம்பலுார் மாவட்டம், சிருவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள், நீண்ட காலமாக மக்கள் வழிபட்டு வந்த சிலைகளை தகர்த்துள்ளனர். இது மிகவும் அடாவடித்தனமானது. இந்த அட்டூழியத்தை செய்தவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களை செய்தவர்களுக்கு, சில தமிழக அரசியல் கட்சிகள் தான் உத்வேகமாக இருந்திருக்கும். ஏனெனில், அந்த கட்சிகள், ஹிந்து மதத்தை குறிவைத்து தாக்குவதை, இந்த நபர்கள் தவறாக நினைத்து, சிலைகளை தகர்த்து விட்டனரோ?

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தை, 300 நாட்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். மேலும், இந்த திட்டம் கிராமப்புறங்களில் மட்டுமே உள்ளது. அதை, நகர பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

கொஞ்சம் மெதுவாக சொல்லுங்கள். நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான் காதுகளுக்கு கேட்டு விடப் போகிறது. 100 நாள் பணியாளர்கள் மீது பயங்கர காண்டாக இருக்கிறார். அதுபோல, அவர் மீதும், 100 நாள் பணியாளர்கள் கடும் காட்டமாக உள்ளனர்!

யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை:சமஸ்கிருத மொழியில் உள்ள திருக்கோவில்களின் பெயரை தமிழுக்கு மாற்றுவது இருக்கட்டும்… கடவுள் மறுப்பாளர்களுக்கு இதில் என்ன திடீர் அக்கறை? அதற்கு முன்மாதிரியாக தமிழக முதல்வரின் பெயரை தமிழில் மாற்ற அமைச்சர் சேகர்பாபு முயற்சிக்கலாமே!

கருணாநிதி குடும்பத்தில் துாய தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று கிளம்பினால், கருணாநிதி துவங்கி கடைசி பேரன், பேத்தி வரை ஏராளமானோருக்கு வைக்க வேண்டி வரும். அந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் சமஸ்கிருத பெயர் மோகம் உள்ளது!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் பேச்சு: உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தான், முதல்வர் ஸ்டாலினிடம் அவர்கள் எளிதாக பேசி, அந்தந்த பகுதிக்கு தேவையான நலத்திட்ட பணிகளை செய்ய முடியும்.

உள்ளாட்சி மன்ற வேட்பாளர்கள் மட்டுமில்லை, உங்களால் கூட, முதல்வரை அவ்வப்போது எளிதாக சந்தித்து, தேவையான நிதியை பெற முடியாது. பிறகு ஏன், அப்பாவி மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கிறீர்கள்?

டில்லி பல்கலை பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே பேச்சு: கேரளாவில் ‘லவ் ஜிகாத்’ இருப்பது போல, ‘மார்க் ஜிகாத்’தும் உள்ளது. இந்த முறை அதிகமான கேரள மாணவர்கள் டில்லி பல்கலையில் சேர்ந்துள்ளனர். அதன் பின்னணியில் இடதுசாரிகள் உள்ளனர். நாட்டின் சிறந்த பல்கலைகளைக் கைப்பற்ற கேரளாவில் உள்ள இடதுசாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அட கம்யூ.,க்கள் இப்படி எல்லாமா சதி வேலையில் ஈடுபடுறாங்க… என்ன செய்தாலும் அவர்களால் தமிழகத்தில் ஒரு வார்டில் கூட தனித்து வெற்றி பெற முடியாதே!

தி.மு.க., – அ.தி.மு.க., கட்சிகளில் இருந்து, பா.ஜ.,வுக்கு வந்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நடிகர் ராதாரவி பேட்டி: எனக்கு மூடி மறைத்து பேசத் தெரியாது. பிற கட்சிகளில் இருந்த போதும் இப்படித் தான் இருந்தேன். இப்போதும் அப்படித் தான் இருப்பேன். என்னை இரண்டாம் தர பேச்சாளர் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அது பற்றி எனக்கு கவலையில்லை.

எதற்கும் கவலைப்படாதவர் எதற்காக, பா.ஜ.,வில் சேர்ந்தாரோ தெரியவில்லை. நான் இப்படித் தான் இருப்பேன் என்பவர், அரசியலுக்கு வராமல் இருந்திருக்கலாம்!

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் போக்கை தி.மு.க., அரசு நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இத்தகைய போக்கை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

தி.மு.க., தலைமை மற்றும் அக்கட்சியில் இருப்பவர்கள் வேண்டுமானால், ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தலாம். ஆனால், முதல்வர் மனைவி, ‘அக்மார்க்’ ஹிந்து பெண்ணாக விளங்குகிறார். அவர் இன்னும் எல்லா வளங்களையும் பெற இறைவன் அருள் பாலித்து வருகிறார்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *