Share on Social Media


கடைசி நிறுத்தம் மைசூர். நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை. மைசூர் அவ்வளவு சுத்தம். ஊர் வெகு அமைதியாக அழகாக இருந்தது. மைசூர் சென்று அரண்மனை பார்க்கவில்லை என்றால்? நன்றாகச் சுற்றிப் பார்த்து, இரவில் ‘ஒளியும் ஒலியும் காட்சி’யும் பார்த்து அனுபவித்தோம்.

நம் மக்களின் உழைப்புக்கும் உன்னதமான கலைக்கும் அரண்மனை ஒரு சாட்சி. அடுத்த சாட்சி பிரமாண்டமான ‘விதான் சவுதா’ கட்டிடம். இரவில் ஒளியூட்டி நன்றாகவே இருந்தது. பெங்களுருவில் KSIC கடையில் புடவை வாங்கினோமே… அந்த புடைவைகள் நெய்யப்படுவது மைசூரில்தான். அந்தச் தொழிற்சாலைக்குள் சென்று பார்த்தோம். சுரத்தேயில்லாமல் சுற்றி காட்டினார்கள்.

பின்னர் அருகிலுள்ள சில கோவில்களைப் பார்த்துவிட்டு, 12 நாள் கழித்து பெங்களூரு வழியாக சென்னைக்கு வண்டிபிடித்து வந்தோம்.

சம்பத் பற்றி சொன்னேன் அல்லவா? தலைக் காவிரியில் ஒரு கோவிலுக்கு சென்று திரும்புகையில் நாங்கள் வெறும் காலுடன் நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க வேண்டி சம்பத் கோவிலுக்கு அருகில் வர முயற்சித்தார். நாங்கள் நடந்து வருகிறோம் என்று சொல்லியும்கூட… ஒரு குறுகிய திருப்பத்தில் சம்பத் தவறு செய்ய, வண்டிக்கு சிறிய சேதம். எங்களுக்கு மிகவும் வருத்தம். சம்பத், “அது என் தவறு நீங்கள் வருந்த வேண்டாம், எனக்கு காப்பீடு கிடைக்கும். நஷ்டம் எதுவுமில்லை” என்றார். அந்த ஒரு சிறு நிகழ்வு தவிர, சம்பத்தின் ஓட்டுதல் டாப் கிளாஸ். அவருக்கு நன்றி சொல்லி அவர் பிள்ளைக்கு சிறு அன்பளிப்பு கொடுத்து ரயில் ஏறினோம்.

நம் மக்கள் நினைத்தால் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்கு இந்தச் சுற்றுலாவில் இன்னும் பல உதாரணங்கள். ரயில்வே துறை மிகவுமே சிறப்படைந்துள்ளது. ஸ்டேஷன் மற்றும் ரயில்களும் நல்ல சுத்தம். நல்ல வசதிகள். நேரம் தவறாமல் வந்து சேர்ந்தோம்.

சென்னையில் அய்யப்பன் ‘அ’யம் வைட்டிங்’ என்பது போலக் காத்திருந்து எங்களைப் பத்திரமாக பாண்டி கொண்டுவந்து சேர்த்தார். 12 நாட்கள் நீள் பயணம். கொஞ்சம் ஓய்வு தேவை. எடுத்தோம்!

அடுத்து செட்டிநாட்டு பயணம். என் அலுவலகத்தில் சில நண்பர்கள் (நாட்டுக்கோட்டை சார்ந்தவர்கள்) என் ஆவலைத் தூண்டினார்கள். கூடவே, என் அண்ணனின் நெருங்கிய நண்பர், ‘நான் சுற்றிக் காட்டுகிறேன்’ என்று அழைத்தார். எல்லாம் சேர்ந்து ஒரு மூன்று நாட்கள் கானாடு காத்தானில். அடுத்த வாரம், எப்படி இந்தப் பயணம் மீண்டும் என்னை வரக்கால்பட்டிக்கு மனப் பயணம் செய்ய வைத்தது என்று பார்ப்போம்.

சங்கர் வெங்கடேசன்

([email protected])

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *