கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த தி.மண்டபம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடிகள் குடியிருப்பைச் சேர்ந்தவர் காசி. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி, திருட்டு வழக்கில் திருக்கோவிலூர் காவல்துறையினரால் இவர் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அன்று இரவு 8 மணி அளவில் அதே பழங்குடிகள் குடியிருப்புக்குள் நுழைந்த திருக்கோவிலூர் காவல்துறையினர், 10 சவரன் நகை, 2,000 ரூபாய் ரொக்கம், 4 செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் போன்றவற்றை அங்கிருந்து எடுத்துக்கொண்டு, குடியிருப்பைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், காவலர்கள் அங்கிருந்து 4 பெண்களைத் தனி வாகனத்திலும், 10 பேரை மற்றொரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
காவலர்கள் பழங்குடிகள் குடியிருப்பிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 4 பெண்களையும் அன்றிரவே அருகிலிருந்த தைலத்தோப்பு பகுதியில் வைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காசியின் மனைவி லட்சுமி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதையடுத்து, இந்த புகாரில் சம்பந்தப்பட்ட திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன், சிறப்புக் காவல் துணை ஆய்வாளர் ராமநாதன், காவலர்கள் தனசேகரன், பக்தவச்சலம், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டது அப்போதைய தமிழக அரசு. பெரும் பேசுபொருளான இந்த புகார் தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் வெளியானதை அடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது மனித உரிமைகள் ஆணையம்.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மனித உரிமைகள் ஆணையம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15 நபர்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது.