Share on Social Media


புதுச்சேரி, டிச. 8-‘புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாகபராமரிக்கப்படாத காலி மனைகளின் அரசு வழிகாட்டி மதிப்புபூஜ்யமாக்கப்படும்’ என, ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 20 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் அசுர வளர்ச்சி அடைந்தது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் கடந்த கால வளர்ச்சி மற்றும் வசதிகளை பார்த்து, அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் புதுச்சேரியில் நிலம் வாங்க அதிக ஆர்வம் காட்டினர். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக முதலீடு செய்தனர்.தற்போது ரியல் எஸ்டேட் தொழிலில் சற்று மந்த நிலை நிலவுகிறது. இதனால், ஏற்கனவே வாங்கி வைத்துள்ள மனைகளை விற்பனை செய்து, லாபம் பார்த்து வருகின்றனர். சிலர் நில மதிப்பீடு உயரும் என கருதி, மனைகளை விற்பனை செய்யாமலும், வீடு கட்டாமலும் காலியாக போட்டு வைத்துள்ளனர்.இத்தகைய காலி மனைகளில், செடி கொடிகள் வளர்ந்து, குறுங்காடு போல இருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் உள்ளது. பல காலி மனைகள், குப்பை கொட்டும் இடமாக மாற்றப்பட்டு விட்டன. தாழ்வான இடத்தில் உள்ள காலி மனைகளில், கழிவுநீர் மழைநீர் தேங்கி, குளமாக காட்சி அளிக்கிறது.இவ்வாறான காலி மனைகளால் கடும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால், அருகில் வசிக்கும் குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.புதர் மண்டிய காலி மனைகளில் இருந்து விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால், அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது .இது குறித்து புதுச்சேரி நகராட்சிக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றன.அதை தொடர்ந்து, பராமரிப்பில்லாத காலி மனைகளை, அதன் உரிமை யாளர் மறு விற்பனை செய்ய முடியாதபடி, அரசு வழிகாட்டி மதிப்பை (ஜி.எல்.ஆர்.) பூஜ்ஜியமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலி மனைகள் உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் மனையில் கட்டுமானம் துவக்கும் வரை, மனை தொடர்பான ஆவணங்களை புதுச்சேரி நகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.அத்துடன், கடந்த 2000ம் ஆண்டு முதல், மனைகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பு பதிவேட்டின்படி, மனையின் மதிப்பு தொகையில் 0.1 சதவீதம் காலி மனை வரியாக செலுத்த வேண்டும்.இந்த வரி செலுத்துவது, சட்டப்படி காலி மனை உரிமையாளர்களின் கட்டாய கடமை. காலி மனை களை முறையாக பராமரிப்பது, அதன் உரிமையாளரின் குறைந்தபட்ச அடிப்படை கடமையாகும்.அவ்வாறு பராமரிக்காததால், காலி மனைகளில் குப்பைகள், கழிவுநீர், மழைநீர் சேர்ந்து கொசு உருவாகி அக்கம் பக்கத்தினருக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.காலி மனையில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து, அதில் வாழும் பாம்பு போன்ற விஷ உயிரினங்களால் அருகில் வசிப்பவர்களுக்கு உயிர் பயம் ஏற்படுவதற்கும் காரணியாக உள்ளது. இது, புதுச்சேரி நகராட்சி சட்டப்படி தண்டனைக்குரிய குற்றவியல் செயல்.இத்தகைய காலிமனை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் தொலைபேசி வழியாகவும், களப்பணியில் ஈடுபடும் நகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாக புகார் தெரிவிக்கின்றனர்.வீடு கட்ட மனை வாங்கி வைத்திருப்போரைவிட, மனையின் சந்தை மதிப்பு ஆண்டுதோறும் உயர்வதை கருத்தில் கொண்டு, மறு விற்பனை மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என வியாபார நோக்கில் மனைகளை வைத்திருப்பவர்கள் அதிகம்.காலி மனைகளின் உரிமையாளர்களில் சிலர் வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், சிலர் புதுச்சேரியின் பிற பகுதிகளில் வசித்து வருவதால், சரியான முகவரி நகராட்சிக்கு கிடைக்க பெறவில்லை.

அதனால், காலிமனை உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.எனவே, புதுச்சேரி நகராட்சி, காலி மனை வரி செலுத்தப்படாத மற்றும் பராமரிப்பு செய்யாத காலி மனைகளின் விபரங்களான வருவாய் கிராமம், சர்வே எண், டவுன் சர்வே எண் ஆகியவற்றை சேகரித்து வருகிறது.இத்தகைய மனைகளின் அரசு வழிகாட்டி மதிப்பு பதிவேட்டில் உள்ள (ஜி.எல்.ஆர்.) மதிப்பினை இழக்கச் செய்வது. அதாவது, மனையின் மதிப்பு தொகையை பூஜ்ஜியமாக ஆக்குவது என்ற பரிந்துரையை, வருவாய் துறைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.அவ்வாறு நடைபெற்றால், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய காலிமனை வரி உட்பட அனைத்து வரிகளும் மற்றும் அபராத தொகை வசூலித்த பிறகு மீண்டும் ஜி.எல்.ஆர்., மதிப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.இதனை தவிர்க்க, காலி மனை உரிமையாளர்கள், உடனடியாக நகராட்சியை உரிய ஆவணங்களுடன் அணுகி, காலி மனை வரியை செலுத்த வேண்டும்.

மேலும், காலி மனைகளால் அருகில் வசிப்பவர்களுக்கு சுகாதார கேடு மற்றும் விஷ பூச்சிகள் ஆபத்து ஏற்படாதபடி, மழைநீர் தேங்காதவாறு நன்கு பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.எச்சரிக்கை மட்டும் போதாதுகாலி மனையில் மழைநீர் தேங்கினால், குப்பை குவித்து வைத்திருந்தால், மனை உரிமையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, கடும் நவடிக்கை எடுக்கப்படும் என பல முறை நகராட்சி எச்சரிக்கை விடுத்தது. ஆனால், ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை.நகராட்சியின் பணி, எச்சரிக்கையுடன் முடிந்து விடுகிறது. அந்த வரிசையில் இந்த எச்சரிக்கையும் இல்லாமல், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் காலிமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *