Aus v Ind new Tamil News Spot
Share on Social Media

வரலாற்று சிறப்புமிக்க தொடராக மாறிக்கொண்டிருக்கிறது பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட்டில் மிகவும் அவமானகரமானத் தோல்வியை சந்தித்த இந்தியா, மெல்போர்ன் டெஸ்ட்டில் மீண்டு வந்தது. அதுவும் கேப்டன், ரன் மெஷின் கோலி இல்லாமல் இந்தியா பெற்ற இவ்வெற்றி மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை அணிக்குள் உருவாக்கியது. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில், இந்தியா தோல்வியடையும் என்கிற சூழலில், வெற்றியை நோக்கிப் பயணித்து பின்னர் டிரா செய்தது.

இந்நிலையில்தான் நாளை பிரிஸ்பேனில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் தொடங்கயிருக்கிறது. இந்த டெஸ்ட்டில் இந்தியா வென்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற சாதனையைப் படைக்கும். அதுவும் கடந்தமுறை போல் இல்லாமல் வார்னர், ஸ்மித்தை எதிர்கொண்டு, கோலி இல்லாமல் பெற்ற வரலாற்று வெற்றியாக மாறும். ஓகே… பிரிஸ்பேன் டெஸ்ட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

Brisbane Gabba Tamil News Spot
பிரிஸ்பேன்

பிரிஸ்பேன்… ஆஸ்திரேலியாவின் கோட்டை!

பிரிஸ்பேன் ஆஸ்திரேலியாவின் கோட்டை எனச் சொல்லுமளவிற்கு பல வெற்றிச் சரித்திரங்களை அவர்கள் இங்கே பதிவேற்றி உள்ளனர். குறிப்பாக, 1988-ம் ஆண்டிற்குப் பிறகு இங்கே ஒருமுறை கூட ஆஸ்திரேலியா தோல்வியைத் தொட்டதில்லை என்பது வரலாறு! அந்தக் கால கட்டத்திற்குப்பின் இங்கே விளையாடிய 31 டெஸ்ட் போட்டிகளில், 24 முறை ஆஸ்திரேலியா, எதிரணியை வீழ்த்தியுள்ளது! மிச்சம் 7 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. இந்தியாவோ இங்கே விளையாடிய ஆறு போட்டிகளில், ஐந்தில் தோற்று, ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்துள்ளது.

வேகம்தான் வின்னர்!

வேகப்பந்து வீச்சுக்கு ஆதரவளிக்கும் வேடந்தாங்கல், பிரிஸ்பேன் மைதானம். கடந்த 10 வருடங்களில், இங்கே நடந்துள்ள 20 போட்டிகளில், 223 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலிய பெளலர்கள் இங்கே 54 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் எடுத்துள்ளார்கள் எனில், மற்ற நாட்டைச் சேர்ந்த பெளலர்கள் சராசரியாக 78.7 பந்துகளுக்கு ஒருமுறைதான் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனால்தான் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், பும்ராவைத் தவிர்த்து தற்போது அணியிலுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும், இரண்டு டெஸ்டுக்கு மேல் விளையாடியவர்கள் இல்லை என்பது பெரும்சோகம்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்?

சிட்னியில், ஓப்பனராகக் களம்கண்டு, தனது புதுவரவை அரைச்சதத்தினால் அடித்துக் கூறிய புகோவ்ஸ்கி காயம் காரணமாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ஹாரிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்! மற்றபடி அணியில் எந்த மாற்றமுமில்லை.

Will Tamil News Spot
#AUSvIND

காயம் செய்யும் மாயம்:

ஆஸ்திரேலியாவைவிட, காயங்கள்தான் இந்தியாவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது! ஏற்கெனவே கோலி, இஷாந்த் உள்ளிட்ட ஸ்டார் ப்ளேயர்கள் இல்லாத நிலையில், காயம் காரணமாக, இந்திய வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக அணியை விட்டு விலகி வருகின்றனர். இதனாலேயே, ஷமி, உமேஷ், கேஎல் ராகுல் என கடந்த போட்டிக்கு முன்னதாகவே, சில பெயர்கள் இந்திய பட்டியலிலிருந்து நீக்கப்பட, தற்போது பும்ரா, விஹாரி, அஷ்வின், பன்ட், மயாங்க், ஜடேஜா ஆகிய வீரர்களும் காயத்தால் அவதிப்படுவது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. முழு வலிமையிலுள்ள ஆஸ்திரேலியாவை, கல்யாண வீட்டில் செய்யப்படும் கடைசிநேரக் கிச்சடி போல இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் இந்தியா உள்ளது.

இன்னும் ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலும், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பயிற்சியாளர்கள் யாரேனும்தான், களத்தில் இறங்க வேண்டி இருக்கும் என்ற கிண்டலுக்கு ஏற்றாற் போல்தான் இந்தியாவின் நிலையும் இருக்கிறது. இதற்கும் ஒருபடி மேலே போய், ‘விளையாட 11 வீரர்கள் முழுத்தகுதியுடனில்லை என்ற காரணத்தால் போட்டி ரத்தாகுமா, அப்படி எதுவும் இதுவரை நடந்திருக்கிறதா?!’ என இணையத்தில் தேடும் அளவுக்கு இந்திய ரசிகர்களை எடுத்துச் சென்றிருக்கிறது காயங்கள்!

Team India Tamil News Spot
#AUSvIND

ப்ளேயிங் லெவன் அறிவிப்பு?!

இந்தத் தொடரில் எல்லாப் போட்டியிலும், ஆஸ்திரேலியாவை முந்தி, முந்தைய நாளிலேயே ப்ளேயிங் லெவனை அறிவித்தது இந்தியா. அதில் இந்தியாவின் துணிந்து இறங்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் கண்கூடாய்த் தெரிந்து வந்தது! ஆனால் இன்று பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர், செய்தியாளர்கள் சந்திப்பில், பல வீரர்களும் காயத்தால் அவதிப்படுவதால், நாளை டாஸின் போதுதான் ப்ளேயிங் லெவனை இறுதி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். ‘ஃபிட்டெஸ்ட் வில் சர்வைவ்’ என டார்வின் கூறியதைப் போல, விளையாடும் தகுதியை விட, உடல்தகுதியை மட்டுமே வைத்து வீரர்களைத் தேர்வு செய்யும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது!

பெளலிங் படையில் யார் யார்?!

Bumrah new 2 Tamil News Spot
#AUSvIND

இந்தியா இம்முறை ஐந்து பெளலர்களுடன் களம்காணுமா அல்லது நான்கு பேருடனா என்னும் குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. மேலும் பும்ரா காயத்தால் அவதியுறும் நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ், ஒரே போட்டியில் விளையாடியுள்ள சைனி, ஒரு போட்டியில், 11 பந்துகளே வீசிய தாக்கூர், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத நடராஜன், இவைதான் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் அனுபவமே! அல்லுறவைக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இவர்கள் எந்த அளவிற்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே.

அஷ்வின் ஆடாவிட்டாலும் குல்தீப் இருக்கிறார் என்றாலும், மறுபுறம் 400 விக்கெட்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் லயானுக்கு இவர் சரிசமமாய் சாதிப்பாரா என்ற பயம் எழாமல் இல்லை. பும்ரா மற்றும் அஷ்வின் மீண்டு வருவதைப் பொறுத்துதான், எல்லாச் சமன்பாடுகளையும் இந்தியா வகுக்கும்.

இந்திய பேட்டிங்!

கடந்த போட்டியில் ஓரளவு சிறப்பான துவக்கத்தைக் கொடுத்த கில் மற்றும் ரோஹித்தே ஓப்பனிங்கில் தொடர்வார்கள். புஜாரா மற்றும் ரஹானேவின் இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பேட்டிங் இடங்களிலெல்லாம் யார்யார் ஆடுவார்கள் என்பதில் குழப்பம் நீடிக்கத்தான் செய்கிறது. பன்ட் ஆடுவாரென்பது ஊர்ஜிதமானாலும், விஹாரி மற்றும் மயாங்க் இல்லாத நிலையில், சாஹாவும் அணியில் சேர்க்கப்படலாம். மயாங்க் உடல் தகுதிபெறுகிறாரா என்பதைப் பொறுத்துதான் எல்லாம் மாறும். அணியின் பீமனான ஜடேஜாவின் இடத்தை யாருமே ஈடுசெய்ய முடியாதெனினும் அதை நிரப்பவாவது ஒருவரை இந்தியா இனங்காண வேண்டும்! பேட்டிங்கைப் பலம் கொண்டதாக்க எல்லா வழிகளிலும் முனைய வேண்டும்.

Rohit new Tamil News Spot
#AUSvIND

சறுக்குமர சவால்கள்!

இந்தத் தொடரின் தொடக்கம் முதல் பல சவால்களை இந்தியா தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் பதினோரு வீரர்களை எதிர்கொள்வது மட்டுமின்றி கொரோனா, பயோ பபிள் ஏற்படுத்தும் மன உளைச்சல், ஆஸ்திரேலிய வீரர்களின் வார்த்தை வீச்சுக்கள், அவர்களது ரசிகர்களின் இனவெறி விஷவார்த்தைகள், காயங்கள் தரும் கசையடிகள் என பலமுனைத் தாக்குதல்களை இந்தியா நெஞசுரத்தோடு எதிர்கொண்டு வருகிறது. சறுக்குமரமாய் சவால்கள் இடறிவிழ வைத்தாலும், ஒவ்வொரு இடர்பாடையும் தம்மை முன்னோக்கி நகர்த்தும் காரிய ஊக்கியாகவே பார்க்கும் நேர்மறை நோக்கத்துடன் இந்தியா விளையாடி வருகிறது.

துவள வைக்கும் தோல்வியிடமே சென்று, வெற்றியின் விலாசத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு, சாதித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. இந்த வெற்றிகளே, ரசிகர்களுக்கு இந்திய அணியின் மீதான நம்பிக்கையை தற்போது பலமடங்கு உயர்த்தி உள்ளது. அதைப் பொய்யாக்காது அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்துச் செல்ல இந்தியாவும் முழுமூச்சுடன் இறங்குமென்பதால் பரபரப்பு பற்றி எரியப் போகிறது.

India new 2 Tamil News Spot
#AUSvIND

இதுவரை டெஸ்ட் கேப்டனாக, ஒரு போட்டியில் கூட தோல்வியை முத்தமிடாத ரஹானே தனது சகாக்களோடு சரித்திரத்தில் தன் வெற்றிப் பக்கங்களை எழுதுவார் என நம்புவோம்! இரு அணிகளும் தடையறத் தாக்கிக் கொள்ளும் முதல்நாள் போட்டிக்காக, வழக்கம் போல ஐந்து மணிக்கு அல்ல, ஐந்தரை மணிக்கு அலாரம் வைத்துக் காத்திருப்போம்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *