Share on Social Media


இந்தியா கடந்த 70 ஆண்டுகளில் கண்டிராத வளர்ச்சியை, கடந்த ஏழு ஆண்டுகளில் பிரதமர் மோடி வழங்கியுள்ளார். அவரது பிறந்த நாளை, 20 நாட்கள் தொடர்ந்து கொண்டாட தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
– பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

‘காங்., அப்படியே, ‘உல்டா’வாக, ’70 ஆண்டு வளர்ச்சி, ஏழு ஆண்டுகளில் போய் விட்டது’ என்கிறதே…’ என, சொல்லத் துாண்டும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு.

முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் அடி முதல் நுனி வரை ஊழல் நடந்ததாக பேசப்பட்டது. அதை உண்மை என நிரூபிக்கும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதுகண்டறியப்படுகிறது.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

‘இதுபோலவே இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து, இன்னொரு கூட்டணி கட்சி, தி.மு.க., ஆட்சி பற்றி கூறும் பாருங்கள். தமிழகத்தில் ஊழலும், முறைகேடுகளும் எந்த ஆட்சி வந்தாலும் மறையாது…’ என, யதார்த்தத்தை சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேட்டி.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ல் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடக்கவுள்ளது. அதில் விவசாயிகள் மட்டுமின்றி, விவசாயிகளுக்கு ஆதரவான அனைவரும் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
– இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா

‘ஒவ்வொரு போராட்டமும் கட்சியின் கஜானாவை நிரப்பும் என்பதால் தான், போராட்டங்களே கட்சியின் கொள்கையாக கொண்டுள்ளீர்களா…’ என கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் டி.ராஜா பேட்டி.

மத்திய அரசு நினைத்தால் ஒழிய, ‘நீட்’ தேர்வை நம்மால் ஒழிக்க முடியாது. இதை நன்கு அறிந்தும், தமிழக மாணவர்களை, தி.மு.க., அரசு ஏமாற்றுவதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
– அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை

‘இது தெரிந்தும் ஏன், அ.தி.மு.க., ஆட்சியின் போது சட்டசபையில், ‘நீட் வேண்டாம்’ என தீர்மானம் நிறைவேற்றினீர்கள்… கண்துடைப்பிற்காகத் தானா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி.

அ.தி.மு.க.,வைத் தான் மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். எனினும், கடந்த சட்டசபை தேர்தலில் லேசான சறுக்கல் தான் ஏற்பட்டது. அந்த சறுக்கலில் நாம், 1.92 லட்சம் ஓட்டுகளை மட்டுமே இழந்து ஆட்சியையும் பறிகொடுத்துள்ளோம்.
– அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு

‘அப்போ உங்கள் ஆட்சியின் விலை, 1.92 லட்சம் ஓட்டுகள் என்று சுலபமாக கணக்கு வைத்துக் கொள்ளலாமா…’ என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *