Share on Social Media


சென்னை: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து ஜனநாயக படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது என்று தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்):  புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியை  கவிழ்ப்பதில் பாஜ தற்காலிகமாக வெற்றி பெறலாம். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பதவியிலிருந்து விலகினாலும், மக்கள் மனதிலிருந்து எந்த சக்தியாலும் விலக்க முடியாது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைக்கு வருகிற சட்டமன்றத்  தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  வைகோ(மதிமுக பொது செயலாளர்): புதுச்சேரியில் 2 மாதங்களில் சட்டப்பேரவைத்  தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில், மக்களைச் சந்தித்து, அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுவதைக் கைவிட்டு விட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்து பாஜவில் சேர்த்துக்கொண்டு, இந்த ஜனநாயகப் படுகொலையை  அரங்கேற்றி இருக்கிறார்கள். அதிமுக  கை கட்டி, வாய்பொத்திச் சேவகம் செய்கிறது. அவர்களுடைய கூட்டணிக்கு, நடைபெற இருக்கின்ற தேர்தலில், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

திருமாவளவன் (விசிக தலைவர்): கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் செய்த அநாகரீக அரசியல் சித்து விளையாட்டை, பாஜ புதுச்சேரியிலும் அரங்கேற்றியுள்ளது. இச்செயல் வன்மையான கண்டனத்துக்கு  உரியது. பாஜ வலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிக்கியுள்ளனர், இறையாய் உள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரியது.  கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): ஆட்சி முடிவுறும் நிலையில் தனது அதிகார பலம்,  பண பலத்தை பயன்படுத்தி சில சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அரசியல் அலங்கோலத்தை அரங்கேற்றியுள்ளது.  வரும் சட்டமன்ற தேர்தலில் புறக்கணித்து புதுச்சேரி மக்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டிட  வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இல.கணேசன்(பாஜக மூத்த தலைவர்): நாராயணசாமி கோரிக்கையை மதித்து முன்னாள் ஆளுனரை பதவி விலக வைத்தது மத்திய அரசு.  தனது கட்சியின் உறுப்பினர்களே எதிராகப் போனதனால்  ஆட்சியை அவர் இழந்ததனால் மத்திய அரசு மீது எவரும் குறை சொல்ல இயலாது. தென் பகுதியில் இருந்த ஒரே காங்கிரஸ் அரசும் கவிழ்ந்தது. ராகுல் காந்தி வந்தும் இழந்ததா, வந்ததனால் இழந்ததா என மக்கள் வாதிடுகிறார்கள்.

தமிமுன் அன்சாரி(மஜக பொதுச் செயலாளர்): மக்கள் தேர்வு செய்த ஒரு அரசை கவிழ்த்தவர்களுக்கு அடுத்து வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை. புதுச்சேரி மக்கள் ஜனநாயக கோட்பாடுகளை காப்பாற்ற  ஓரணியில் திரள வேண்டியது அவசியம் என்பதையும் இத்தருணத்தில் சுட்டிக் காட்டுகிறேன். எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக தலைவர்): முதல்வர் நாராயணசாமி தலைமையிலான  புதுச்சேரி காங்கிரஸ் அரசை பெரும்பான்மை இழக்கச் செய்து  ஆட்சியை  அகற்றியிருப்பது தேர்தல் ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு சமமாகவே  கருதுகிறேன்.   நெல்லைமுபாரக்(எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): துணை நிலை ஆளுநர் என்கிற தனது கைப்பாவை நபர்களை கொண்டு, மாநில  நிர்வாகத்தை முடக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுவை காங்கிரஸ் அரசை கவிழச்செய்த பாஜகவின் அரசியல் அநாகரிகத்தை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ மாட்டார்கள். எதிர்வரும் தேர்தலில் அதற்கான  பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.  இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *