Share on Social Media


காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுராந்தகத்தில் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டார். இவர் இந்த கூட்டத்தில் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய அமைச்சர், “இந்த கூட்டம் கூட்டப்பட்டதின் முக்கியமான நோக்கம், வருகின்ற உள்ளாட்சித் தேர்தல். நடந்த முடித்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நமது ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த தொகுதியில் நமக்குச் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. எங்களையெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக நீங்கள் உட்கார வைத்துவிட்டார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் உங்களை உள்ளாட்சி பிரதிநிதிகளாக அமரவைக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது. அரசினுடைய நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேர்க்கவேண்டும் என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் நம் ஆட்களாக இருக்க வேண்டும். ஒரு அ.தி.மு.க-காரன் கூட நமது ஆட்சியில் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று தலைவரிடம் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

அமைச்சர் தா. மோ. அன்பரசன்

தொடர்ந்து பேசியவர், “வரும் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். இந்த தேர்தலில் தலைமை யாருக்கு சீட் கொடுக்கிறதோ அவர்களுக்காக உழைக்க வேண்டும். துரோகம் செய்யவே கூடாது. தி.மு.க.விலிருந்துகொண்டு துரோகம் செய்தால் முன்னேறவே முடியாது. நடுரோட்டில் தான் நிற்க வேண்டும். பி.டி.ஓ அலுவலகத்திற்குப் போக முடிகிறதா? மற்றவர்கள் எல்லாம் தைரியமாகப் போக முடியும். திமுக காரர்கள் போக முடியாது. இதுவே தேர்தலில் நாம் ஜெயித்திருந்தால், போடா அப்படின்னு நீ சொல்லியிருக்கலாம். அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒட்டுமொத்த இடத்தையும் கைப்பற்றினால் தான் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு போகலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் போல கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் இந்த வேட்பாளர் நல்ல கெட்டதுக்கு வந்தாரா? நாம கஷ்டம்னு போய் சொன்னா, நமக்கு ஆதரவாக இருப்பாரா என்பதையெல்லாம் பார்த்துத் தான் ஒட்டு போடுவார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “வேட்பாளர்களில் யாரை நிறுத்தினால் வெற்றி பெறுவார்கள், சமுதாய பலம் எப்படி இருக்கிறது, பணம் வைத்திருக்கிறாரா, யோக்கிதமான ஆள என்றெல்லாம் பார்த்துத் தான் சீட் கொடுப்போம். இந்த தேர்தலில் உனக்கு வேண்டியவர், எனக்கு வேண்டியவர், ஒரே குடும்பத்தில் ஒன்றும் மேற்பட்டவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்க மாட்டோம். வேட்பாளரை வெற்றியடையச் செய்யவேண்டியது உங்கள் கடமை. சிலர் தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தில் கூடவே இருந்து தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்வார்கள். அந்த துரோகம் இருக்கவே கூடாது. அது உங்களுக்குத் தான் இழப்பு. இது மிகவும் முக்கியமான தேர்தல். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று தலைவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

thaa mo 04 Tamil News Spot
அமைச்சர் தா. மோ. அன்பரசன்

இந்த தேர்தலில் வெற்றி அடையவில்லையென்றால் ஒன்றிய செயலாளர்கள் கழுத்தை அறுத்து போட்டுருவோம், ஜாக்கிரதை. கட்சிதான் நமக்கு முக்கியம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள். இந்த கூட்டம் முடிந்த பிறகு சந்தோசமாக எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லாது, எல்லாவற்றையும் இங்கேயே தூக்கி வீசிவிட்டு நமது இயக்க தோழர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். கூட்டம் நடைபெறும்போது, கொடி, தோரணம் எல்லாம் பிரமாதமாகக் கட்டி, கூட்டம் கூட்டி ஒரு ஆயிரம் ஐந்நூறு பேருக்குச் சாப்பாடு போட்டு நடத்தினால், அது இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரு பெரிய பலமாக அமையும் என்ற உணர்வோடு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும்” என்று பேசினார்.

Also Read: திமுக-வுக்கு எதிரான அதிமுக-வின் ஆர்ப்பாட்டம்: வெற்றியா… தோல்வியா? |The Imperfect Show

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சரைத் தொடர்பு கொண்டோம். அமைச்சர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பில் விளக்கம் கொடுத்தால் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவு செய்யத் தயாராக இருக்கிறோம்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *