Share on Social Media


தென்காசி :  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்,தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் அவர்களின் இல்ல விழாவில் ஆற்றிய உரை.

‘மாண்புமிகு அமைச்சர் சகோதரி திருமதி. வி.எம்.ராஜலட்சுமி அவர்களுடைய இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் எனது வணக்கம். மரியாதைக்குரிய சகோதரி மாண்புமிகு அமைச்சர் திருமதி வி.எம்.ராஜலட்சுமி அவர்களுடைய மகள் செல்வி எம்.ஹரிணி மற்றும் மாண்புமிகு அமைச்சருடைய கணவர் சகோதரர் திரு.முருகன் அவர்களுடைய தங்கை மகள் செல்வி அனுசுயா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.  இதை ஒரு குடும்ப நிகழ்ச்சியாக நாம் பார்க்கின்றோம்.

மாண்புமிகு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சகோதரி வி.எம்.ராஜலட்சுமி அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக நாங்கள் பார்க்கின்றோம். ஒரு சுப நிகழ்ச்சி இருந்தால் எப்படி மகிழ்ச்சி இருக்குமோ அந்த மகிழ்ச்சியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நாங்கள் காண்கின்றோம்.  கழகம் என்றால் ஒரு குடும்பம். அப்படி குடும்ப நிகழ்ச்சியில் நாங்கள் பங்குபெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம். மனமார, உளமார அந்தக் குழந்தைகளை வாழ்த்துகிறோம்.
    
மரியாதைக்குரிய திருமதி வி.எம்.ராஜலட்சுமி அவர்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மனதில் இடம் பெற்று, மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் அமைச்சராக இடம் பெற்றார். இவர் சிறந்த முறையில் தன்னுடைய பொறுப்பை கவனிக்கக்கூடிய திறமை மிக்கவர், நல்ல கல்வி கற்றவர். அவருடைய கணவர் திரு.முருகன் அவர்கள் கட்சியில் பொறுப்பு வகித்து, கழகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். நம்முடைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் குடும்பம் ஆரம்பகாலத்திலிருந்து கழகத்தில் இருக்கின்றனர். அவருடைய மாமனார்

1972 முதல் கழகத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறார். கழக குடும்ப விழா என்கிறபோது, இந்த நிகழ்ச்சியை நடத்துகின்ற அனைவரும் கழகத்திற்காக பாடுபட்டு கழகத்தை மென்மேலும் வளர்வதற்கு உழைக்கின்றவர்களின் நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில் வருகைதந்து வாழ்த்த இருக்கின்ற மரியாதைக்குரிய அண்ணன் திரு. ஜான்பாண்டியன் அவர்களுக்கும் அவருடைய இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் 2004-ல் கட்சி உறுப்பினராக பொறுப்பை ஏற்று, 2008-ல் 18வது வார்டு பாசறைச் செயலாளராக இருந்து, 2014-ல் சங்கரன் கோவில் நகர மன்றத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான முறையில் பணியாற்றியவர். நகர கழக இணைச் செயலாளராக பணியாற்றியவர். இளம்பெண்கள் பாசறையின் பொறுப்பாளராக பணியாற்றியவர். 2016-ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு அம்மாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து, இன்றுவரை திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

மாண்புமிகு அம்மா மறைவிற்குப் பிறகு அவர்களுக்கு கட்சியில் இன்னும் கூடுதலாக பொறுப்புகள் வழங்கப்பட்டு, கழக மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு கழகத்திற்காக சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றார். கட்சிக்காக உழைக்கின்ற குடும்ப நிகழ்ச்சியில் பங்குபெறுவது உண்மையிலேயே மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னாலே, பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நம் மனதில் தோன்றுவார்கள். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் வலிமையோடும், செழிப்போடும், வளமோடும் இருப்பதற்கு காரணம் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருந்து ஒரே அணியில் இருக்கின்றதால்தான் நம்முடைய கழகம் வலிமை பெற்றிருக்கின்றது. குடும்ப நிகழ்ச்சி என்றால் அனைவரும் பங்கு பெறுகின்றோம். அப்படி குடும்பமும், கழகமும் ஒன்றாக இணைந்து பிணைக்கப்பட்டு நம் கழகம், நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழை, எளிய, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வித்தரம், கிராமப்புற பொருளாதாரம் அனைத்தும் உயர்வதற்கு அம்மாவின் அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக ஏராளமான திட்டங்களை நம் அரசு செய்து கொண்டிருக்கிறது. கிராமப் புறங்களிலுள்ள மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் தான் படிக்கின்றார்கள்.  ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்வி பயிலும் கனவு நீட் தேர்வின் காரணமாக கானல் நீராகியது. அவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க வேண்டுமென்ற அடிப்படையில், 7.5 உள் ஒதுக்கீடு மூலமாக தமிழ்நாடு முழுவதும் 313 மாணவச் செல்வங்களுக்கு மருத்துவக் கல்வி பயில இடம் கிடைத்துள்ளது. இதையும் நாங்கள் சாதித்துக் காட்டியுள்ளோம்.

விவசாயம் பிரதானமாக இருக்கும் இந்தப் பகுதிகளில் நீண்டகாலமாக தூர்வாரப்படாத ஏரிகளை தூர்வாருவதற்காக, குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்து,  ஏரிகள், குளங்கள், குட்டைகள்  தூர்வாரப்பட்டதால், அவை ஆழப்படுத்தப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது. நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கித் தந்திருக்கின்றோம். கல்வியில், நீர்மேலாண்மையில், தொழில் துறையில் புரட்சி என அனைத்திலும் புரட்சி படைக்கின்ற அரசு அம்மாவின் அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று நடைபெற்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு, செல்வி. ஆ. ஹரிணி அவர்களையும், செல்வி. அனுசுயா அவர்களையும் வாழ்த்தி விடைபெறுகிறேன்,’ என்றார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *