Share on Social Media


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் கட்சித் தலைமை 12 ஸ்வீட் பாக்ஸ்களை வழங்கியதாம். ஆனால், தென் மாவட்டத்திலுள்ள பத்து தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு மட்டும், ஆறு ஸ்வீட் பாக்ஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டன. ‘‘மீதி ஸ்வீட் பாக்ஸ்களைத் தேனிக்காரர் தருவார்’’ என்று கைகாட்டியிருக்கிறது சேலம் தலைமை. ஆனால் தேனிக்காரரோ, ‘‘நான் கொடுக்க வேண்டியதை ஏற்கெனவே வாங்கிவிட்டார்களே…’’ என்று கையை விரித்துவிட்டார். கடைசியாக கட்சித் தலைமை, ‘‘கடனை வாங்கி செலவு செய்யுங்கள்.

அதிமுக தலைமை அலுவலகம்

அதிமுக தலைமை அலுவலகம்

தேர்தல் முடிந்த பிறகு கணக்குத் தீர்த்துக்கொள்ளலாம்’’ என்று வாக்கு கொடுத்துள்ளது. தேர்தல் முடிந்தபிறகு கேட்டபோது, “ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும்” என்று பதில் வந்ததாம். இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தலும் முடிந்த நிலையில், கடன் வாங்கி செலவு செய்தவர்களுக்குப் பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்து கொதித்துப்போன வேட்பாளர்கள், ‘‘எங்கள் கணக்கை பைசல் செய்யவில்லை என்றால், கட்சி பொன்விழா நாளில் கலகத்தை மூட்டிவிடுவோம்’’ என்று சேலத்துகாரரிடம் தகவல் சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்!

சமீபத்தில் கனிமவளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ், காஞ்சிபுரத்தில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு சென்னை நோக்கி வந்திருக்கிறார். ஒரகடம் அருகே கிராவல் கல், மண்ணை ஏற்றிக்கொண்டு வரிசையாக லாரிகள் செல்வதைப் பார்த்தவர், அந்த லாரிகளைத் தடுத்து நிறுத்தி நடைசீட்டைக் காண்பிக்கச் சொல்லியிருக்கிறார்.

மாதிரி படம்

மாதிரி படம்

லாரி ஓட்டுநர்கள் திருதிருவென விழிக்கவும், உடனடியாக கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளை வரவழைத்து, நடைசீட்டு இல்லாத 18 லாரிகளைக் கையப்படுத்தச் சொல்லிவிட்டாராம். ஆய்வுசெய்வது துறையின் மூத்த அதிகாரி என்று தெரியாத லாரி டிரைவர்கள், லோக்கல் ஆளும் புள்ளிகளுக்கு போன் போட்டுள்ளார்கள். விஷயத்தைக் கேட்டதும் வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கப் பார்த்த ஆளுங்கட்சிப் புள்ளிகள், வந்திருப்பது துறையின் இயக்குநர் என்று தெரிந்ததும் கப்சிப் என்று அமைதியாகிவிட்டார்களாம்.

தூத்துக்குடி அ.தி.மு.க-வில் வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும், தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனும் உள்ளனர். இதில், தெற்கு மாவட்டத்தில் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார்கள். சண்முகநாதன் மீதான அதிருப்தியால் பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் செல்லப்பாண்டியன் அணியில் இருக்கிறார்கள்.

சண்முகநாதன்

சண்முகநாதன்

இந்தநிலையில், ‘தெற்கு மா.செ-வை மாற்ற வேண்டும்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து, பன்னீரைச் சந்தித்த சண்முகநாதன், ‘‘என் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது. வேணும்னா மாவட்டத்தைப் பிரிச்சு, மாநகர் மாவட்டத்தை உருவாக்கி செல்லப்பாண்டியனுக்குப் பதவி கொடுங்க’’ என்று சொல்லியிருக்கிறார். மாநகர் மாவட்டத்தை உருவாக்கினாலும், தூத்துக்குடி தொகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் இருவரிடையே போட்டி கடுமையாக நிலவுகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *