Share on Social Media

`ஏய்! யாரப் பாத்து கறுப்புன்ன…’ சிவாஜி திரைப்படத்தில் விவேக்கின் டயலாக் இப்போது ரத்தத்தில் ஆக்ஸிஜனைப் பரிசோதிக்கும் பல்ஸ்ஆக்ஸிமீட்டரிடம் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. “Dark Skin கொண்டவர்களுக்கு பல்ஸ்ஆக்ஸிமீட்டர் தவறான மதிப்பீட்டைக் காட்டலாம். எனவே, கறுப்பினத்தவர்கள், ஆசியர்கள், பிற இன சிறுபான்மையினர் (Ethnic Minority) மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் இதைப் பயன்படுத்த வேண்டும் என இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருள்கள் ஒழுங்குமுறை நிறுவனம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.

Covid

கோவிட் பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து தற்போது வரை பல்ஸ்ஆக்ஸிமீட்டர் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மற்றொரு பக்கம் டார்க் ஸ்கின், டஸ்கி ஸ்கின் கொண்டவர்கள் உலகநாடுகளில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் அதிகம். இந்த நிலையில் இந்தத் தகவல் சற்று அதிர்ச்சியூட்டுவதாகவே உள்ளது.

இதுபற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளித்தார் நுரையீரல் மருத்துவர் ஐஷ்வர்யா.

“பிரிட்டனில் வெளியான மருத்துவ இதழில் ஒன்றில் வெளியான ஆய்வில் இதுபோன்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து இது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு இந்தக் கருவி வேலை செய்யாது என்று எந்த ஆய்வும் தெரிவிக்கவில்லை.

உலகத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் டார்க் ஸ்கின் கொண்டவர்கள்தாம். பல ஆண்டுகளாக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லாருக்கும் அது வேலை செய்யாது என்று கூற முடியாது.

சருமத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் மெலனின் என்ற நிறமி அடுக்கு அதிக அளவில் இருந்தால் (high Pigmented Skin) சரும நிறம் அடர்நிறமாகவும் தடித்தும் போய்விடும். சிலருக்கு கழுத்துக்குப் பின்புறத்தில் அப்படி இருப்பதைப் பார்க்கலாம். டார்க் ஸ்கின் கொண்ட அனைவருக்கும் High Pigmented சருமம் இருக்கும் என்று கூற முடியாது. மெலனின் அதிக அளவு சுரப்பவர்களுக்கு மட்டுமே இது இருக்கும். அப்படியிருப்பவர்களுக்கு பல்ஸ்ஆக்ஸிமீட்டர் மாறுபாடான அளவீடுகளைக் காட்டலாம்.

அதுதவிர, விரல்களுக்கு ரத்த ஓட்டம் குறைவாகச் செல்லும் பிரச்னையான Raynaud’s Syndrome, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு விரல்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்து கை சில்லிட்டுப் போன நிலையில் இருப்பவர்கள், பொதுவாகவே கை விரல்கள் எப்போது சில்லிட்டுக் காணப்படுபவர்கள் போன்றவர்களுக்கும் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் சரியாக வேலை செய்யாது அல்லது தவறுதலான மதிப்பீட்டைக் காட்டும்.

122577 thumb Tamil News Spot
skin

Also Read: கொரோனா: `மீண்டும் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை; 3-வது அலையின் ஆரம்பமா?’ – பதில் கூறும் மருத்துவர்

கோவிட் நோயாளிகளுக்கு ரத்தக்குழாய்களில் சிறு சிறு உறைவு ஏற்படலாம். அந்த உறைவு விரல்களுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் (Peripheral Arteries) உருவானால் ரத்தஓட்டம் தடைப்பட்டு, விரல்கள் சில்லிட்டுக் காணப்படும். அவர்களுக்கும் பல்ஸ்ஆக்ஸிமீட்டர் சரியாக வேலை செய்யாது. அதுதவிர, அடர்நிற நெயில் பாலிஷ், மருதாணி போட்டிருப்பவர்களுக்கும் குளிர்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும் சரியான மதிப்பீட்டைக் காட்டாமல் போக வாய்ப்புள்ளது.

பல்ஸ்ஆக்ஸிமீட்டர் என்பது ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிடும் கருவி. அதிலுள்ள சென்சாரின் மூலம் நாடித்துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவைக் கணக்கிடுகிறது. ரத்தஓட்டம், குறிப்பிட்ட அளவு வெப்பம் இல்லாத இடத்தில் அதைப் பொருத்தி பரிசோதித்தால் சரியான அளவீடுகளைக் காட்டாது. அதனால்தான் கை மட்டுமல்லாமல் கால் விரல்கள், காது போன்ற இடத்திலும் அதை வைத்துப் பரிசோதிக்கப்படுகிறது.

WhatsApp Image 2021 08 03 at 10 51 33 Tamil News Spot
Pulmonologist Dr.Aishwarya

நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் நுரையீரல் செயல்பாட்டை பரிசோதிக்கும் கருவி (PFT) இருக்கும். அதில், குறிப்பிட்ட இந்தியர்களுக்கு இந்த அளவுதான் இயல்பானது, ஆப்பிரிக்கர்களுக்கு இந்த அளவுதான் என வகைப்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும். சில இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிறவியிலேயே நுரையீரல் செயல்திறன் நன்றாக இருக்கும். சிலருக்கு குறைவாக இருக்கலாம். அதனால் ஒவ்வோர் இனத்தைச் (Race) சேர்ந்தவர்களுக்கும் குறிப்பிட்ட அளவீடு இயல்பானது என்று பிரித்திருப்பார்கள்.

ஆனால், பல்ஸ்ஆக்ஸிமீட்டருக்கு இதுபோன்று பிரித்து தரமான அளவீடுகள் நிர்ணயிக்கப்படவில்லை. உலக அளவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவீடுகளை அடிப்படையாக வைத்துதான் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது.

வீட்டில் பரிசோதிப்பவர்கள் கவனத்துக்கு!

பல்ஸ்ஆக்ஸிமீட்டர் டார்க் ஸ்கின் கொண்ட எல்லாருக்கும் தவறான மதிப்பீட்டைக் காட்டுவதில்லை. எனவே, வழக்கமாகப் பரிசோதிப்பவர்கள் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். நாடித்துடிப்பு 72 என்ற அளவு நார்மல். 90-க்கும் மேல் நாடித்துடிப்பு அதிகரித்தாலும், ஆக்ஸிஜன் அளவு 95-க்கும் கீழ் குறைந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Tamil News Spot
Pulse oximeter

Also Read: குழந்தைகளுக்கும் இதே பல்ஸ் ஆக்ஸிமீட்டரைத்தான் பயன்படுத்துறீங்களா? தப்பு பண்றீங்க!

வீட்டில் பரிசோதிப்பவர்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் என பல்ஸ்ஆக்ஸிமீட்டரைப் பயன்படுத்துபவர்கள் தரமான கருவியை வாங்க வேண்டும். விலை குறைவாக விற்கப்படும் கருவியின் தரமும் கேள்விக்குறியாகவே இருக்கும். 900 ரூபாய்க்குக் குறைவாக விற்கப்படும் பல்ஸ்ஆக்ஸிமீட்டரை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. Respiratory rate, Pulse pressure போன்றவற்றைக் காட்டும் கருவிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றைப் பார்த்தும் பலர் பயந்து விடுகின்றனர். அவையெல்லாம் சரியான அளவீடு என்று எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் நாடித்துடிப்பு மற்றும் ஆக்ஸிஜன் அளவு இரண்டையும் காட்டும் கருவி மட்டுமே போதுமானது” என்றார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *