Share on Social Media


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் பேருராட்சி செயல்படுத்தும் குடிநீர் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம், மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓமாந்தூர், குப்புரெட்டிப்பட்டி, புதுப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read: கரூர்: `அமராவதி ஆற்றில் கழிவு கலக்கப்படுகிறதா?’ – பரபரக்கவைத்த அதிகாரிகளின் ஆய்வு

இதன் மூலம், அங்கு வசிக்கும் மக்களுக்கு குடீநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி சார்பில், கடந்த ஆண்டு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கூட்டுகுடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

pazhaiya jayakondam peruraadchi Tamil News Spot
பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி

இப்பணிகளுக்காக பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிப் பகுதியில் இருந்து, ஓமாந்தூர், பூலாம்பாடி, தொட்டியபட்டி பகுதிகளில் ஒரு லட்சத்து இருபதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட இருக்கிறது. கூடுதலாக இந்த குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக பழைய ஜெயங்கொண்டம் சிவன் கோயில் அருகே, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட்டு வருகிறது.

இவற்றுக்கான குடிநீர் இணைப்பு, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து புதிதாகக் கிணறு அமைத்து, நீரேற்றும் மோட்டார் அமைத்து குடிநீர் விநியோகம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் திட்டம் என்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி சார்பாக அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் காவிரி குழாயில் இருந்து, மேட்டு மகாதானபுரம் என்ற இடத்தில், இன்று பேரூராட்சி நிர்வாகம் பழைய குடிநீர் திட்டத்தில் உள்ள குழாய் மூலம் புதிய இணைப்பு மேற்கொள்வதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டன.

people protest 2 Tamil News Spot
மக்கள் போராட்டம்

இதனால் கோபமடைந்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி பொதுமக்கள், எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வரும் இடத்தில் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் லாலாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் விரைந்து வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர், மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பேரூராட்சி நிர்வாகம் மக்களுக்கு எதிராக செயல்படுத்த இருந்த பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய புதுப்பட்டியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர், “புதிய திட்டத்தில் வரும் குழாயில்தான் எங்களுக்கு குடிநீர் இணைப்புத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், பேரூராட்சி நிர்வாகம் திடீரென்று, பழைய கூட்டுகுடிநீர் திட்டக் குழாயில் எங்களுக்கு இணைப்பு ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டத்தில், 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு முன்னரே இணைப்பு எடுக்கப்படுவதால், திட்ட மதிப்பீட்டில் முறைகேடுகளை நடத்துவதற்காக இப்படி பண்ணப்பார்க்கிறார்கள்.

people protest 3 Tamil News Spot
மக்கள் போராட்டம்

மக்கள் ஒன்றுதிரண்டு போராடி, தற்காலிகமாக இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம். தற்போது செயல்படுத்தப்படும் புதிய திட்டத்தில் காவிரி ஆற்றில் புதிதாக கிணறு மற்றும் நீரேற்றும் இயந்திரம் ஆகியவை அமைக்கப்பட்டு, திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இல்ல்லைன்னா, எங்கப் போராட்டம் இன்னும் கடுமையானதாக இருக்கும்” என்றார் ஆவேசமாக.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *