Share on Social Media


“ `ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்’ என்ற பேச்சும் எதிர்பார்ப்பும் பரவலாக உள்ளதே. உங்கள் அரசியல் வாரிசு யார்?”

‘‘ஸ்டாலின் மிக இளைஞராக இருந்த காலத்திலேயே கோபாலபுரம் இளைஞர் மன்றத்தை உருவாக்கி, ஓடியாடி பாடுபட்டு, பின்னர் மிசா காலத்தில் சிறைக்குச் சென்ற நாளில் இருந்து, பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆட்பட்டு, அவரே தானாக உழைத்து, உழைத்து, தி.மு.க-வின் வருங்காலத் தலைவர் என்ற நிலைக்கு தன்னைத்தானே படிப்படியாக உயர்த்திக்கொண்டவர். அந்த வகையில், அவர்தான் இன்றைக்கு என்னுடைய அரசியல் வாரிசாகவும் திகழ்கிறார்.”

கருணாநிதி - அண்ணாதுரை

கருணாநிதி – அண்ணாதுரை

‘‘தி.மு.க-வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?”

“தலைவன்-தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன்-தம்பி என்ற பாசப்பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித்தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு – சுயமரியாதை, இனஉணர்வு காத்திடும் போர்க்குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப்பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.”

‘‘ `கருணாநிதி குடும்ப அரசியல் செய்பவர்!’ என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில்!”

‘‘நான், பல லட்சம் குடும்பங்கள் இணைந்து ஒற்றுமை உணர்வோடு ஈடுபட்டிருக்கும் ஒரு மாபெரும் அரசியல் கட்சியின் தலைவரே அன்றி, உங்கள் கேள்வியில் சுட்டிக்காட்டி இருப்பதைப்போல, ஒரு குடும்பத்துக்குள் அரசியல் செய்பவன் அல்ல. என்னை குடும்ப அரசியல் செய்பவன் என்று, இன்றைய ‘ஆனந்த விகடன்’ வேண்டுமானால் கருதலாம். ஆனால், வாசன் காலத்து ஆனந்த விகடனோ, பாலசுப்ரமணியன் காலத்து ஆனந்த விகடனோ நிச்சயமாகக் கருதாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.”

“அரசியல் பரபரப்புகளில் இருந்து ஓய்வுபெற்று தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனை ஏதேனும் உங்களுக்கு உள்ளதா?”

“ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து, ஓயாமல் உழைப்பவன் இந்தக் கருணாநிதி. அதனால் தலைமைப் பதவியை ஸ்டாலினுக்கு விட்டுத்தரும் யோசனையே இல்லை என நீங்கள் ‘குழப்படி’ வேலை செய்ய வேண்டாம். எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பாக இருந்து கழகப் பணிகள் பலவற்றை தம்பி ஸ்டாலின்தான் ஆற்றிவருகிறார் என்பதுதான் உண்மை.”



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *