Share on Social Media


கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாவட்டத்தின் அனைத்து அணைகளும், குளங்களும் கடந்த மாதமே நிரம்பிவிட்டன. ஆனாலும் விடாமல் மழை பெய்ததால் உபரி நீர் கடலுக்குச் சென்று கொண்டிருந்தது. நேற்று அதிதீவிரமான கனமழை பெய்ததால் மாவட்டமே சின்னாபின்னமானது. மாவட்டத்தின் பல பகுதிகளில் 18 செ.மீ, 15 செ.மீ என அதிக அளவு மழை பதிவானது. இதனால் மாவட்டத்தின் அனைத்து குளங்களிலும் அதிகப்படியான் வெள்ளம் மறுகால் பாய்ந்து செல்கிறது.

வேம்பனூர், புத்தேரி, மேற்கு நெய்யூர் உள்ளிட்ட பெரிய குளங்களின் கரை உடைந்ததால் வயல் வெளிகளிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்தன. பத்திற்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிக்கப்பட்டன. அருகில் உள்ள இடங்களுக்குச் செல்லவும் பல கிலோமீட்ட தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

மூழ்கிக்கிடக்கும் ரயில் தண்டவாளம்

தோப்பூர் ஜங்சனில் வெள்ளம் பெருகியதால் ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. பத்மநாபபுரம் அரண்மனை இருக்கும் கோட்டையைச் சுற்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பத்மநாபபுரம் தனித் தீவுபோல மாறியது. பெத்தேல்புரம் – மேற்கு நெய்யூர் சாலை, திக்கணங்கோடு – திங்கள்நகர் சாலை என முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பல பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மழையால் பழைய வீடுகள் இடிந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில் பழையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஒழுகினசேரி பகுதியில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஒழுகினசேரி பகுதியில் உள்ள அப்டா மார்க்கெட் முழுவதும் தண்ணீர் புகுந்தது. மேலும் தனியார் கார் ஷோருமுக்குள் தண்ணீர் புகுந்ததால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புதிய பல கார்கள் தண்ணீரில் மிதந்தன. அவை பழுதானதால் மீட்கமுடியாத நிலை ஏற்பட்டது.

IMG 20211113 WA0054 Tamil News Spot
மழையால் சாலையில் பாய்ந்தோடும் வெள்ளம்

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதைகள் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கருங்கல் அருகே வட்டவிளை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Also Read: Tamil News Today: கனமழை: கன்னியாகுமரியில் பல்வேறு பகுதிகளைச் சூழ்ந்தது மழை வெள்ளம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் மாவட்டம் மேலும் இரண்டுநாள் மழைக்கு தாக்குப்பிடிக்குமா என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

IMG 20211113 WA0055 Tamil News Spot
மழையால் இடிந்த வீடு

அதன் ஒரு பகுதியாக ஆற்றங்கரை பகுதிகள், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களை பாதுகாப்பான, மேடான இடங்களுக்குச் செல்லும்படி வலியுறுத்தி வருகின்றனர். காலை நிலவரபடி 19 முகாம்களில் சுமார் 560 பேர் தங்கவைக்கப்பட்டனர். மாலையில் முகாம்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரிக்கப்பட்டது. இப்போது முகாம்களில் 1200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கூடுதல் முகாம்களை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *