மும்பை: 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மன்னரின் பழங்கால சிலை கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மையப் பகுதியில் பல ஆண்டு காலமாக உள்ளது. இந்த சிலை பெங்களூருவின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

விஷமிகள் சிலர் கர்நாடகாவில் வசிக்கும் மராத்திய மக்களை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த சிலையை மீது மை ஊற்றியுள்ளனர். இச்சம்பவம் கர்நாடகாவில் வசிக்கும் மராத்தியர்கள் இடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கன்னட வெறியர்களின் குரூர மன நிலையை பிரதிபலிப்பதாக தற்போது மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மராத்திய மன்னரான சிவாஜியை தொடர்ந்து கர்நாடக அரசு அவமதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி குறித்து உயர்வாகப் பேசினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே மத்திய பாஜ., அரசு பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நிலைப்பாடுகளை பின்பற்றி வருவதாகவும் கர்நாடக பாஜ., தொடர்ந்து மராத்திய மக்களை இழிவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் வசிக்கும் மராத்திய பூர்வீகம் கொண்ட மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மராத்தியர்களின் பெருமைகளில் ஒன்றான சத்ரபதி சிவாஜியின் சிலையை அவமதிப்பதால் கர்நாடக பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். சிவாஜி சிலை மீது திட்டமிட்டு சேதம் ஏற்படுத்துவது, அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கு மகாராஷ்டிரா ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் மூத்த சிவசேனா தலைவர் ஏகாந்த் ஷிண்டே கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபத்துக்காக மத்திய பாஜக அரசு சத்ரபதி சிவாஜியின் பெயரை பயன்படுத்துவதாகவும் சிவாஜியின் சிலை இதுபோல இழிவுபடுத்தப்படும்போது அமைதி காப்பதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் அமைச்சரான பாலசாகிப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement