Share on Social Media


சென்னை மாநகருக்குள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

“நான்கு நதிகள், ஐம்பது பெரிய கால்வாய்கள், ஐந்நூற்று நாற்பது சிறிய ஓடைகள் என்பதுதான் சென்னைக்கான வரைபடமாக இருந்தது. இவற்றையெல்லாம் அழித்து நகரமாக ஆக்கியதால்தான் சென்னை ஒவ்வொரு மழைக்காலத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து வருகிறது” என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள். மாறி வரும் நகரமயமாதல் சூழலுக்கு ஏற்ப நகரமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டியதும் தேவைதான் என்றாலும், அதற்கேற்ப மழைநீர் வடிகால்களை வடிவமைக்கப்படுவதில்லை. இதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. ஆனால், இனிவரும் காலங்களில் சென்னை முழுவதும் முறையாக மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட வேண்டும். குறைந்த கால இடைவெளியில் அதிக மழைப்பொழிவு இருந்தால், மழைநீர் தேங்கி நிற்கத்தான் செய்யும். ஆனால், அப்படித் தேங்காமல் மழைநீர் வழிந்து போகும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை நகரை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் அரக்கோணம் வரையில் அதை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார்கள். அதை அரசு கைவிட வேண்டும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம் ஆகியவற்றைச் சேர்த்தால் நான்காயிரம் நீர்நிலைகள் இருக்க வேண்டும். ஆனால், நகரமாக விரிவடையும்போது நீர்நிலைகளையும் நீர் பிடிப்புப் பகுதிகளையும் சேர்த்து ஆக்கிரமிப்பார்கள். நீர் நிலைகளைப் பாதுகாப்பதைப்போல, நீர் பிடிப்புப் பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும். சென்னையில் வேளச்சேரி, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், புளியந்தோப்பு, ராயபுரம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகியிருக்கிறது. அந்த பகுதிகளில் முறையான வடிகால்கள் அமைத்து மழை நீரை கால்வாய்களுக்குள் சென்று சேரும் விதமாகச் சரி செய்யலாம்.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்
Photo: Jerome / Vikatan

சென்னையில் கொசஸ்தலை, அடையாறு, கூவம், கோவளம் உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர் வழித் தடங்களைச் சீரமைக்க வேண்டும். விவசாயப் பகுதிகளில் மேலும் கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்காமல் தவிர்க்கலாம். மெரினா கோவளம், பள்ளிக்கரணை, எண்ணூர் எனக் கடற்கரையோரம் உள்ள பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், சென்னையில் சாலைகளை அகலப்படுத்துவதோடு, நடைபாதை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *