Share on Social Media


கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள்.

கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஒருவித தாழ்வு மனப்பான்மை எட்டிப்பார்க்கும். அதிலும் பெண்கள் அதிகம் கவலை கொள்வார்கள். முகம் முழுவதும் மேக்கப் போடுவதற்கு கண்ணாடி தடையாக இருக்கும். விழிகள், அதன் மேல்புறம் படர்ந்திருக்கும் புருவங்களை அழகுபடுத்தி பார்ப்பதற்கு கண்ணாடி இடையூறாக அமைவதாக கருதுவார்கள். இது தவிர கண்ணாடி அணிவது தங்களை வயதானவர் போல் காட்சியளிக்க வைத்துவிடுமோ என்று வருத்தப்படவும் செய்வார்கள். அதேவேளையில் ‘பார்வை குறைபாட்டை சரி செய்வதற்கு கண்ணாடி தானே உதவுகிறது. அதை தவிர்க்க முடியாதே’ என்று தங்களுக்குள் சமாதானம் செய்தும் கொள்வார்கள்.

இப்போதெல்லாம் இளம் வயதினர் அதிகமாக கண்ணாடி அணிவதை காண முடிகிறது. குறிப்பாக கண்ணாடி அணியும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, அலைபேசி இப்படிப்பட்ட நவீன சாதனங்கள்தான் அதற்கு காரணம். இது போன்ற சாதனங்களை நேரம் காலம் கருதாமல் தேவைக்கு அதிகமாகவே உபயோகித்து இளம் வயதிலேயே பார்வை குறைபாட்டு பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். அதனால் கண்ணாடி அணிவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதிகம் கவலை கொள்வதும் அவர்கள்தான்.

கண்ணாடி அணிவது முகத்தை கோமாளித்தனமாக மாற்றிவிடுவதாக பல பெண்கள் கருதுகிறார்கள். நாள் முழுவதும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தால் கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. பார்வை குறைபாடு பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருந்தாலும், கண்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கண்ணாடி அணிபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கண்ணாடிகளின் பயன்பாடும் அதிகரித்து கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் யாரும் யாரையும் கண்ணாடி அணிவதை குறிப்பிட்டு கேலி செய்வதில்லை. அதற்கு காரணம், நிறைய பேர் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மற்றவர்களை குறை சொல்வதில்லை.

ஆண்களை பொறுத்தவரை கண்ணாடி அணிவதை, தங்களின் ‘பர்சனாலிட்டி’யை உயர்த்தி காட்டுவதாக கருதுகிறார்கள். ஆனால் கண்ணாடி அணியும் பெண்களில் பெரும்பாலானோர் தங்களின் அழகை கெடுப்பதாக உணர்கிறார்கள். இந்த மனநிலை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி மன அழுத்தத்தில் ஆழ்த்திவிடுகிறது.

கண்ணாடி அணிவதை கவுரவ குறைவாக கருதும் நிலை மாறிவிட்டது. நட்சத்திரங்கள் பலரும் கண்ணாடி அணிகிறார்கள். எனினும் சில நட்சத்திரங்கள் பொது வெளியில் கண்ணாடி அணிவதற்கு தயங்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கண்ணாடி அணிந்து வந்த தீபிகா படுகோனே, ‘‘நான் ஏன் கண்ணாடி அணிவதை மறைக்க வேண்டும். விரைவில் இது பேஷனாகப் போகிறது’’ என்றார்.

கண்ணாடி அணிந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டால் பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் போதுமானது.

* முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிய பிரேம் கொண்ட கண்ணாடியை அணிவதை தவிருங்கள்.

* விலை குறைந்த பிரேம்கள் மூக்கில் அழுத்தமாக பதிந்து கருப்பு அடையாளத்தை ஏற்படுத்தும். ஆதலால் அழுத்தம் கொடுக்காத ‘வெயிட்லெஸ்’ பிரேம்களை பயன்படுத்துங்கள்.

* ‘பெதர்டச்’ கண்ணாடிகளையும் தேர்வு செய்யலாம். அவை கீழே விழுந்தாலும் சட்டென்று உடையாது என்பதால் தயக்கமின்றி அணியலாம்.

* தினமும் தூங்க செல்லும் முன்பு கண்ணாடியை கழற்றிவிட்டு விளக்கெண்ணெய்யை விரல்களில் எடுத்து கண் புருவம், மூக்கு பகுதியில் தேய்த்து விடுங்கள். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் கருப்பு அடையாளங்கள் தோன்றாது.

* மேடையில் நாட்டியமாடும் பெண்களுக்கு கண்ணாடி அசவுரியத்தை ஏற்படுத்தும். நாட்டியத்திற்கு கண்கள் முக்கியம். விழி அசைவு, பாவனைகள் இவைகளை கண்ணாடி வழியாக காண்பிக்க முடியாது. ‘காண்டாக்ட் லென்ஸ்’ அணிந்து நிலைமையை சமாளிக்கலாம்.

* கண்ணாடி அணியும் பெண்களுக்கென்று பிரத்யேக மேக் அப் உள்ளது. புருவங்களுக்கு சற்று அழுத்தமான ‘ஷேடு’ கொடுத்து இமைகளுக்கு ‘மஸ்காரா’ போட்டு கண்களுக்கு அழுத்தமான ‘ஐலைன்’ கொடுத்து ‘ஐ ஷேட்’டை சற்று மென்மையான கலரில் கொடுத்தால் போதும். கண்ணாடி அணிந்திருந்தாலும் அதன் வழியே கண்கள் அழகாக தெரியும். கண்ணாடியை மெல்லியதாக அணிந்தால் பார்க்க அழகாகவும் இருக்கும். இந்த மேக்கப்பை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

* கண்ணாடி அணியும் பெண்களின் முகம் வசீகரமாக தெரிவதற்கு, முகத்தின் வடிவத்திற்கு ஏற்ப கண்ணாடியை தேர்ந்தெடுத்து அணியலாம். இதுதான் மிகவும் முக்கியம். வட்ட வடிவமான முகம் கொண்டவர்கள் வட்டமான கண்ணாடி அணியக்கூடாது.

* கண்ணாடி அணிந்தாக வேண்டும் என்று முடிவாகி விட்ட பிறகு அதை பற்றி அதிகம் கவலைப்படாமல் முகத்தை எப்படி வசீகரமாக வைத்துக்கொள்வது என்று பாருங்கள். கண் இமைகள் அடர்த்தியாக இருந்தால் கண்கள், கண்ணாடியை தாண்டியும் அழகாக தெரியும்.

* விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு கண் ணாடி போன்ற தொல்லையான விஷயம் எதுவுமில்லை.

இருந்தாலும் அதையும் தாண்டி சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள் முன்பு அழகாக தோற்றமளிக்க விரும்புபவர்கள் கண் ணாடியை ஒரு எதிரியாகவே பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மற்றவர்கள் முன்பு கூடுமானவரை கண்ணாடி அணிவதை தவிர்க்கிறார்கள். அதனால் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *