Share on Social Media


“சொந்த உறவுகளே தன்னை கைவிட்டதால், அவர்களுக்கு கடுப்பை ஏற்படுத்த அ.தி.மு.கவில் எப்படியும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சத்தமில்லாமல் மூவ் செய்துவருகிறார் சுதாகரன்” என்கிற தகவல் இப்போது கசிய ஆரம்பித்துள்ளது.

ஜெ., சசி, இளவரசி, சுதாகரன்

சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகன் சுதாகரன். இவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, 1995-ம் ஆண்டு சுதாகரனுக்கு ஜெயலலிதா நடத்தி வைத்த ஆடம்பர திருமணம் இன்றளவும் பேசுப்பொருளாக உள்ளது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு அந்த திருமணமும் ஒருகாரணமாக அமைந்தது. சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைத்தண்டனை பெற்றபோது, அவருடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சேர்த்தே தண்டனை வழங்கப்பட்டது.

ஜெயலலிதா 2016-ம் ஆண்டு மறைந்த பிறகு உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராத் தொகையையும் உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, சசிகலா அவரின் அண்ணி இளவரசி, அவரின் அக்காமகன் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஆண்டு இறுதியில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கான அபராதத்தொகையான பத்து கோடியை அவர்களது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் கட்டினார்கள். ஆனால், சுதாகரனுக்கான பத்துகோடியை கட்ட அவர்களது உறவினர்கள் யாரும் முன்வராமல் போனதால், தண்டனை காலம் முடிந்தும் சுதாகரன் சிறையிலிருந்து வெளியே வரமுடியவில்லை.

அபராதத்தொகையை கட்டவில்லை என்றால் கூடுதலாக ஓர் ஆண்டு தண்டனை காலத்தை கழிக்கவேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவுப்படி சுதாகரன் கூடுதல் தண்டனை காலத்தையும் சிறையில் கழித்து, கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் சுதாகரன். சிறையிலிருந்து வெளியே வந்த சுதாகரனை அவர்களின் உறவினர்கள் யாரும் சென்று சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. சென்னை வந்த சுதாகரன் தி.நகரில் உள்ள நடிகர் சிவாஜி குடும்பத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் குடும்பத்தினருடன் உள்ளார்.

2011 01 20 1 0003 Tamil News Spot
சுதாகரன் திருமணம்

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அமைதியாக உள்ள சுதாகரன் சமீபத்தில் தனக்கு நெருக்கமானவர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது தனது மனக்குமுறலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். “அம்மா இருந்தபோது என்னை ஒதுக்கிவைத்தார்கள். அதற்கு சில காரணங்கள் இருந்தது. ஆனால், அவர் மறைவுக்கு பிறகு எனது உறவுகள் கூட என்னை கண்டுக்கொள்ளவில்லை. சித்தி, அத்தையோடு சிறைக்குள் ஒன்றாக சென்றவன் நான். என்னை வெளியே எடுப்பதற்கு எனது உறவுகள் யாருமே முயற்சி செய்யவில்லை. குறிப்பாக எனது சித்தி சசிகலாவும் இந்த விசயத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதே போல், என்னுடன் பிறந்த தினகரனும், பாஸ்கரனும் ஆரம்பத்திலேயே என்னை ஒதுக்கிவைத்துவிட்டார்கள். உறவுகள் எல்லாம் கஷ்ட நேரத்தில் என்னையும் எனது குடும்பத்தையும் உதறித்தள்ளி வேடிக்கை பார்த்ததை என்னால் மறக்கமுடியாது.

நான் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் அரசியல் பயணத்தில் ஈடுபடும் எண்ணம் உள்ளது. அம்மா அவர்களால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.கவில் தான் எனது அரசியல் பயணம் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

சிறையிலிருந்து வந்த சுதாகரனுக்கு ஆதரவாக தற்போது இருப்பது , அவரின் மனைவி வழி உறவினர்களான நடிகர் சிவாஜி குடும்பத்தினர் மட்டும் தானாம். சுதாகரன் உறவுகள் யாரும் அவரைக்கண்டுக்கொள்ளவில்லையாம். சுதாகரன் அப்பா விவேகானந்தன் மட்டுமே, சுதாகரனின் அபராதத்தொகையை கட்ட சில முயற்சிகள் எடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவர்களது குடும்பத்தினர் ஒத்துழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

186102 Tamil News Spot
நீதிமன்றத்தில் சுதாகரன்

இதையெல்லாம் மனதில் வைத்து இப்போது தனது உறவுகள் மீது கடும் கடுப்பில் இருக்கிறாராம் சுதாகரன். மேலும் அ.தி.மு.க வில் இணைவதற்காக அந்த கட்சியில் உள்ள முக்குலத்தோர் நிர்வாகிகள் மூலம் சில பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளது. ஆனால், அ.தி.மு.க தலைமையோ, “சசிகலாவையே கட்சிக்குள் கொண்டுவர விரும்பவில்லை. அவருடைய உறவுகளுக்கும் அதே நிலைதான்” என்று சொல்லியுள்ளார்கள். ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து அ.தி.மு.க வில் இணைவதற்கான முயற்சியில் சுதாகரன் இறங்கியுள்ளார். மற்றொருபுறம் தினகரனுக்கு செக் வைக்க அவரின் சகோதரர் சுதாகரனை கட்சிக்குள் கொண்டுவந்து நெருக்கடி கொடுக்கலாம் என்று சிலர் எடப்பாடியிடம் சொல்ல, அதையும் எடப்பாடி தரப்பு பரிசீலனையில் வைத்துள்ளதாம். தனது அரசியல் பயணம் உறுதியான பிறகே வெளிப்படையாக தனது கருத்துகளை முன்வைக்கவும் சுதாகரன் தயாராக இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.