ஆனால் இன்னொரு பக்கம் என் கணவரோ, எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு குறித்து மனதார ஒரு பாராட்டுகூட தெரிவிக்கவில்லை. நாள்கள் ஆக ஆக, அந்த ஜவுளி நிறுவன பிரநிதிகள், உரிமையாளர் என அவர்களுடன் எல்லாம் நான் கலந்தாலோசிப்பது, மீட்டிங்குக்கு சென்று வருவது என்றான போது, `எனக்கு இது பிடிக்கவில்லை’ என்பதை வெளிப்படையாகச் சொன்னார். ஆனால், இதில் அவருக்குப் பிடிக்காமல் போகும் அளவுக்கு என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. எனவே, அவர் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையில், டிசைன்கள் உருவாக்குவது, மெட்டீரியல்கள் வாங்குவது என்று நான் பொட்டீக் வேலைகளுக்கான முன்தயாரிப்புகளை உற்சாகமாகப் பார்க்க ஆரம்பித்தேன்.
மூன்று மாதங்கள் நான் என் வேலைகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், `இந்த வேலையை நீ செய்ய வேண்டாம்’ என என் கணவர் என்னிடம் சண்டைபோட ஆரம்பித்தார். அதுவரை என் 8 ஊழியர்களுடன், நான்கு சுவர்களுக்குள் நான் என் டெய்லரிங் கடையை நடத்திவந்தபோது இவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அதுவே, ஒரு ஜவுளி நிறுவனத்துடன் ஒப்பந்தம், அதன் பிரதிநிதிகளுடன் மீட்டிங், என் திறமை என் கடையைக் கடந்து வெளியே அங்கீகாரம் பெறுவது, கஸ்டமர் கொண்டு வந்து தரும் துணிகளையே தைத்துத் தந்தது தாண்டி, க்ளாத் பர்சேஸுக்கு என நான் வெளியே சென்றுவருவது என… என்னுடைய இந்த நகர்வெல்லாம் அவருக்குப் பிடிக்கவே இல்லை. அவருக்கு ஏன் பிடிக்க வேண்டும், எனக்கு இது பிடித்திருக்கிறது என்று நானும் பின்வாங்கவில்லை.

இந்நிலையில், புராஜெக்ட் வேலைகள் ஒரு மாதத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், அவர் என்னுடன் மிகத் தீவிரமாக, ஆக்ரோஷமாக சண்டை போட ஆரம்பித்தார். இந்தப் புதிய புராஜெக்ட்டில் அதிகப் பொறுப்புகள் இருக்கும், வீட்டை, குழந்தைகளை, அவரை எல்லாம் முன்னர் போல என்னால் முழுமையாக கவனிக்க முடியாது என்றார். `உங்களையெல்லாம் நான் முழுமையாக கவனித்து நல்ல அம்மா, நல்ல மனைவி பட்டங்கள் வாங்கியது போதும். பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள், அவர்களுக்கு நான் முன்னர் போல ஸ்பூன் ஃபீடு செய்யத் தேவையில்லை. நீங்களும் உங்கள் கம்ஃபர்ட் ஸோனை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத்தான் வேண்டும். ஏன் என்னை மட்டும் தியாகியாகச் சொல்கிறீர்கள்?’ என்று நானும் விட்டுக்கொடுக்காமல் பேசினேன்.
இனி சண்டையிலோ, பேச்சிலோ என்னைத் தடுக்க முடியாது என்று உணர்ந்தவர், அடுத்த ஆயுதமாக எமோஷனல் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார். என் மீது உள்ள பொஸசிவ்னெஸ்ஸால்தான் இப்படிச் சொல்வதாகக் கூறியவர், அதன் பின்னர் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை. அடிக்கடி டிரிங்ஸ் சாப்பிட ஆரம்பித்தார். அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து லன்ச் எடுத்துச் செல்வதை கைவிட்டார். ஏதோ அவர் வாழ்க்கையே சோகத்தில் மூழ்கியதுபோல நடந்துகொள்ள ஆரம்பித்தார். அதற்கு ஒற்றை காரணமாக என்னைச் சொல்லி, எனக்கு குற்ற உணர்ச்சி தர முயன்றார். அதில் அவரும் வெற்றியும் பெற்றுவிட்டார்.