Share on Social Media

ஊரடங்கு காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையை அதன் உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தியிருப்பதுதான் இன்றைய `ஹாட் டாபிக்’. சாமானியர்களைப் பாதிக்கும் விஷயம் என்பதால், இது உடனடி விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இதனால்தான், `கட்டுமானப் பொருள்களின் அதிரடி விலை உயர்வைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு கவனம் செலுத்த வேண்டும்’ என அ.தி.மு.க-வின் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

2020-ம் ஆண்டில் போடப்பட்ட கொரோனா முழு ஊரடங்குதான் கட்டுமானத்துறையைப் பெரிதும் பாதித்திருக்கிறது என சாதாரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், அதற்கு முந்தைய சில ஆண்டுகளாகவே கட்டுமானத்துறையும், ரியல் எஸ்டேட் துறையும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. தேவை குறைவு, வீடுகள் விற்பனைக் குறைவு, ஜி.எஸ்.டி-யால் கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம் என எக்கச்சக்கமான பிரச்னைகளை அதற்குக் காரணமாகச் சொல்லலாம்.

ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின்

இந்நிலையில்தான் நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு, இத்துறையை அதலபாதாளத்துக்கு தள்ளிவிட்டது. ஓராண்டுகள் ஆகியும், இன்னும் இத்துறை சார்ந்த பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் `கொரோனா 2.0′ ஊரடங்கால் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு மேலும் அதிகரித்திருக்கிறது.

ரூ.430-க்கு விற்ற ஒரு மூட்டை சிமென்ட் ரூ.460-ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் ரூ.6,000-க்கு விற்ற 100 கிலோ கம்பி, ரூ.7,000 ஆகவும்,

ரூ.8,500-க்கு விற்ற 3 யூனிட் ஜல்லி ரூ.9,500-ஆகவும்,

ரூ.23,000-க்கு விற்ற 3,000 எண்ணிக்கை கொண்ட ஒரு லோடு செங்கல் ரூ.28,000 ஆகவும் அதிகரித்துள்ளது.

பெயின்ட் விலையும் தரத்துக்கு ஏற்ப லிட்டருக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது.

haneen krimly FqAyHJpNhJA unsplash Tamil News Spot
Cement

மேலும், ரூ.3,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த எம்-சாண்ட் ஒரு யூனிட் விலை ரூ.4,000 ஆகவும்,

வி-சாண்ட் ஒரு யூனிட் விலை ரூ.4,500 -லிருந்து ரூ.5,100-ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்த திடீர் விலை ஏற்றத்தால் கட்டட உரிமையாளர்களும் ஒப்பந்ததாரர்களும், சொந்தமாக வீடு கட்டுபவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமானப் பொருள்களின் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ளவும், இதனால் வீடுகளின் விலை உயருமா என்கிற கேள்வியுடனும் கட்டுமானத்துறை நிபுணர் ஷியாம் சுந்தரிடம் பேசினோம். “கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

6082796820d71 Tamil News Spot
ஷியாம் சுந்தர்

குறிப்பாக, கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. ஆர்டர்கள் இல்லாததால் செங்கல் சூளைகள், கல் குவாரிகளின் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு, டிமாண்ட் அதிகம் என்கிற நிலை வரும்போது எந்தவொரு பொருளாக இருந்தாலும் விலை அதிகரிக்கத்தான் செய்யும். இதன் காரணமாகத்தான் கட்டுமானப் பொருள்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஸ்டீல் கம்பிகள் விலை ஏற்றம் சில மாதங்களாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. சீனாவின் ஸ்டீல் தேவை 2020-ம் ஆண்டில் 10% வரை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக அந்த ஆண்டில் அவர்களின் ஸ்டீல் தேவை சுமார் 9% அதிகரித்து காணப்பட்டது. இதனால் அவர்கள் அதிக அளவில் மற்ற நாடுகளிலிடமிருந்து இறக்குமதி செய்தார்கள். ஆஸ்திரேலியாவுடனான வர்த்தகப் போர் காரணமாக, அங்கிருந்து ஸ்டீல் இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, இந்தியாவின் பக்கம் அதிக கவனத்தைத் திருப்பினார்கள். இதனால் இந்திய உற்பத்தியில் ஸ்டீலுக்கான தேவை அதிகரிக்க ஆரம்பித்தது. தேவை அதிகமானதன் காரணமாக விலையும் அதிகமானது.

6010c75f52b46 Tamil News Spot
ஸ்டீல்

Also Read: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பாடையில் இருசக்கர வாகனம்! – கோவையில் காங்கிரஸார் நூதன போராட்டம் #NowAtVikatan

இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டீல் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள் இரும்புத்தாது. இதன் விலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது மிக அதிக அளவில் விலை ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பு 130 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மெட்ரிக் டன் இரும்புத் தாதுவின் விலை, தற்போது 200 டாலர் வரையில் விற்பனையாகிறது. இதுவும் ஸ்டீல் கம்பிகள் விலை அதிகரிக்க காரணமாகும்.

அதே போல நடப்பு 2021-ம் ஆண்டின் உலகத்தின் மொத்த ஸ்டீலுக்கான தேவை 4.1% இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது 5.8% என்கிற நிலையில் இருக்கிறது. அதே போல இந்தியாவின் ஸ்டீல் தேவையும், கடந்த ஆண்டைவிட நடப்பு 2021-ல் 19% அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுத் தேவைகளுக்கான இரும்புக் கம்பிகளின் விலை அதிகரிக்கவே செய்யும். அதே போல சிமென்ட் மற்றும் செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கும் தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி குறைவு என்பதுதான் காரணம்.

609cd9e66c498 Tamil News Spot
ஸ்டீல்

Also Read: ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் ஃபேவரைட் `டைட்டன்’ பங்கு; விரைவில் விலை ரூ.1,800-ஐ தொடுமா?

இந்தத் திடீர் கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தால், ஏற்கெனவே வீடு கட்ட ஒப்பந்தம் போட்டிருக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும், கட்டுமான நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். இறுதியாக அது விலை ஏற்ற வடிவில் சாமானியன் தலையில் வந்து விழும். வீடுகளில் விற்பனை தற்போது மந்தநிலையில் இருக்கிறது. கட்டுமானப் பொருள்களின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் வீடுகளின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது” என்றார் தெளிவாக.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *