Share on Social Media


மின்விசிறியின்மேல் பனி உறைந்து தொங்குவதைப் போல ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டுக் கதவிலும், மாடிப்படியின் கைப்பிடியிலும் பனி உறைந்திருக்கிற புகைப்படங்களைப் பதிவிட்டு, “இங்கே உள்ள வீடுகள் அதீத வெப்பத்தையும் புயலையும் தாக்குப் பிடிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. எங்களால் சமாளிக்க முடியவில்லை. பனி எங்கள் வீட்டை விழுங்கிக்கொண்டிருக்கிறது” என்று கவலை தெரிவிக்கிறார்கள் டெக்ஸாஸில் (Texas) வசிப்பவர்கள். “பனியை எதிர்கொள்ளும் கருவிகள் எதுவுமே எங்களிடம் கிடையாது, இது எங்களுக்குப் புதிய அனுபவம். மிரண்டு போயிருக்கிறோம்” என்பதுபோன்ற பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

கிட்டத்தட்ட ஒரு வாரமாக, மின்சாரம் இன்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள் டெக்ஸாஸ் மக்கள். கரி அடுப்பில் சமைப்பது, வீட்டுக்கான ஹீட்டர்கள் வேலை செய்யாததால் பல அடுக்குகளில் உடைகள் அணிந்துகொண்டு கடுங்குளிரை சமாளிப்பது, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு உண்பது என்று பலர் கற்காலத்துக்கே பயணித்துவிட்டார்கள்.

டெக்ஸாஸ் பனிப்பொழிவு

மைனஸ் பதினெட்டு டிகிரி செல்சியஸைத் தொட்டிருக்கிறது டெக்ஸாஸின் சராசரி வெப்பநிலை. பல லட்சம் மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல் தண்ணீர் சுத்திகரிப்பு மையங்களால் இயங்க முடியாது என்பதால் சுத்தமான குடிநீர் கிடைக்காத நிலை. இது எந்தமாதிரியான நோய்களை உருவாக்கும் என்று தெரியாமல் சுகாதாரத்துறை கவலையில் ஆழ்ந்துள்ளது.டெக்ஸாஸில் மட்டுமல்லாமல் அமெரிக்காவின் பிற மாகாணங்களிலும் வசிக்கும் மக்களுக்குப் பொதுவாக பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பனிப்புயலால் 35-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். முதியவர்கள் பலர் கடுங்குளிரைத் தாங்க முடியாமல் திணறுகின்றனர். சில இடங்களில், கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைவான வெப்பநிலை பதிவாகியிருக்கிறது.

Also Read: ”மன அழுத்தம் எனக்கு ஏன் வந்தது?” – மனம் திறந்த கோலி!

இந்த திடீர் பனிப்புயலுக்கும், பனிப்பொழிவுக்கும் காரணமாக சொல்லப்படுவது படைமண்டல திடீர் வெப்பமாதல் (Sudden Stratospheric warming) என்கிற நிகழ்வு.

நமது வளிமண்டலத்தில் பல அடுக்குகள் உண்டு என்று பள்ளியில் படித்திருப்போம். அதில் மூன்றாவது அடுக்கு, படைமண்டலம் அல்லது அடுக்கு மண்டலம் (Stratosphere) என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலத்தில் ஆர்ட்டிக் பகுதியின் படைமண்டலத்தில் உள்ள காற்றின் வெப்பநிலை குறையும். குளிர்காற்றுக்கு அடர்த்தி அதிகம் என்பதால் அது வெளியில் எங்கும் போகாமல், வடதுருவப் பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். இது துருவச் சுழல் (Polar Vortex) என்று அழைக்கப்படுகிறது.

துருவப் பகுதிகளில் இருக்கும் காற்றோடு ஒப்பிடும்போது, அதற்குத் தெற்கே உள்ள காற்றின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இந்த வெப்பகாற்றுக்கும் குளிர்காற்றுக்கும் இடையே காற்று மண்டலம் ஒன்று உருவாகும். இது துருவச் சுழலுக்கு அணைகட்டியதைப் போல, வேகமாக சுற்றிக்கொண்டிருக்கும். இது Polar Night Jet என்று அழைக்கப்படுகிறது.

Tamil News Spot
Polar Vortex | துருவச் சுழல்

துருவச் சுழல் என்பது இயற்கை சுழற்சியில் ஒரு அங்கம். இந்த துருவச் சுழலை, சுற்றிக்கொண்டிருக்கிற ஒரு பம்பரத்தோடு ஒப்பிடுகிறார்கள் அறிவியலாளர்கள். சின்ன ஒரு சலனம் ஏற்பட்டால்கூட பம்பரம் விழுந்துவிடும் இல்லையா, அதைப் போலத்தான் துருவச் சுழலும். எல்லாமே சமநிலையில் இருந்தால் மட்டுமே துருவச்சுழலும் சமநிலையில் இயங்கும்.

துருவச்சுழலுக்கும் தெற்கேயுள்ள காற்றுக்கும் இடையே இருக்கும் அணைப்பகுதி முக்கியமானது. இந்த அணைக்காற்று இல்லாவிட்டால் ஒவ்வொரு குளிர்காலத்திலும் துருவப்பகுதியிலிருந்து வரும் கடுங்குளிர்க் காற்று தெற்கே இறங்கி எல்லாரையும் படாத பாடு படுத்திவிடும். இந்த அணைக்காற்று ஒழுங்காக இயங்கவேண்டுமானால், தெற்கே உள்ள காற்றுக்கும் துருவப் பகுதிக்கும் வெப்பநிலையில் போதுமான அளவு வேறுபாடு இருக்கவேண்டும். வேறுபாடு குறைவாக இருக்கும்போது, அணைக்காற்று சீர்குலையும்.

எதாவது ஒரு நிகழ்வால் படைமண்டலத்தின் காற்று வெப்பமடைகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு சீட்டுக்கட்டு கோபுரத்தைப்போல எல்லாமே சரியும். துருவச் சுழல் வலுவிழக்கும். அணைப்பகுதி உடையும். துருவப் பகுதிகளில் மட்டுமே இருந்த கடுங்குளிரான காற்று, தெற்கே இறங்கி, கீழுள்ள நாடுகளை எல்லாம் பாதிக்கும்.

இந்த வருடம் ஜனவரி மாதமே படைமண்டல திடீர் வெப்பமாதல் நிகழ்ந்துவிட்டது. அப்போதே உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள், “துருவச் சுழல் எப்போது வேண்டுமானால் உடையலாம், கடுங்குளிர் தாக்கலாம், தயாராக இருங்கள்” என்று எச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள். “Winter is coming” என்று ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ மொழியில் அறைகூவல் விடுத்தார்கள்.

குளிரின் தாக்கம் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை அப்போது விஞ்ஞானிகளால் உடனடியாகக் கணிக்க முடியவில்லை.

AP21049623928056 Tamil News Spot
டெக்ஸாஸ் பனிப்பொழிவு

இப்போது டெக்ஸாஸ் மக்கள் படும் அவதிக்குப் பல காரணங்கள் உண்டு. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், அது கடுங்குளிருக்குப் பழகிய இடம் இல்லை என்பதால் பனிப்பொழிவிற்கான முன்னேற்பாடுகள் அங்கு பொதுவாகவே குறைவு. வேறு சில காரணங்களால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதில், குளிர்காலத்தில் ஓரளவு மக்களைப் பாதுகாக்கக்கூடிய வீட்டின் ஹீட்டர்கள் வேலை செய்யவில்லை, குளிர் தாங்கமுடியாமல் பலர் இறந்துவிட்டார்கள். குடிநீர்ப் பிரச்சனையும் மின்சாரத் துண்டிப்பால் ஏற்பட்டதுதான். இதுவரை இல்லாத புதிய ஒரு பேரிடரை எதிர்கொள்ள முடியாமல் டெக்ஸாஸ் நிர்வாகம் திணறுகிறது.

எல் நினோ அலைவு, வழக்கமான காலநிலை சுழற்சி ஆகிய பல காரணங்களால் படைமண்டலத்தின் வெப்பம் அதிகரிக்கும். இந்த முறை துருவச் சுழல் உடைந்ததற்கு எது காரணம் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.

Also Read: செவ்வாய் கிரகத்தில் ‘Perseverance’ ரோவர்… என்னவெல்லாம் செய்திருக்கிறது… இனி என்ன செய்யும்?!

“காலநிலை மாற்றம் இதற்கு ஒரு காரணமாக இருக்குமா?”, என்பது ஒரு முக்கியமான கேள்வி. சில தசாப்தங்களாகவே துருவச் சுழல் வலுவிழந்துகொண்டே வருகிறது என்று சொல்லும் விஞ்ஞானிகள், ஏற்கனவே நாம் குறிப்பிட்ட பம்பர உதாரணத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். “இப்போதைய துருவச் சுழல் என்பது சரியான அச்சு கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கும் பம்பரத்தைப் போன்றது. ஆகவே காற்றில் ஒரு மிகச்சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட உடனே சரிந்துவிடும்” என்கிறார்கள்.

உலகின் மற்ற பகுதிகளோடு ஒப்பிடும்போது ஆர்ட்டிக் பகுதியின் சராசரி வெப்பநிலை இருமடங்கு வேகமாக உயர்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது ஆர்ட்டிக் பெருக்கம் (Arctic amplification) என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஆர்ட்டிக் பகுதியின் எல்லா வழக்கமான சுழற்சிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தவிர, காலநிலை மாற்றத்தின் தீவிரம் அதிகரிக்கும்போது, எளிதில் கணிக்கமுடியாத, சமாளிக்கமுடியாத இதுபோன்ற பருவகாலநிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும்.

AP21048685741279 Tamil News Spot
டெக்ஸாஸ் பனிப்பொழிவு

சில காலநிலை வல்லுநர்கள், “டெக்ஸாஸின் இந்த குறிப்பிட்ட பனிப்பொழிவுக்குக் காலநிலை மாற்றம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், காலநிலை மாற்றத்தின் பின்னணியில்தான் எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன என்பது உண்மை. துருவச் சுழலைப் பற்றிய பல அம்சங்களை ஆராய்ந்து வருகிறோம், ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகும்போது தெளிவு கிடைக்கலாம்” என்கிறார்கள்.

“சென்ற வருடம் முழுக்க கொரோனா பீதியிலேயே கழிந்தது, இந்த வருடம் எதிர்பாராத பனிப்பொழிவு. வரலாற்று நிகழ்வுகளுக்குள்ளேயே வாழ்வது அலுப்பூட்டுகிறது. இயல்பு வாழ்க்கை எப்போதுதான் வரும்?” என்று டெக்ஸாஸ்வாசி ஒருவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

டெக்ஸாஸின் பனிப்புயல் தனிப்பட்ட ஒரு நிகழ்வா அல்லது எதிர்காலத்துக்கான பொது எச்சரிக்கையா என்பது போகப்போகத்தான் தெரியும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *