Share on Social Media


முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சின் எளிமை, திறமை, தலைமை மாண்பு, அரசியல் பக்குவம், பெண்களை மதிக்கும் பாங்கு… சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் நுாறாண்டு காலம் நன்றாக வாழ வேண்டும்.
– நடிகை கஸ்துாரி சங்கர்

‘கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்கு, கட்சியே அல்லோகலப்பட்டது. இந்த ஆண்டு வெகுசிலரே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தான் அரசியல்…’ என, விரக்தியுடன் கூறத் துாண்டும் வகையில், நடிகை கஸ்துாரி சங்கர் அறிக்கை.

காலில் செருப்பு இல்லை; கல்யாணம் பண்ணி கொள்ளவில்லை. குடும்ப சொத்து தவிர வேறில்லை. ஊருக்கு உழைப்பவர்; மிகவும் எளிமையானவர், நாகர்கோவில் தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., – எம்.ஆர்.காந்தி. பலர் தங்களை எளிமையானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், எளிமையின் கூடாரம், ஆர்.எஸ்.எஸ்., – பா.ஜ.,
– தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘இவரை போன்றவர்களால் தான், நாட்டில் இன்னும் மழை பெய்கிறது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

இந்த உலகிற்கு கேரளா செய்துள்ள மிகப் பெரிய ஏற்றுமதி, நம் நர்ஸ்கள் ஆவர். ஆம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் நம் மாநில நர்ஸ்கள், மனித குலத்திற்கு சேவையாற்றி வருகின்றனர். இது, நமக்கு பெருமையான ஒன்றாகும்.
– கேரள முதல்வர் பினராயி விஜயன்

‘உண்மை தான். கேரளாவின் முகங்களாக, உலகம் முழுக்க, அந்த மாநில பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்ல நோக்கத்திற்காக வசதி படைத்தவர்களும், மனம் படைத்தவர்களும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகிறேன்.
– பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

‘கடந்த ஆண்டு, அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., இது போல கேட்ட போது, தி.மு.க., பிரமுகர்கள் சிலர், ‘இப்படி பிச்சை எடுக்கலாமா…’ என்றனர். அது, இப்போது நினைவுக்கு வருகிறது…’ எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.

கடந்த ஆண்டு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனாவால் மரணமடையும் முன்கள பணியாளர்களுக்கு, 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றார். இப்போது முதல்வரானதும், முன்கள பணியாளர்கள் மரணத்திற்கு, 25 லட்சம் ரூபாய் தான் ஒதுக்கியுள்ளார். இது தான் மரணத்தில் செய்யப்படும் அரசியலா?
– பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனா படுத்தும் பாட்டில், ‘ஏன் இந்த பதவிக்கு இப்போது வந்தோம்…’ என, வருத்தப்படுவார்…’ எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *