Share on Social Media


‘பெகாசஸ்’ போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் வாரம் முற்றிலும் முடங்கியது. தங்கள் உயிரைக் கொடுத்து வரியை செலுத்தும் மக்களின் பணம், எதிர்க்கட்சியினரின் அமளியால் வீணடிக்கப்படும் அவலம் தொடர்கிறது.

பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் 19ல் துவங்கியது. ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் வாயிலாக அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதித்துறையைச் சேர்ந்தவர்களின் போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எதிர்க்கட்சியினர் அமளி

இதைக் கண்டித்து கூட்டத் தொடரின் முதல் இரண்டு நாட்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இரண்டு சபைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அலுவல்கள் நடத்தப்படாமல் சபைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பக்ரீத் விடுமுறைக்குப் பின் நேற்று முன்தினம் மீண்டும் துவங்கிய கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வார இறுதி நாளான நேற்றும் எதிர்க்கட்சியினரின் அமளி நீடித்தது. நேற்று காலை முதலே, இரு சபைகளையும் போன் ஒட்டு கேட்பு விவகாரம் பெரிய அளவில் ஆட்டிப் படைத்தது.லோக்சபா கூடியதும் பெரும் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் கேள்வி நேரம் துவங்கியது. சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசியலாக்க வேண்டாம். அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என, பிரதமர் கூறுவதை எதிர்க்கட்சியினர் கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்றார்.

தீர்மானம் தாக்கல்

அப்போது எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சபையின் மையப் பகுதியில் திரண்டு கூச்சலிட்டனர். விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்தும் கோஷமிட்டனர்.அவர்களை சமாதானப்படுத்த முயன்று, முடியாமல் போகவே, சபையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்தி வைத்தார். ராஜ்யசபாவிலும் துவக்கம் முதலே களேபரமானது. மறைந்த எம்.பி.,க்களுக்கு சபைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் உரை வாசித்து முடித்ததும், பார்லி., விவகாரத் துறை இணையமைச்சர் முரளிதரன் ஒரு தீர்மானம் தாக்கல் செய்தார். குரல் ஓட்டெடுப்பிலேயே அது நிறைவேறியது.

அதன்படி நேற்று முன்தினம் சபையில் அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முயன்றபோது, அதை பறித்துக் கிழித்து வீசிய திரிணமுல் எம்.பி., ஷாந்தனு சென், இந்த கூட்டத்தொடர் முழுதும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதை எதிர்த்து திரிணமுல் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் எம்.பி.,க்கள் கடுமையான வாக்குவாதத்தில் இறங்கினர். ‘சபை அலுவல் கையேட்டில் குறிப்பிடாத நிலையில், அமைச்சர் முரளிதரன் எப்படி தீர்மானம் தாக்கல் செய்யலாம்?’ என கேட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதைப் பொருட்படுத்தாத சபைத் தலைவர் வெங்கையா நாயுடு, ”சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் சபையை விட்டு ஷாந்தனு சென் வெளியேற வேண்டும்,” என உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சிகளின் அமளி அதிகமானதால் சபை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போது துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ”தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டதால் தயவு செய்து சபையை விட்டு ஷாந்தனு சென் வெளியேற வேண்டும்,” என்றார். அப்போதும் சபையை விட்டு வெளியேற ஷாந்தனு சென் மறுத்துவிட்டார். அவருக்கு ஆதரவாக பிற எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷமிட்டதால் சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் சபைக்குள்ளேயே ஷாந்தனு சென் இருந்ததால் பரபரப்பு அதிகமானது.

மீண்டும் சபை கூடியபோது எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெகாசஸ் விவகாரத்தை எழுப்பினார். இதற்கு மூத்த அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இரு தரப்புக்கும் வாக்குவாதம் அதிகமானதால் வேறு வழியின்றி நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்த வாரம் முழுதும் பார்லி., நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.

நாட்டின் மாண்புக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல!

பார்லிமென்டில் அரசு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்ட நிகழ்வுகள், கடந்த காலங்களிலும் நடந்துள்ளன.எனினும் எந்த மாதிரியான
பிரச்னையாக இருந்தாலும் மூன்று நாட்களுக்குள் அதற்கு தீர்வு காணப்பட்டு விடும்.

தீர்வு காண முயற்சி

மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், காங்., மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, மறைந்த முன்னாள் பிரதமரும், பா.ஜ., மூத்த தலைவருமான வாஜ்பாய் உள்ளிட்டோர் இது போன்ற பார்லி., பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சித்தனர்; அதில் வெற்றியும் அடைந்தனர்.ராஜிவ் தலையிலான காங்., அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ‘போபர்ஸ்’ ஊழல் விவகாரம் பூதாகரமானது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாய், பார்லி.,யில் இந்த விவகாரத்தை வைத்து, எதிர்ப்பை பதிவு செய்தார்.

கூட்டத்தொடரின் இரண்டு நாட்களுக்கு மட்டும் வெளிநடப்பு செய்தார். பின் சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் பேசி, விவாதம் நடத்தி இந்த பிரச்னைக்கு வாஜ்பாய் தீர்வு கண்டார். பிரச்னைகளை வைத்து அரசியல் செய்யாமல், அதற்கு தீர்வு காண்பதை அவர் உறுதியாக பின்பற்றினார்.எனினும் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் உள்ள காங்., கட்சியில், மூத்த தலைவர்கள் என யாரும் இல்லாததால், இந்த பிரச்னைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

காங்கிரசின் தற்காலிக தலைவராக உள்ள சோனியா, இதற்கு முயற்சியே எடுப்பதில்லை. மகன் ராகுலும், முந்தைய சபை நிலவரங்கள் குறித்து அறிவதில்லை. இவருக்கு வழி கூறும் தலைவர்களும் கட்சியில் ஓரங்கட்டப்படுகின்றனர். அரசுடன் ஒத்துழைக்க காங்., தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனாலும் மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்தி முடிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.’நிலைமை இப்படிச் சென்றால், இந்தியாவின் மாண்பும், ஜனநாயகமும் சீர்கெடும். எதிர்க்கட்சியினர் ஆரோக்கியமான அரசியலைச் செய்வதிலிருந்து வெகு துாரத்திற்குச் சென்று விட்டனர்.

வருந்தத்தக்க விஷயம்

‘லோக்சபா சபாநாயகராக, காங்.,கைச் சேர்ந்த பல்ராம் ஜாக்கர் இருந்தபோதெல்லாம், கண்ணியம் காட்டி, எதிர்க்கட்சித் தலைவர்களோடு அளவளாவுவார்.’மன்மோகன் பிரதமராக இருந்தபோது கூட, இவ்வளவு பகைமை பாராட்டியதில்லை. மோடியின் கடந்த கால ஆட்சியின்போது, எதிர்க்கட்சியினரிடம் வலியச் சென்று பேசினார். ஆனால், அவர்கள் முகம் கொடுக்காமல் தவிர்க்கத் துவங்கினர். அதனால் இவரால் தற்போது அவர்களை நெருங்க முடியவில்லை.’பார்லிமென்ட் சபைகளின் தற்போதைய நிலை நீடிப்பது, மிகவும் வருந்தத்தக்க விஷயம்’ என, இரு சபைகளையும் 40 ஆண்டுகளாக நன்கு அறிந்த, டில்லியின் அனைத்து அரசியல்வாதிகளையும் நன்கு அறிந்த மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவிக்கிறார்.

43.20 கோடி ரூபாய் வீண்!

பார்லிமென்டில் மழைக்கால கூட்டத்தொடர் 19ல் துவங்கியது. முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு, அலுவல் நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர்.கூட்டத்தொடர் நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகிறது. ஒரு மணி நேரத்திற்கு, ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஒரு நாளில் ஆறு மணி நேரம் அலுவல்கள் நடக்கின்றன. அதன்படி பார்த்தால், ஒரு நாளுக்கு 10.80 கோடி ரூபாய் செலவாகிறது.
இந்த கூட்டத்தொடரில் பக்ரீத் விடுமுறையை கழித்தால், இதுவரை நான்கு நாட்கள் அலுவல் பணிகள் முடங்கியுள்ளன. இந்த நான்கு நாட்களில் 43.20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு

உள்ளது. மக்களின் பணம் இப்படி வீணாவதை சிறிதும் உணராமல், அமளியில் ஈடுபட்டு பார்லி., அலுவல்களை எதிர்க்கட்சிகள் முடக்கி வருவதற்கு, பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.- நமது டில்லி நிருபர் –

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *