அவிநாசி:புகையிலை, குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் வியாபாரிகளின் உதவியுடன், அவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்வது, விசாரணையில் தெரிய வருகிறது.உயிருக்கு கேடு விளைவிக்கும் புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும், மாவட்டத்தின் பல இடங்களில் அவற்றின் விற்பனை பரவலாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வப்போது போலீசார் ரெய்டு நடத்தி, குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், தெக்கலுாரில் பேன்ஸி கடை வைத்திருக்கும் வட மாநிலத்தை சேர்ந்த சம்புசிங் , வாடகைக்கு குடியிருக்கும் உள்ளூரை சேர்ந்த மளிகை பொருள் வியாபாரிக்கு சொந்தமான வீட்டில் இருந்து, 700 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதில், தடை செய்யப்பட்ட கணேஷ், கூல் லிப், ஹன்ஸ், சுவாகாட் கோல்டு, இன்டோரி பான் என பலவகை புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.எங்கிருந்து வருகிறது?போலீசார் கூறியதாவது:கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்க தடையில்லை. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பலர் பேன்ஸி, துணிக்கடை, காகித டம்ளர், தட்டு உள்ளிட்ட பொருட்களை விற்கும் கடைகளை வைத்துள்ளனர். அவர்களில் பலர் இணைந்து, கர்நாடகாவில் உள்ள புகையிலை பொருள் மொத்த வியாபாரியிடம் பணத்தை செலுத்தி விடுவார்கள்.அவர்கள், அங்கிருந்து காய்கறி ஏற்றி வரும் வாகனம், கன்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களில், புகையிலை பொருட்களை ஏற்றி அனுப்பி விடுகின்றனர்.
போக்குவரத்து செலவினத்தை, இங்குள்ள வியாபாரிகளே ஏற்க வேண்டும். அவற்றை நமது ஊரில் உள்ள வட மாநில மொத்த வியாபாரி ஒருவர் வாங்கி, அத்தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு பிரித்து கொடுத்து விடுவார்.ஆசைப்பட்டால்…புகையிலை பொருட்களை விற்கும் வட மாநில வியாபாரிகள், போலீசாரின் ரெய்டுக்கு பயந்து, உள்ளூரில் உள்ள வியாபாரிகளின் கடை வீடுகளில், அவற்றை இருப்பு வைத்துக் கொள்கின்றனர்; அதற்கு மாத வாடகையும் கொடுத்து விடுகின்றனர்.
வாடகைக்கு ஆசைப்பட்டு, சட்டவிரோத பொருள் பதுக்களுக்கு துணை போகும் உள்ளூர்வாசிகளும், போலீசாரின் ரெய்டின் போது சிக்கி, சிறை செல்ல வேண்டியுள்ளது. எனவே, வடமாநில வியாபாரிகளுக்கு கடை வாடகைக்கு கொடுப்போர் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, போலீசார் கூறினர்.
Advertisement