Share on Social Media


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக களப் போராட்டம், மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு மற்றும் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் – மொழி உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதை மத்திய அமைச்சர்களின் கவனத்துக்கு நேரடியாகக் கொண்டுசெல்வது என தொடர்ச்சியான போராட்டக் களத்தில் இருந்துவரும் மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழருமான சு.வெங்கடேசனிடம் பேசினேன்…

“தென்னக ரயில்வே பணிகளில், வட இந்தியர்களை நியமித்ததற்கு எதிராக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தீர்களே… என்னாச்சு?”

“ரயில்வே வாரியம், தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்குதான் விண்ணப்பிக்க முடியும். அதேசமயம், எந்த மொழியில் வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

ரயில்வே துறை

Also Read: அதெல்லாம் அண்ணாமலை அள்ளிவீசும் பொய்! – சுளீர் சு.வெங்கடேசன்

உத்தரப்பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படி இதர ரயில்வேயில் தேர்வு செய்யப்பட்டவர்களை தெற்கு ரயில்வேயில் நியமிப்பது சட்ட விரோதமாகும். அதுமட்டுமல்லாமல், உ.பி-யில் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண்கள் தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களைவிட குறைவானதாகும். இப்படி எந்தவகையிலும் பொருத்தமில்லாமல் எடுக்கப்பட்டுவரும் தென்னக ரயில்வேயின் தொடர் நடவடிக்கைகளால் தமிழர்களின் வேலை வாய்ப்பு வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் நான் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று தற்போது கோரக்பூர் தேர்வாளர் பட்டியலைத் திருப்பி அனுப்பிருக்கிறது தெற்கு ரயில்வே!”

“தமிழக அரசு அதிகாரிகளின் தாமதத்தால்கூட தமிழகம் சார்ந்த ரயில்வே திட்டப்பணிகள் குறித்த காலத்துக்குள் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறதுதானே. இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்குக் கடிதம் எழுதியிருக்கிறீர்களா?”

“நிச்சயமாக… மதுரை -தூத்துக்குடி; மணியாச்சி- நாகர்கோயில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டைப் பாதை திட்டங்களும், மதுரை- போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டங்களும் ;பேரளம்- காரைக்கால் புதிய பாதை திட்டமும் மார்ச் 2022- க்குள் முடிய வேண்டியவையாகும்.

stalin Tamil News Spot
மு.க.ஸ்டாலின்

ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் இந்தத் திட்டங்களில் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுப்படி மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து அந்த மண்ணில் தாது பொருள்கள் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு. ஆனால் முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனைக் கூடங்களை நிர்ணயிக்காததாலும், உயர்நீதிமன்றத்தின் மற்ற கருத்துக்கள் குறித்தும் ஒரு உத்தரவு வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் உருவான இந்தத்தடைகளால் முக்கியமான அடித்தள கட்டுமான ரெயில் வளர்ச்சிப்பணிகள் முடிவடைவது தாமதமாகிறது. எனவே இன்றைய தமிழக முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றுள்ளேன்.”

“அஞ்சல் துறைப் பணி நியமனங்களிலும்கூட வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவதாக சொல்லப்படுகிறதே?”

“உண்மைதான். அஞ்சல் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில், மாநில மொழித் தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் தமிழ் மொழியே அறியாதவர்களும் அஞ்சல் துறைப்பணியிடங்களில் நியமனம் பெற்றுவிடுகிறார்கள். இவர்களிடம் சேவை நாடி வரும் பொது மக்கள் தங்கள் தேவைகளைச் சொல்லி சேவையைப் பெற முடியாமல் திண்டாடுகிறார்கள். இதனால், அந்த பணியாளர்களும் தங்கள் பணியைத் திறம்பட ஆற்ற முடிவதில்லை. அஞ்சல் அலுவலகங்களின் கதவைத் தட்டுபவர்களில் பெரும்பான்மையோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக்கான மக்களை இணைக்கிற அஞ்சல் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா?

indian post Tamil News Spot
அஞ்சல் அலுவலகம்

எனவே, அஞ்சல் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும். பள்ளி இறுதித் தேர்வு அல்லது மேல்நிலைக் கல்வித் தேர்வில் தமிழ்ப் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்தத் தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறேன். அரசியலமைப்புச் சட்டம் 347-வது பிரிவின்படி ஒரு மாநில அலுவல் மொழியாக அந்த மாநில மொழியையே தேர்வு செய்யவேண்டும் என்று சொல்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலேயே தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு வந்தது. அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள மொழி உரிமையைப் பாதுகாக்கும் வண்ணம், `தமிழ்நாட்டு அஞ்சல் சிறுசேமிப்பு படிவங்களில் தமிழ் மொழி அச்சடிக்கப்பட வேண்டும்’ என ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தேன். என் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தகவல் தொடர்பு அமைச்சகம், `தமிழ்நாட்டில் இனி சிறுசேமிப்புப் படிவங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே அச்சடிக்கப்பட வேண்டும்’ என்ற உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.”

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரில், புதிதாக மருத்துவ மாணவர்களை சேர்க்க அனுமதி கோரியுள்ளதாகத் தமிழக அரசு சொல்கிறது. அதேசமயம், ‘தமிழக அரசுதான் மாணவர்களுக்கான மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பை மறுக்கிறது’ என்கிறது தமிழக பா.ஜ.க. இதில் எது உண்மை?”

“மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நிறைவடைய காலதாமதம் ஆகும். எனவே, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் பெயரில் சுமார் 50 மாணவர்கள் சேர்க்கையை ஆரம்பித்து மருத்துவக் கல்வியைத் தொடர ஒன்றிய அரசு அனுமதி தரவேண்டும் என்று கோரியிருந்தது தமிழக அரசு.

ஆனால், ஒன்றிய அரசோ `50 மாணவர்களுக்கான தற்காலிக மருத்துவக் கல்லூரியைத் தொடங்கத் தமிழக அரசுதான் முதலில் இடம் ஒதுக்கித் தரவேண்டும்’ என பதில் கடிதம் அனுப்பியிருக்கிறது. இதில், தற்காலிக கல்லூரிக்குத் தேவையான வசதிகள் என அவர்கள் பட்டியலிட்டுள்ளதைப் பார்த்தால் அது நிரந்தரக் கல்லூரிக்குத் தேவையான பெரிய பட்டியல். இதற்கான நிதியை யார் தருவார்கள் என்பது பற்றி கடிதத்தில் எதுவும் பேசவில்லை. மேலும், 50 மாணவர்கள் சேர்க்கை என்பதற்கு முறையான அனுமதியை ஒன்றிய அரசின் மருத்துவ கவுன்சில்தான் தரவேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களைத் தாங்களே அதிகரித்துக்கொள்ளும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை என்று தெரிந்தும்கூட அதைப்பற்றிப் பேச மத்திய அரசு ஏன் மறுக்கிறது?

narendira modi Tamil News Spot
நரேந்திர மோடி

செலவுகளையெல்லாம் தமிழக அரசே ஏற்று செய்வதாக இருந்தாலும்கூட 50 இடங்களுக்கான தேசிய மருத்துவக் கழகத்தின் ஒப்புதல் கிடைப்பதற்கான உத்தரவாதம் உண்டா? இப்படி எந்தக் கேள்விக்கும் மத்திய அரசிடம் பதில் இல்லை! இந்தப் பின்னணி விவரங்களையெல்லாம் மறைத்துவிட்டு, `எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கையை வைத்துக்கொண்டு எப்படியெல்லாம் அரசியல் செய்யலாம்’ என்பதில் மட்டுமே பா.ஜ.க-வினர் ஆர்வம் செலுத்துகிறார்கள்!”

“தமக்கு வந்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு, கங்கையை சுத்தப்படுத்தும் பணிக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி. இதைக்கூட விமர்சனம் செய்கிறீர்களே சரிதானா?”

“பரிசுப்பொருளை ஏலம் விடுவதையும், பாரதத்தின் பொதுத்துறைகளை ஏலம் விடுவதையும் சமகாலத்தில் ஒருவர் செய்கிறார். கங்கைக்கு அர்ப்பணிப்பதைக் குறைசொல்ல ஒன்றுமில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு அர்ப்பணிப்பதை சகித்துக்கொள்ள எதுவுமில்லை!”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *