Share on Social Media


அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான உட்கட்சித் தேர்தல், பல்வேறு களேபரங்களுக்கிடையே நடைபெற்று முடிந்திருக்கிறது. ஒன்றரைக் கோடி தொண்டர்களைக்கொண்ட அ.தி.மு.க-வில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இருவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜை நேரில் சந்தித்து, அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஓமபொடி பிரசாத் சிங்

“அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வந்த தொண்டரையே அடித்து விரட்டுகிறீர்களே… இதுதான் கட்சியின் ஒருமித்த செயல்பாடா?”

“வேட்புமனு கொடுத்து, தேர்தலைச் சந்திக்கவே பயப்படுகிற கட்சித் தலைவர்களுக்கு மத்தியில், அ.தி.மு.க-வில்தான் ஜனநாயக பூர்வமாக தேர்தலை நடத்தியிருக்கிறோம்.

மற்றபடி கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் செய்யும் குழப்பத்தையெல்லாம் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.”

“’நானும் எடப்பாடி பழனிசாமியும் மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்கள் அல்ல’ என கடந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருந்த நிலையில், மீண்டும் அவர்களே கட்சியின் தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, ‘இருக்கிற இடத்தைத் தக்கவைத்துவிட வேண்டும்’ என்ற முயற்சிதானே?”

“ஓ.பன்னீர்செல்வம், மிகப் பொறுமையாக தெளிவாக எதிர்கால சிந்தனையுடன் பேசக்கூடியவர். ‘எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல், மாபெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் அல்ல நாம். எனவே, எல்லோரும் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க-வை வலுவான கட்சியாக நடத்திச்செல்வோம்’ என்றுதான் கூறினார். அப்படித்தான் கட்சியும் கட்டுக்கோப்பாக சென்றுகொண்டிருக்கிறது. எனவே, எங்கள் இயக்கத்தைக் கைப்பற்ற யார் நினைத்தாலும் ஏமாந்துதான் போவார்கள்.”

o panneerselvam Tamil News Spot
ஓ.பன்னீர்செல்வம்

“வழிகாட்டுதல் குழு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாத அ.தி.மு.க தலைமை, தங்கள் பதவிகளைத் தக்கவைக்கும் தேர்தலில் மட்டும் அவசரம் காட்டியிருப்பது, எப்படி கட்சியின் நலனுக்கானதாக இருக்க முடியும்?”

“அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தின் கருத்துகள் குறித்து, பொதுவெளியில் வெளிப்படையாக பேசுவது உகந்தது அல்ல.”

“எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த புகழேந்தி, அன்வர் ராஜா ஆகியோர் நீக்கப்பட்டிருப்பது கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தை நிரூபிக்கிறதுதானே?”

“கூட்டணிக் கட்சி குறித்து கட்சியின் தலைமைதான் முடிவெடுத்துப் பேசவேண்டும். ஆனால், புகழேந்தி இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவெடுத்துப் பேசிவிட்டார். எனவே, கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவித்துவிட்டார் என்ற அடிப்படையில்தான் நீக்கப்பட்டார். மற்றபடி இணை ஒருங்கிணைப்பாளருக்கும் புகழேந்தி நீக்கத்துக்கும் எந்தவித நேரடி சம்பந்தமும் இல்லை.”

anvar raja Tamil News Spot
அன்வர் ராஜா

“மூத்த தலைவரான அன்வர் ராஜா, அ.தி.மு.க மீதான அக்கறையில் பேசுவதைக்கூட, கட்சி விரோதமாக பார்ப்பதென்பது ஜனநாயகம்தானா?”

“கட்சி குறித்தோ அல்லது அதன் தலைவர்கள் குறித்தோ மாறுபட்ட கருத்து இருந்தால், அதுகுறித்து உட்கட்சிக் கூட்டத்தில் பேசவேண்டுமா அல்லது பொதுவெளியில் பகிரங்கமாக சொல்ல வேண்டுமா? அப்படிப் பொதுவெளியில் பேசுவதை இந்தியாவில் உள்ள எந்தவொரு கட்சியாவது அங்கீகரிக்குமா?

அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களை தினமும் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேட்டியளித்து தன் சொந்த விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார் அன்வர் ராஜா. எனவேதான் கட்சியிலிருந்து அவரை நீக்கியதற்கு, தொண்டர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள்.”

Also Read: இறைச்சிக்காக ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட கழுதைகள்; விரட்டி பிடித்த வேலூர் போலீஸ்; நடந்தது என்ன?

“வழிகாட்டுதல் குழு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்த செங்கோட்டையனுக்கு வைக்கப்பட்ட செக், ‘அன்வர் ராஜா நீக்கம்’ என்று சொல்கிறார்களே?”

“அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், உட்கட்சிப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதை ஊடகத்தில் செய்தியாக வெளியிடுவதும், அதுகுறித்து விமர்சிப்பதும் ஒப்புக்கொள்ள முடியாத விஷயம். இது எங்கள் கட்சியினுடைய உட்கட்சி ஜனநாயக மரபு. இதுகுறித்தெல்லாம் பொதுவெளியில் பகிரங்கமாக பேசுவதென்பது, கட்சியின் பொறுப்பில் இருந்துவரும் எனக்கு அழகல்ல.”

sengottaiyan Tamil News Spot
செங்கோட்டையன்

“சசிகலாவுக்கு ஆதரவு தீர்மானம் கொண்டுவந்த தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தினர் மீது அ.தி.மு.க என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?”

“அப்படியெல்லாம் செய்திகள்தான் வெளிவருகின்றன. மற்றபடி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் என யாரும் அப்படியொரு தீர்மானத்தை இயற்றவே இல்லை.

அ.ம.மு.க கம்பெனியைச் சேர்ந்த சிலரே, ‘அ.தி.மு.க’ பெயரில் ஒரு கூட்டத்தை நடத்தி, இப்படியொரு தீர்மானத்தையும் இயற்றி, தவறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். எனவே இதுபற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.”

Also Read: கன்னியாகுமரி: ஆண் நண்பரிடம் பேசத் தடை; ஆத்திரத்தில் தந்தையை ஆள்வைத்துக் கொன்ற மகள்!

“அப்படியென்றால், ‘சசிகலாவுக்கு எதிராக’ தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தினர் இயற்றிய தீர்மானம் அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வந்திருக்கிறதா?”

“அ.தி.மு.க-வினர் கூட்டம் நடத்தியிருந்தால், அதுகுறித்த தகவல்கள் கட்சியின் தலைமைக் கழகத்துக்கு வந்திருக்கும். மற்றபடி, அ.தி.மு.க-வுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் நடத்திய கூட்டத்தைப் பற்றி நான் பதில் சொல்லத் தெரியவில்லை.

அ.தி.மு.க கட்டுக்கோப்பான கட்சி. அதனால்தான் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு 15 நாள்களுக்குள் தேர்தலை நடத்திமுடிக்கத் தயாராக இருக்கிறது. இப்படியொரு கட்டுக்கோப்பான கட்சி இந்தியாவிலேயே கிடையாது.”

sasikala Tamil News Spot
சசிகலா

“கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்து, மறைந்தும்போன புலவர் புலமைப்பித்தன் மீது கடைசிவரையிலும் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?”

புலவர் புலமைப்பித்தன் கட்சியை மீறிப் பேசியதாக வரலாறு எதுவும் கிடையாது. அந்த அளவு நல்ல மனிதர். ஆனால், அவர் சசிகலா ஆதரவு நிலை எடுத்துவிட்டதாக ஊடகங்கள் வழியேதான் செய்திகள் பரவின. மற்றபடி உண்மையிலேயே அவர் அப்படிச் சொன்னாரா, இல்லையா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.”Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *