Share on Social Media


தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து வகை மீன்பிடி படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத படகுகள் அனைத்தும் மீன்துறை பணியாளர்களால் நேரடியாக ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மீன்துறை பணியாளர்களால் இந்த ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இவ்வாறு ஆய்வுக்கு உட்படாத படகுகளுக்கு எரிபொருள் நிறுத்தம், பதிவு சான்றுகள் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உண்டு.

இந்த ஆண்டு மீன்பிடி படகுகளுக்கான கணக்கெடுப்பு நடத்த மீன்துறை அதிகாரிகள் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வந்தநிலையில் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்கு திடீரென்று கணக்கெடுப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பு நடத்தி குட்டையை குழப்பிவிடாதீர்கள், மீனவர்களின் ஓட்டு முக்கியமாக, கணக்கெடுப்பு முக்கியமா என்று ஆளும் கட்சி தரப்பு கேள்வி எழுப்பியதே இதன் பின்னணி என்று கூறப்படுகிறது. கடந்த முறை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஏராளமானோருக்கு எரிபொருள் மானியம் நிறுத்தம் செய்யப்பட்டதும், திரும்ப கிடைக்க பெறாமல் இருப்பதும் மீனவர்கள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில் எல்லாம் தேர்தல் முடிந்து பார்த்துத்கொள்ளலாம் என்று கணக்கெடுப்புக்கு பெரிய முட்டுக்கட்டை ஒன்றை தூக்கி போட்டுள்ளார்களாம்.

* தொகுதி ஒன்று… கோஷ்டி மூன்று
ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இரு தரப்பாக பிரிந்து கிடக்கின்றனர். உட்கட்சி பூசல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து ஒருபுறமும், சிட்டிங் ஒன்றிய செயலாளர் மதிவாணன் மறுபுறமும் என தங்களுக்கு சீட் கிடைக்குமா என்ற மோதலை வேகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் திருவாடானை பகுதியில் ஜெயலலிதா பிறந்தநாளுக்கென அதிமுக பிரமுகர் கோடனூர் காளிமுத்து ஒரு போஸ்டர் ஒட்டி இருக்கிறார். இதில், ‘‘‘‘32 ஆண்டுகளாக கழகத்திற்காக எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி, பிரதிபலனும் ஏதிர்பார்க்காமல் நான் உழைத்தவன். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றவன். சட்டமன்றத்தை நோக்கி என் அரசியல் பயணம் தொடரும். தர்மம் வெல்லட்டும், அதர்மம் அழியட்டும்’’’’ என்று அச்சடித்துள்ளார். இது இரு கோஷ்டியினருக்கும் அதிர்ச்சியை தந்து, முன்றாவது ஒரு கோஷ்டி உருவாகி வருவதையும் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *