Share on Social Media


சென்னை : ‘மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள், வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அந்த பகுதி முழுதும் போதிய பாதுகாப்பு போட வேண்டும்’ என, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அனுப்பியுள்ள மனு: சட்டசபை தேர்தல் முடிந்துள்ள, 234 தொகுதிகளிலும், அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், பாதுகாப்பாக இருப்பதையும், எந்தவிதமான முறைகேடும் செய்ய முடியாது என்பதையும், உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அமைந்துள்ள பகுதிக்குள், வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த விதமான வாகனங்களையும், வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

‘வைபை’ இணைப்புகளை செயல் இழக்கச் செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை பகுதிக்கு செல்ல, அனுமதி பெற்றுள்ள நபர்களின் பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.பி.,க்கள் ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினர்.

குடும்பத்துடன் கொடைக்கானல் பயணம்

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து பிரசாரத்தில் இருந்ததாலும், ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடப்பதாலும், தற்போது ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். அதன்படி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள், 17 பேர், நேற்று காலை இரண்டு தனி விமானங்களில், மதுரை சென்றனர். அங்கிருந்து காரில் கொடைக்கானல் சென்றனர். ‘ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், கொடைக்கானலில் மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுப்பர்’ என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *