Share on Social Media

 கொரோனா அச்சுறுத்தலை கடந்து 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்(ஜூலை 23–ஆக. 8) நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடக்க இருந்த இப்போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தடைகளை தகர்த்து வழக்கமான உற்சாகத்துடன் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த விளையாட்டு திருவிழாவில் இந்தியா உட்பட  உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் சாதிக்க காத்திருக்கின்றனர். ஒலிம்பிக்கின் வரலாற்று நிகழ்வுகள் குறித்து வரும் நாட்களில் பார்ப்போம்.

பழங்கால ஒலிம்பிக் போட்டி கி.மு., 776 முதல் கி.பி., 393 வரை கிரீசில் உள்ள ஒலிம்பியாவில், கிரெக்க கடவுள் ‘ஜீயசை’ கவுரவப்படுத்தும் வகையில் நடந்தன. ஆண்கள் ஆடையில்லாமல் பங்கேற்க வேண்டும், வெறுங்காலில் ஓட வேண்டும், கிரேக்கர்களுக்கு மட்டும் அனுமதி, போட்டிகளில் பங்கேற்கவோ, பார்க்கவோ பெண்களுக்கு தடை என பல கட்டுப்பாடுகள் இருந்தன.

கிரேக்க மண்ணில் ரோமானியர்கள் ஆதிக்கம் துவங்கியதும், ஒலிம்பிக் அழியத் துவங்கியது. கி.பி., 393ல் ஒலிம்பிக் போட்டிக்கு ரோமானிய பேரரசர் தியோடசியஸ் தடை விதித்தார்.

மீண்டும் ஒலிம்பிக்

சுமார் 1500 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக் போட்டிக்கு புத்துயிர் கொடுத்தார் பிரான்ஸ் கல்வியாளர் பியரி டி கோபர்டின். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை 1893ல் நிறுவினார். இவரை நவீன ஒலிம்பிக்கின் தந்தை என்று அழைக்கின்றனர். ஒலிம்பிக் பிறந்த கிரீசில் 1896ல் முதலாவது நவீன ஒலிம்பிக்கை நடத்தினார். 1937ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது உடல் சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.  தனது இருதயம் ஒலிம்பியாவில் இருக்க வேண்டும் என விரும்பினார். இதன் படி ஒலிம்பிக் போட்டிக்கு  உயிர் கொடுத்த இவரது இருதயம் கிரீசில் உள்ள ஒலிம்பியாவில் புதைக்கப்பட்டது.

– இன்னும் வரும்

 

33

வில்வித்தை, பாட்மின்டன், டென்னிஸ், கால்பந்து, வாலிபால் உட்பட மொத்தம் 33 வகையான விளையாட்டு போட்டிகள், 50 பிரிவுகளில் நடத்தப்பட உள்ளன.

 

205

ஒலிம்பிக்கில் இம்முறை 205 நாடுகளை சேர்ந்த விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். அதிகபட்சம் 2016 ரியோ ஒலிம்பிக்கில் 207 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

 

497

டோக்கியோ ஒலிம்பிக்கில் 156 தங்கம், 158 வெள்ளி, 183 வெண்கலம் என மொத்தம் 497 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

 

10,000

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை காண 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 10,000 உள்ளூர் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

 

பளுதுாக்கும் ‘திருநங்கை’

நியூசிலாந்தை சேர்ந்தவர் லாரல் ஹப்பார்டு 43. திருநங்கையான இவர் பளுதுாக்குதல் போட்டியில் பங்கேற்று வருகிறார். இவர் போன்ற திருநங்கைகள் பெண்கள் பங்கேற்கும் போட்டிகளில் கலந்து கொள்ள ஒலிம்பிக் சங்கம் அனுமதி கொடுத்தது. இதையடுத்து ஒலிம்பிக்கில் களமிறங்கும் முதல் திருநங்கை என்ற பெருமை பெற உள்ளார் ஹப்பார்டு.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *