Share on Social Media

டோக்கியோ: ஒலிம்பிக் துவக்கவிழாவில் குறைந்த எண்ணிக்கையிலான இந்திய நட்சத்திரங்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். 

ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உட்பட 228 பேர் செல்கின்றனர். 

துவக்கவிழாவில் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங், குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம், இந்தியாவின் மூவர்ண கொடி ஏந்திச் செல்லவுள்ளனர். 

மறுநாள் குத்துச்சண்டை, வில்வித்தை, பெண்கள் ஹாக்கி போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது. இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக துவக்க விழாவில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டன் சார்பில் 376 பேர் வந்துள்ள நிலையில் 30 பேர் மட்டும் தான் துவக்க விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவும் இணைகிறது. இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜிவ் மேத்தா கூறியது:

கொரோனா நேரத்தில் நமது வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, துவக்கவிழாவில் பங்கேற்கபவர்கள் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளோம். யார் யார் செல்வர் என்ற விபரம் இன்று வெளியிடப்படும். மற்றபடி ஒவ்வொரு நாட்டில் இருந்தும் குறைந்தது 6 பயிற்சியாளர்கள், அதிகாரிகள் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மறுநாள் போட்டியில் பங்கேற்க உள்ளவர்கள் துவக்கவிழாவை தவிர்க்கும் படி ‘அட்வைஸ்’ செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

2032ல் பிரிஸ்பேனில்

அடுத்த இரு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் (2024), லாஸ் ஏஞ்சல்சில் (2028) நடக்கவுள்ளன. தொடர்ந்து 2032 ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடக்கும். கடைசியாக 2000 ல் சிட்னியில் போட்டி நடந்தது. 32 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஆஸ்திரேலியாவில் ஒலிம்பிக் நடக்கவுள்ளது. 

பிரேசில் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்து, சாப்ட்பால் போட்டிகள் நேற்று துவங்கின. சிலி அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் இங்கிலாந்து 2–0 என வென்றது. பிரேசில் அணி சீனாவை 5–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதில் பிரேசிலின் மார்டா 2 கோல் அடித்தார். இதையடுத்து தொடர்ந்து ஐந்து ஒலிம்பிக்கில் கோல் (மொத்தம் 12) அடித்த முதல் வீராங்கனை என சாதனை படைத்தார். 

டேபிள் டென்னிசில் கடினம்

டேபிள் டென்னிஸ் அட்டவணை வெளியானது. ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ராவுக்கு முதல் சுற்று எளிதாக உள்ளது. கலப்பு இரட்டையரில் 62 வது இடத்திலுள்ள மணிகா, சரத் கமல் ஜோடி, முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்–3’ ஜோடியான, சீன தைபேயை எதிர்கொள்கிறது.

கொரோனா பிடியில்

ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஏற்கனவே நான்கு வீரர்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் டோஷிரோ முடோ கூறுகையில்,‘‘கொரோனா பாதிப்பு அதிகரிப்பது உண்மை. இப்போதைக்கு எதையும் கணிக்க முடியாது. கடைசி நேரத்தில் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்பு உள்ளது,’’என்றார்.

Advertisement

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *