Share on Social Media

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனஅழுத் தத்துடன் விளையாட வேண்டாம். முழு திறமையை வெளிப்படுத்துங்கள். அது போதும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவில் இருந்து 126 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ம் தேதி டோக்கியோ புறப்படுகிறது.

இதை முன்னிட்டு இந்திய வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று அவர்களுடன் கலந்துரையாடினார். இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் நிஷித் பிரமானிக், சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

முதல்முறையாக ஒலிம்பிக் போட்டியில் அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரையும் எனது வீட்டுக்கு அழைத்துப் பேச விரும்பினேன். ஆனால் கரோனா பிரச்சினை காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு உங்களை நேரில் சந்திப்பேன்.

கரோனாவால் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு ஒலிம்பிக் போட்டியும் விதிவிலக்கு அல்ல. டோக்கியோ ஒலிம்பிக்கில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டோக்கியோவில் நீங்கள் வித்தியாச மான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த நேரத்தில் ஒட்டுமொத்த நாடும் உங்களை வாழ்த்துகிறது, உற்சாகப்படுத்துகிறது. 135 கோடி இந்தியர்களின் ஆசி உங்களுக்கு இருக்கிறது. கரோனா காலத்திலும் இந்திய வீரர், வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதே பாணியில் ஜப்பானிலும் உங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.

போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனஅழுத்தத்துடன் விளையாட வேண்டாம். உங்களது முழு திறமையை வெளிப்படுத்துங்கள். அது போதும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தீபிகா குமாரி, சானியா மிர்சா, மேரி கோம் உட்பட 15 வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

அம்பு மூலம் மாங்காய்

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பிரதமரிடம் கூறும்போது, “ஆரம்ப காலத்தில் அம்பு எய்து மாங்காய் பறிப்பேன். அதுதான் எனது முதல் தொடக்கம். பிறகு மூங்கிலில் தயாரிக்கப்பட்ட வில்லில் எனது பயிற்சியை தொடங்கினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகே நவீன வில் கிடைத்தது. ஒலிம்பிக்கில் எனது முழு திறமையையும் வெளிப்படுத்த தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்தார்.

வில்வித்தை வீரர் பிரவீண் குமார் ஜாதவ் பிரதமரிடம் பேசும்போது, “விளையாட்டு துறைக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு தொழிலாளியாக வாழ்க்கை நடத்தி இருப்பேன். விளையாட்டு எனது வாழ்க்கையை உயர்த்தியது. எனக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அப்போதெல்லாம் என்னை நானே உற்சாகப்படுத்தி முன்னேறி செல்வேன்” என்றார்.

ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா பிரதமரிடம் பேசியபோது, “ஈட்டி எறியும் விளையாட்டில் சிறப் பாக செயல்பட்டதால் இந்திய ராணுவத்தில் பணி கிடைத்தது. எனது விளையாட்டுக்கு ராணுவம் பக்கபலமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த் பிரதமரிடம் பேசும்போது, “எனது குடும்பம் பெரிது. அன்றாடம் சாப்பாடு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். எனது விளையாட்டு, பணியின் காரணமாக வீட்டின் பொருளாதாரம் மேம்பட்டிருக்கிறது. எனது ஒரே குறிக்கோள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது மட்டுமே. கண்டிப்பாக பதக்கம் வெல்வேன்” என்றார்.

சச்சினை நினைவுகூர்ந்த பிரதமர்

குத்துச்சண்டை வீரர் ஆசிஷ் குமார் பிரதமரிடம் கூறும்போது, “எனது குடும்பம் விளையாட்டு பின்னணி கொண்டது. எனது தந்தை கபடி வீரர். குத்துச்சண்டை விளையாட்டு போட்டி மீதான ஆர்வத்தால் அந்த விளையாட்டில் கவனம் செலுத்தினேன். கடந்த 25 நாட்களுக்கு முன்பு எனது தந்தை இறந்துவிட்டார். ஆனால் எனது குடும்பம் எனக்கு பக்கபலமாக உள்ளது. எனது தந்தையின் கனவை நிறைவேற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறேன்” என்று தெரிவித்தார்.

ஆஷிஷ் குமாரிடம் பிரதமர் பேசியபோது, “தந்தையை இழந்தபோதும் மனம் தளராமல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் உங்களை பாராட்டுகிறேன். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் உங்களை போன்ற நிலைமை ஏற்பட்டது. அவர் தனது விளையாட்டின் மூலம் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்” என்று தெரிவித்தார்.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பேசும்போது, “என்னை விட்டு பிரிய எனது பிள்ளைகளுக்கு மனமில்லை. நான் நாட்டுக்காக விளையாட செல்கிறேன் என்று பிள்ளைகளிடம் பெருமிதமாக கூறினேன். குத்துச்சண்டை வீரர் முகமது அலி எனது ஹீரோ. அவரது பாணியில் ஹூக் செய்து எதிரியை வீழ்த்துவேன்” என்று தெரிவித்தார்.

பி.வி.சிந்துவுடன் ஐஸ்கிரீம்

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரது பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது தொலைக்காட்சிக்கு சிந்து முன்னர் அளித்த பேட்டியை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அந்த பேட்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனது பயிற்சியாளர் கோபிசந்த் ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதிக்கவில்லை என்று சிந்து வருத்தத்துடன் கூறியிருந்தார். இதை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, ஒலிம்பிக் போட்டியை நிறைவு செய்து நாடு திரும்பிய பிறகு உங்களோடு அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் என்று உறுதி அளித்தார். வீரர், வீராங்கனைகள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே விளையாட்டில் சாதனைகளை படைக்க முடியும் என்றும் பிரதமர் அறிவுரை கூறினார்.

இளவேனிலிடம் பாசம் காட்டிய பிரதமர்

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவன் பிரதமரிடம் பேசியபோது, “ஆரம்ப காலத்தில் தடகள போட்டியில் ஆர்வம் காட்டினேன். ஜூடோ விளையாட்டில் ஈடுபட்டேன். அதன் பிறகுதான் துப்பாக்கி சுடும் விளையாட்டில் கவனம் செலுத்தினேன். அந்த விளையாட்டு எனக்கு பிடித்திருந்தது. அதனால் சாதனை படைக்க முடிந்தது. எனது குடும்பமும் கல்லூரியும் எனக்கு பக்கபலமாக இருந்தன” என்று தெரிவித்தார்.

இளவேனில் வாலறிவன் குஜ ராத்தின் அகமதாபாத், மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்த தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதன்காரணமாக இளவேனிலுடன் பிரதமர் அதிக பாசத்துடன் பேசினார்.

சானியா மிர்சா கருத்து

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிரதமரிடம் பேசும்போது, “ஒலிம்பிக்கில் நான் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ஏராளமானோர் விரும்புகின்றனர். இதற்காக எவ்வித மனஅழுத்தத்துக்கும் ஆளாக மாட்டேன். ஒலிம்பிக்கில் எனது முழு திறமையை வெளிப்படுத்துவேன்” என்று கூறினார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிரதமரிடம் பேசும்போது, “ஒலிம்பிக் போட்டியில் 4-வது முறையாக பங்கேற்க உள்ளேன். என் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. டென்னிஸ் விளையாட்டுக்கு அதிக வீரர், வீராங்கனைகள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். கடினமாக உழைத்தால் விளையாட்டில் சாதனை படைக்க முடியும்” என்று தெரிவித்தார்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *